`ஜெயிலர் படத்தில் நீங்க நடிக்கிறீங்க...’ - போலி போஸ்டரை அனுப்பி மாடல் அழகியிடம் ரூ.8.5 லட்சம் மோசடி

மும்பையில் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் நடித்திருப்பவர் சன்னா சூரி. மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு 2007-ம் ஆண்டு மிஸ் மகாராஷ்டிரா பட்டம் வென்றவர். சன்னாவிடம் இரண்டு பேர் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறி ரூ.8.5 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர்.

இது குறித்து அவர் மும்பை போலீஸில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, ``கடந்த ஆண்டு பியூஸ் ஜெயின் என்பவர் என்னுடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். அவர் என்னிடம் நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படம் உட்பட சில படங்களுக்கு புதுமுகம் தேவைப்படுகிறது என்று தெரிவித்தனர். அதோடு போலீஸ் உடையில் ஒரு வீடியோ எடுத்து அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.

சன்னா

உடனே நானும் போலீஸ் அதிகாரி போல் வீடியோ ஒன்றில் நடித்து அதனை அனுப்பி வைத்தேன். அடுத்த சில நாள்களில் நடிகர் ரஜினிகாந்த்துடன் ஜெயிலர் படத்தில் நான் இருப்பது போன்ற ஒரு போஸ்டரை பியூஸ் ஜெயின் எனக்கு அனுப்பி வைத்தார். மகிழ்ச்சியில் அந்த போஸ்டரை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தேன். அதோடு படத்தில் அறிமுகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தேன். அதோடு புஸ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் ஜெயின் ஆசை வார்த்தைகள் கூறினார். மேலும் சமீர் என்பவரை அறிமுகம் செய்து இயக்குநர் என்று கூறி கூறினார். அந்த நபரும் எனக்கு மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக தெரிவித்தார். இறுதியாக சில ஒப்பந்த ஆவணங்கள் மற்றும் துபாய் செல்ல டிக்கெட் போன்றவற்றை ஜெயின் அனுப்பி வைத்தார். அதோடு படப்பிடிப்புக்கு பாரிஸ் செல்லவேண்டும் என்றும், அதற்கு விசா கட்டணம் செலுத்தவேண்டும் என்றும்கூறி அவற்றை அனுப்பிவிட்டு இதற்கான செலவாக ரூ.8.48 லட்சத்தை அனுப்பி வைக்கும்படி எனது தாயார் வனிதாவிடம் ஜெயின் கேட்டுக்கொண்டார். எனது தாயாரும் ஜெயின் கேட்ட தொகையை கொடுத்தார்.

பணம் கையிக்கு கிடைத்தவுடன் சன்னா துபாய் செல்லவேண்டிய விமானம் தாமதமாவதாக கூறி ஜெயின் மெசேஜ் அனுப்பினார்” என்று சன்னா தெரிவித்தார்.

இது குறித்து சன்னாவின் தாயார் வனிதா கூறுகையில், ``விமானம் தாமதமாவதாக தகவல் கிடைத்தவுடன் ஜெயினை தொடர்பு கொண்டு பேசினேன். படப்பிடிப்பு தாமதமாவதாக தெரிவித்தார். அதோடு புதிய டிக்கெட் அனுப்புவதாகவும் தெரிவித்தார். கடந்த நவம்பர் 29-ம் தேதி ஜெயிலர் படத்தின் உதவி இயக்குநர் என்று ஒருவர் என்னை தொடர்பு கொண்டு ஜெயிலர் படத்தின் போலி போஸ்டரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன்னா பகிர்ந்திருப்பதாகவும், அதனை உடனே அகற்றும்படியும் கேட்டுக்கொண்டார்.

மோசடி

உடனே ஜெயிலர் படத்தில் நடிக்க ஜெயினுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவித்தேன். உடனே ஜெயின் என்ற பெயரில் யாரும் ஜெயிலர் பட அணியில் இல்லை என்று தெரிவித்தார். உடனே நான் ஜெயினுடன் இது தொடர்பாக கேட்டு சண்டையிட்டேன். ஆனால் ஜெயின் சரியான பதில் கொடுக்கவில்லை. இதையடுத்து போலீஸில் புகார் செய்துள்ளேன்” என்று குறிப்பிட்டார். இது குறித்து போலீஸார் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சன்னாவோ அல்லது அவரது தாயாரோ பியூஸ் ஜெயினையோ அல்லது அவனை கூட்டாளியையோ பார்க்கவே இல்லை. வாட்ஸ்அப் காலில் மட்டுமே அவர்களுக்கு பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. சன்னாவின் தாயார் வனிதா பியூஸ் ஜெயினுக்கு பணம் அனுப்பிய வங்கி கணக்கு விபரங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர். வனிதா டிபன் சென்டர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/nD1WRis

No comments