Breaking News

'AvataRRR' மொமன்ட் கொடுத்த கேமரூன்.. பூரித்துப்போன ராஜமெளலி.. என்ன சொன்னார் ஜேம்ஸ்?

தென்னிந்திய திரைப்படமான ஆர்.ஆர்.ஆருக்கு உலக சினிமா அரங்கில் மிகப்பெரிய வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்து வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் அண்மையில் நடைபெற்றது. ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் கோல்டன் குளோப் விருதை பெற்றிருந்தார் எம்.எம்.கீரவாணி. இது ஆஸ்கருக்கு நிகரான விருதாகவே கருதப்பட்டு வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்ட் என்ற விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு பட மற்றும் பாடல் பிரிவிலும் ஆர்.ஆர்.ஆர். படம் விருதை வாங்கி குவித்திருக்கிறது. இந்த விழாவின் போது ராஜமெளலி, கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் பங்கேற்றிருந்தார்கள்.

அப்போது ஹாலிவுட்டின் ஜாம்பவான்களான டைட்டானிக், அவதார் படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் மற்றும் எண்ணற்ற ஆஸ்கர் விருதுகளை வாங்கி குவித்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஆகியோரை சந்தித்திருக்கிறார்கள் ராஜமெளலியும் கீரவாணியும். ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜேம்ஸ் கேமரூன் இரண்டு முறை பார்த்திருக்கிறாராம்.

ஆர்.ஆர்.ஆர். படத்தை பார்த்து வியந்துப்போன கேமரூன் ராஜமெளலியை வெகுவாகவே பாராட்டியிருக்கிறார். மேலும் சில அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார். அதில், “ஒரு படம் உருவாக்கப்படுவதற்கு பின்னணியில் இருக்கும் அனைத்தும் எப்படி காட்டுத்தனமாக இருக்க வேண்டும் என நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியும். ஏனெனில் திரைப்படத்தின் பின்னணியில் இருக்கும் அனைத்து வேலைகளும் உங்களுடையதாக இருக்க வேண்டும்.

படம் பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்பவர்கள் ஆச்சர்யப்பட வேண்டும். அது உங்களுக்கான போனஸாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சியை தற்போது உலகமே சந்தித்துக் கொண்டிருக்கிறது.” இப்படியாக கேமரூன் தெரிவித்திருக்கிறார்.

கேமரூன் மற்றும் ராஜமெளலியின் இந்த உரையாடல் ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜேம்ஸ் கேமரூன் RRR படம் பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்துப்போனதால் அவரது மனைவி சூசிக்கு பரிந்துரைத்து இருவரும் சேர்ந்து மீண்டும் படம் பார்த்திருக்கிறார்கள்.

நீங்கள் எங்களுடன் 10 நிமிடங்கள் செலவிட்டதை மறக்கவே முடியாது. நீங்கள் கூறியதை போல உலகின் உச்சத்தில் இருக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஸ்டீவன் ஸ்பீர்பெர்க்கை சந்தித்திருந்த ராஜமெளலி, “இப்போதுதான் கடவுளை பார்த்தேன்” என பூரித்துப்போய் அவருடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்து ட்வீட் போட்டிருந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/36d5xbP

No comments