Breaking News

"சிலர் இரவும் பகலும் தங்கம் கடத்துவதில் கவனமாக இருக்கின்றனர்!"- பினராயி அரசை மறைமுகமாகச் சாடிய மோடி

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரள மாநிலத்துக்கு வந்தார். கொச்சிக்கு வந்த அவர், கேரள பாரம்பர்ய வேட்டி, சட்டை, நேரியல் அணிந்து சாலை வழியாகச் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார். அப்போது, சாலை ஓரங்களில் கூடி நின்ற கட்சித் தொண்டர்களைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார். பின்னர் தனியார் கல்லூரியில் `யுவம் -2023’ என்ற பெயரில் இளைஞர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், "கேரளாவில் மாற்றத்தை ஏற்படுத்த வந்திருக்கும் இளைஞர்களுக்கு வணக்கம். ஒவ்வொரு விஷயமும், இளைஞர்களின் கருத்து சேரும்போதுதான் அழகாகிறது. 75-வது சுதந்திர தினத்தை நாம் அனுபவிக்கிறோம். நம் நாடு அம்ருத காலத்தின் யாத்திரையைத் தொடங்கியிருக்கிறது. இந்தக் காலத்தில் கேரள இளைஞர்கள் `யுவம்’ என்ற பெயரில் ஒன்று சேர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு கேரளத்திலுள்ள 99 வயது இளைஞரான, காந்தியவாதி அப்புக்குட்டனை நான் சந்தித்தேன். அவருக்கு அரசு பத்ம விருது வழங்கியிருக்கிறது. களரி குரு எஸ்.ஆர்.டி.பிரசாத், இயற்கை விவசாயி சிறுவயல் ராமன் என ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் படிக்கவேண்டியிருக்கிறது. விஞ்ஞானி நம்பி நாராயணனிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் நிறைய இளைஞர்கள் உண்டு. நாட்டின் பாரம்பர்ய அறிவைப் புதுப்பிக்கும் தன்மைக்காக ஆதிசங்கரர் கேரளாவிலிருந்து வந்தார். சித்தாந்தத்தில் புதுமையைப் புகுத்த ஸ்ரீநாராயண குரு போன்றவர்கள் அவதரித்தார்கள். சுதந்திரப் போராட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அந்தப் பாரம்பர்யத்தை பின்தொடர்ந்து, அவர்களின் ஆசையை நிறைவேற்ற நிறைய இளைஞர்கள் முன்வந்திருக்கிறீர்கள்.

கேரள பாரம்பர்ய உடையில் பிரதமர் மோடி

21-ம் நூற்றாண்டு பாரதத்தின் நூற்றாண்டு. நம் நாடு இளைஞர் சக்தியின் கேந்திரம். முன்பு நம் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது எனச் சொல்வார்கள். இன்று உலகத்தில் நாம் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். உலகத்தை மாற்றும் சக்தி நமக்கு உண்டு என இப்போது பேசுகிறார்கள். நமது ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டேண்ட்அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா குறித்து உலகம் வியந்து விவாதித்துக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவை மிகவும் பலமில்லாத நாடாகக் கணக்கிட்டனர். இன்று மிக வேகத்தில் முன்னேறும் நாடாக நம்மைக் கணக்கிட்டிருக்கின்றனர். அது இளைஞர்களால் சாத்தியமானது. இளைஞர்களாகிய உங்களிடம் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கான உறுதிமொழியை ஏற்று இளைஞர்கள் முன்னேறிவருகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அந்த ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் நாட்டின் இளைஞர்கள் முன்னேற்ற யாத்திரையில் பங்கெடுக்க முன்வந்திருக்கின்றனர்.

பாரதம், `ஜி20’ தலைமைப் பதவியை வகிக்கிறது. இந்த காலகட்டத்தில் நிறைய மாநாடுகள் நடக்கின்றன. கேரளாவிலும் நடந்திருக்கிறது. அதில் உங்கள் பங்களிப்பு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குமரகம், திருவனந்தபுரத்தில் நடந்த பல கூட்டங்களில் கேரள இளைஞர்கள் புரொஃபஷலினத்தை வெளிச்சம்போட்டுக் காட்டினீர்கள். கேரள மக்கள் சர்வதேச அளவில் நடக்கும் நிகழ்வுகளில் சேர்ந்து நிற்பவர்கள். கேரளாவில் நடக்கவிருக்கும் ஜி20 கூட்டங்களில் உங்கள் பங்களிப்பு முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களும், பா.ஜ.க-வும் ஒரே சிந்தனையில் இருக்கின்றன. இந்த அரசு இளைஞர்களுடன் சேர்ந்து செயல்படும் அரசு. இளைஞர்களின் வளர்ச்சியை மெய்யாக்கும் அரசு. முந்தைய அரசுகள் ஊழலால் அறியப்பட்டன. ஆனால் பா.ஜ.க அரசு ஒவ்வொரு துறையிலும் இளைஞர்களுக்காக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

பிரதமர் மோடியைக் காண சாலை ஓரத்தில் திரண்டு நின்றவர்கள்

பா.ஜ.க அரசு உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. விண்வெளியில் வாய்ப்பு, நெடுஞ்சாலைகள், ரயில்வே, வாட்டர் வே என அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்திவருகிறது. அதன் மூலம் தொழிற்சாலைகளை எளிதில் அமைக்க முடியும். தொழில் வளர்ச்சிக்காக இந்த அரசு செயல்பட்டுவருகிறது. கேரளா மீன்பிடித் தொழிலில் முக்கியப் பகுதியாக இருக்கிறது. கேராளாவில் மீன்பிடித் தொழிலுக்காக மத்திய அரசு 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது. மீனவர்களுக்கான தனி அமைச்சகம் ஏற்படுத்தியிருக்கிறோம். கேரள மாநிலம் இயற்கை வனப்புமிக்க சுற்றுலாத்தலம். கேரளத்தின் சுற்றுலாவை, இயற்கை அழகை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். உலக மக்களை கேரள சுற்றுலாவுக்கு அழைக்க வேண்டும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். ஆனால், கேரளா மாநிலத்தில் இளைஞர்களுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படுத்த மாநில அரசு முயலவில்லை. இங்கிருக்கும் இரண்டு கட்சிகள் இளைஞர்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. இங்கு ஒரு கட்சி கேரள இளைஞர்களின் எண்ணங்களைப் புறந்தள்ளிவிட்டு, தங்கள் சித்தாந்தத்தைப் புகுத்த முயல்கிறது. மற்றொரு கட்சி ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுகிறது.

கேரள மாநிலத்தின் பாரம்பர்ய மருத்துவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது. முன்னாள் பிரதமர் ஒருவர் கண் சிகிச்சைக்காக கேரளாவுக்கு வந்து அவருடைய கண்கள் குணமடைந்ததை நாம் அறிவோம். பாரம்பர்யக் கலை, கலாசாரமிக்க மாநிலம் கேரளா. மத்திய அரசு ஏற்றுமதியை ஊக்குவிக்கிறது. கேரளா மாநிலத்திலிருந்து மருத்துவத்தை உலகுக்கு ஏற்றுமதி செய்ய இங்கிருக்கும் இளைஞர்கள் விரும்புகிறார்கள். ஆனால், கேரளத்தில் வேறு விளையாட்டு நடக்கிறது. இங்கு சிலர் இரவும் பகலும் தங்கம் கடத்தல் குறித்து சிந்திக்கிறார்கள். கேரள இளைஞர்களிடம் இதை மறைத்துவைக்க முடியாது. கேரளாவில் அதிகாரத்தில் இருப்பவர்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை பந்தாடிக்கொண்டிருக்கிறார்கள். முன்பு மத்திய காவலர் பணிக்காக ஆங்கிலம், இந்தியில் மட்டுமே தேர்வு எழுத முடிந்தது.

இப்போது இந்தியாவின் 13 மொழிகளில் மத்தியப்படைத் தேர்வுகளை எழுத முடியும். வடகிழக்கு மாநிலங்கள், கோவா போன்ற மாநிலங்களில் மத, சமுதாயவேலிகளைக் கடந்து பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்தார்கள். அவர்கள் எல்லோரும் பா.ஜ.க-வின் செயல்பாடுகளை நேரடியாக அறிந்து அனுபவித்தவர்கள். அது போன்ற ஆதரவு கேரளாவிலும் உண்டாகும் என நம்புகிறேன்" என்றார்.

கேரளாவில் யு.ஏ.இ தூதரகம் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் பங்கிருப்பதாக முதல்வர் பினராயி விஜயனின் பெயரை ஸ்வப்னா சுரேஷ் கூறியிருந்தார். அதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது கேரள அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



from India News https://ift.tt/grvK1wG

No comments