Breaking News

"ஆஸ்திரேலிய அணியே ஒரு டூப்ளிகேட் தான்; 10 போட்டி என்றாலும் தோற்பார்கள்" - ஹர்பஜன் சிங்

”ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தத் தொடர் 10 போட்டிகளைக் கொண்டிருந்தாலும், 10 போட்டிகளையுமே இந்தியா வெல்லும்” என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், “அஸ்வினின் பந்துவீச்சைச் சமாளிப்பதற்காக அவரைப் போன்று பந்துவீசக்கூடிய ஒருவரைத் தேடிப்பிடித்து, வலைப்பயிற்சியில் ஈடுபட்டது ஆஸ்திரேலியா. ஆனால், ஆஸ்திரேலிய அணியே ஒரு ’நகல்’ (டூப்ளிகேட்) என நான் நினைக்கிறேன். எதிர்மறையான விஷயங்களில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தும் மனநிலையைக் கொண்டிருக்கின்றனர். மைதானம் பற்றியும், பந்துவீச்சாளர்கள் பற்றியும் நினைத்து நிறைய குழப்பமடைந்ததால், பந்துவீசுவதற்கு முன்னதாகவே அவர்கள் தோற்றுவிட்டனர்.

image

அவர்களின் ஆட்டத்தைப் பார்த்தால் போட்டிக்கு தயாராகி வந்ததுபோலவே தெரியவில்லை. விக்கெட்டை எப்படி இழப்பது என்பதற்கு பயிற்சி பெற்றதுபோலவே தெரிகிறது. இந்த தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும். அதேநேரத்தில் இது, 10 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தாலும், இந்தியா 10-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும். அந்த அளவிற்கு பலவீனமாக சிந்திக்கின்றனர். மைதானத்தில் பிரச்சினை இருந்தால் அதனை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். ஆனால் ஓய்வறையிலேயே சோர்ந்துவிடுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் குடும்ப காரணங்களால் சிட்னி சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாள்களில் இந்தியா திரும்புவார் என்றும், இந்தூரில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட்டில் பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், பேட் கம்மின்ஸ் மீண்டும் வராத பட்சத்தில் மூன்றாவது டெஸ்டில் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பேட் கம்மின்ஸ் நாடு திரும்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

image

முன்னதாக இந்தியாவில் நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடரில், இந்திய அணி 2இல் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. நாக்பூரில் (பிப்.9) நடைபெற்ற முதல் போட்டியும், டெல்லியில் (பிப்.17) நடைபெற்ற இரண்டாவது போட்டியும், மூன்று நாட்களில் முடிவுற்றதுடன், இரண்டு போட்டிகளிலும் சுழல் தாக்குதலில் நிலைகுலைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் பங்கேற்பதற்கான புள்ளி சதவிகிதத்தையும் பெற்றுள்ளது. அடுத்த போட்டியில் ஜெயித்தால், இந்த இறுதிச்சுற்றில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு உண்டு. இவ்விரு அணிகளுக்கான 3வது டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 1ஆம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/5djcDz4
via

No comments