Breaking News

அர்ஜென்டினாவை தாண்டியும் கொண்டாடப்படும் நாயகன்.. கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் மாரடோனா!

உலக கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி, நெய்மர், எம்பாப்ஃபே போன்ற எத்தனையோ ஸ்டார்கள் தற்போது இருந்து வந்தாலும், கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் அர்ஜென்டினா அணியின் ஜாம்பவன் டீகோ மாரடோனா என்றால் அது மிகையில்லை. மரடோனா 1986 இல் அர்ஜெண்டினா அணிக்கு கோப்பை பெற்று கொடுத்தாலும், அது அர்ஜெண்டினாவுக்கு முதல் கோப்பை அல்ல. 1978 ஆம் ஆண்டே கோப்பையை வென்றது அர்ஜெண்டினா அணி. இருந்தாலும் ஏன் மரடோனா இவ்வளவு கொண்டாடப்படுகிறது. அர்ஜெண்டினாவை தாண்டியும் உலகம் முழுவதும் அவருக்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள். எவ்வளவோ சர்ச்சைகள் அவரை சுற்றி சுழன்ற போது தவிர்க்க முடியாத மக்கள் போற்றும் கால்பந்தட்ட சூப்பர் ஸ்டாராக அவர் இன்றளவும் திகழ்வது எப்படி?. அதற்கு காரணம் என்ன விரிவாக பார்க்கலாம்... 

இளமை பருவம்

டீகோ அர்மேண்டோ மரடோனா 30 அக்டோபர் 1960 ஆம் ஆண்டு பிறந்தார். இளம் வயது முதலே கால்பந்து விளையாட்டின் மீது பற்று கொண்ட மாரடோனா, தனது 10 வது வயதில் விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு திறமையாக வீரராக மாரடோனா கண்டறியப்பட்டார். இதையடுத்து லாஸ் சிபோலிடாஸ் அணியின் முக்கிய உறுப்பினராக மாறிய இவர், 12 வயது சிறுவனாக இருந்தபோது முதல் டிவிஷன் போட்டியின் இடைவேளை நேரங்களில் பந்தைக் கொண்டு பார்வையாளருக்கு தனது தனித்திறமையை செய்து காட்டினார். இதைத் தொடர்ந்து அர்ஜென்டினா ஜூனியர்ஸ், போகா ஜூனியர்ஸ், பார்சிலோனா, சீவில்லா, நியூவெல்ஸ் ஒல்ட் பாய்ஸ் மற்றும் நப்போலி போன்ற கிளப் அணிகளுக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

image

சர்வதேச போட்டிகளும் சாதனைகளும்

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக விளையாண்டு 91 கோல்கள் அடிக்க காரணமாக இருந்ததோடு 34 கோல்களையும் அடித்துள்ளார். 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்து தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலகக் கோப்பை பெற காரணமாக இருந்த மாரடோனா நான்கு பிஃபா உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார்,

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக தங்கப் பந்து விருதையும் பெற்றுள்ளார். 1986 ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற காரணமாக இருந்த இவர் அடித்த இரண்டு கோல்கள் இரண்டு வேறுபட்ட காரணங்களுக்காக கால்பந்து வரலாற்றில் இடம் பெற்றது.

image

பரபரப்பான இந்த போட்டியில் மாரடோனா கைகளால் முதல் கோலை அடித்தார். இதற்கு நடுவர் எந்த தண்டணையும் கொடுக்காததால் அந்த கோல் 'கடவுளின் கை' என்று அறியப்பட்டது, அதேபோல் 60 மீட்டர் தொலைவில் இருந்து இவர் அடித்த இரண்டாவது கோல் சிறந்த கோலாக கால்பந்து ரசிகர்களால் பாராட்டைப் பெற்றது.

சறுக்கலும் சர்ச்கைகளும்

கால்பந்து விளையாட்டு வீரர்களில் சர்ச்சைகளில் அதிகம் சிக்கிக் கொள்ளும் நபரான மாரடோனா இத்தாலியில் நடைபெற்ற போதைப் பொருள் சோதனையில் கோக்கைன் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த 1991 ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து 15 மாதங்கள் பிஃபா தடைவிதித்தது. இதையடுத்து எபெட்ரின் போதைப் பொருளை பயன்படுத்தியதற்காக 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த 1997 ஆம் ஆண்டு தனது 37 வது பிறந்தநாள் முதல் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்ற மாரடோனா கொக்கைன் பயன்படுத்தியதால் மோசமான உடல்நிலை மற்றும் அதிகப்படியான உடல் எடையால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து 2005 ஆம் ஆண்டு அவரது வயிற்றில் செய்த அறுவை சிகிச்சையால் உடல் எடை கூடுவதை தடுக்க முடிந்தது. கொக்கைன் பழக்கத்திலிருந்து விடுபட்ட பிறகு அர்ஜென்டினா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த இவர் மிகவும் பிரபலமானார்.

image

இவரது வெளிப்படையான பேச்சு, மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தாலும், நிருபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுடன் சர்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து 2008 ஆம் ஆண்டு அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராக பதவியேற்றார். ஸ்காட்லாந்திற்கு எதிராக முதன் முறையாக நடைபெற்ற போட்டியில் மரடோனா அர்ஜென்டினா அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றினார். இந்த போட்டியில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

image

அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர்

தேசிய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற பின்பு, பொலிவியாவுடனான போட்டியில் 6-1 என்ற கோல்கணக்கில் தோல்வியுற்றது. 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் மட்டும் மீதமிருந்த நிலையில், அர்ஜென்டினா ஐந்தாம் இடத்தில் இருந்தது, ஆனால் கடைசி இரண்டு போட்டிகளில் கிடைத்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

அர்ஜென்டினா அணி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்ற பிறகு, நடைபெற்ற பத்திரிகையாளர் நேரடி சந்திப்பில் 'சக் இட் அண்ட் கீப் ஆன் சக் இட்' என்று பத்திரிகையாளர்களிடம் மாரடோனா சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மாரடோனாவின் இந்த செயலுக்காக இரண்டு ஆண்டுகள் கால்பந்தில் ஈடுபடத் தடை விதித்து பிஃபா உத்தரவிட்டது.

மரடோனா அரசியல் பார்வை 

சமூக சமத்துவத்தை ஆதரிக்கும் இடதுசாரிகளை ஆதரிப்பது தான் மாரடோனா முன்னெடுத்த அரசியல். பிரபலங்களையும் அரசியலையும் தனித்தனியே பிரிக்க முடியாது. சமயங்களில் சிலர் அமைதியாகவே  தங்களது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்காமல் நகர்ந்துவிடுவார்கள். ஆனால் மாரடோனா அதிலிருந்து மாறுபட்டவர். சேகுவாராவை வலது கையிலும்,  ஃபிடல் கேஸ்ட்ரோவை இடது காலிலும் பச்சை குத்தி வைத்துள்ளார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மாரடோனா குரல் கொடுத்துள்ளார். 2005 இல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்துள்ளார். அதன் காரணமாகவே கடவுளின் தேசமான கேரளத்தில் கால்பத்தாட்ட கடவுளான மாரடோனாவுக்கு தனித்துவமிக்க ரசிகர் கூட்டமே உள்ளது. ஏழை மக்களுக்காகவும், ஓடுக்கப்படுகின்ற நாடுகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார்.. அவரது ஆட்டமும் ஒரு கவிதை போல் அவ்வளவு அழகாக இருக்கும் என்று சொல்வார்கள்.

image

மெஸ்ஸியை உருவாக்கியவர்

மாடர்ன் டே கால்பந்தாட்ட மாவீரர் என போற்றப்படும் லியோனல் மெஸ்ஸியை உருவாக்கியவர் மாரடோனா தான். அவரை மெஸ்ஸியின் ராஜ குரு என்று சொல்லலாம். ‘மாரடோனா விளையாடிய வீடியோவை பார்த்து தான் கால்பந்து விளையாட பழகினான்’ என மெஸ்ஸியின் அப்பா ஜார்ஜ் சொல்லியதே அதற்கு சான்று. 

image

மெஸ்ஸியை புகழ்ந்துள்ள மாரடோனா சமயங்களில் விமர்சிப்பதும் உண்டு. இருவரும் அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியை சர்வதேச அளவில் தூக்கி சுமந்த கொம்பன்கள். 

image

பீலே அதிக கோல் அடித்தவராக இருக்கலாம்.. ஆனால், மக்களால் கொண்டாடப்பட்ட கால்பந்தாட்ட வீரராக திகழ்பவர் மரடோனா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/DCrVs2B
via

No comments