Breaking News

நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்து கெத்தாக நெம்பர் 1 இடத்தை பிடித்தது இந்திய அணி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஒற்றை ஆளாக இந்திய அணிக்கு பயம் காட்டிய கான்வே!

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போதும், கடைசி விக்கெட் வீழும் வரை நியூசிலாந்து வீரர்கள் இந்திய அணிக்கு பயம் காட்டிக் கொண்டே தான் இருந்தனர். குறிப்பாக டெவின் கான்வே களத்தில் இருந்ததை இந்திய வீரர்களுக்கு சற்றே களக்கம் இருக்கவே செய்தது. அப்படியொரு அதிரடியை காட்டியிருந்தார் கான்வே. இத்தனைக்கும் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே அதுவும் ரன் கணக்கை துவங்குவதற்கு முன்பே நியூசிலாந்து முதல் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டது.

image

அப்படி இருந்தும் தனி ஒருவனாக சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து ரன் ரேட்டை இறுதிவரை தக்க வைத்தார் கான்வே. விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் தனி ஆளாக போராடினார். நிக்கோல்ஸ் மட்டும் 42 ரன்கள் வரை தாக்குப்பிடித்தார். 41 பந்துகளில் அரைசதம் விளாசிய கான்வே, 83 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். ஆட்டத்தின் 32 ஆவது ஓவர் வரை அவர் களத்தில் இருந்தார். 12 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களை விளாசிய அவர் 100 பந்துகளில் 138 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி நேரத்தில் மீண்டும் பிரேஸ்வெல் - சாண்ட்னர் இணை!

இந்திய அணிக்கு எதிராக தங்களது அதிரடியாக ஆட்டத்தால் முத்திரை பதித்தவர்கள் மிச்செல் பிரேஸ்வெல் மற்றும் மிட்செல் சாண்ட்னர். இந்த ஜோடி இந்த முறையும் சிறிது நேரம் நீடித்தது. பிரேஸ்வெல் 26 ரன்களும், சாண்ட்னர் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சாண்ட்னர் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். இருவரை தலா 3 பவுண்டரிகளை அடித்தனர். இவர்களின் இந்த ரன் சேர்ப்பால் தான் நியூசிலாந்து அணி 295 ரன்கள் வரை எடுத்தது.

image

விக்கெட்டுகளை அள்ளிய ஷர்துல் தாக்கூர் - குல்தீப்

நியூசிலாந்து அணி முதல் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்துவிட்ட போதும் இரண்டாவது விக்கெட் 106 ஆவது ரன் எடுத்த போதுதான் வீழ்ந்தது. மூன்றாவது விக்கெட் 184 ரன்களில் வீழ்ந்தது. நிக்கோல்ஸ் விக்கெட்டை குல்தீப் யாதவும், டேரி மிட்செல் விக்கெட்டை ஷர்துல் தாக்கூரும் வீழ்த்தினர். 26 ஆவது ஓவரை வீசிய ஷர்துல் அடுத்தடுத்த பந்துகளில் டேரி மிட்செல் மற்றும் லாதம் விக்கெட்டுகளை சாய்த்தார். டெவென் கான்வே விக்கெட்டை உம்ரான் மாலிக் வீழ்த்த, அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்த்த பிரேஸ்வெல் விக்கெட்டை குல்தீப் யாதவ் சாய்த்தார். ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். சாஹல் இரண்டு விக்கெட் எடுத்தார். எல்லா பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி வழங்கினர். வாஷிங்டன் சுந்தர் 6 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 49 ரன்களையும் விட்டுக் கொடுத்தார்.

image

நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று ஏற்கனவே தொடரை வென்று விட்டது இந்திய அணி. இந்நிலையில், இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியையும் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது.

நெம்பர் 1 இடத்தில் இந்திய அணி

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை வெற்றி பெற்ற நிலையில், ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. 113 புள்ளிகள் இருந்த இங்கிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி 114 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி 112, நியூசிலாந்து 111 புள்ளிகளுடன் மூன்றாவது, நான்காவது இடத்தில் உள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/rLS9aBo
via

No comments