``எத்தனை ரெய்டு நடத்தினாலும், 40 தொகுதிகளிலும் திமுக-வுக்குத்தான் வெற்றி!" - செந்தில் பாலாஜி
கரூர், திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் இறுதிப் போட்டியினை, தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்திர்வைவைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``பொதுவாக, வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வரும் சில நிறுவனங்கள் எல்லாம், நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது, தொடங்கப்பட்டு லாபகரமாக இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள். அவர்கள் முறையாக வருமான வரியும் செலுத்தி வருகின்றனர். அதையும் மீறி ஏதேனும் வரி செலுத்தப்படாத தொகை இருப்பின், அதையும் அந்த நிறுவனங்கள் செலுத்தத் தயாராகத்தான் இருப்பார்கள். தற்போது, நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையைக் கண்டு நான் அச்சப்படவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த நேரத்தில், திடீரென வருமான வரித்துறை சோதனை, எனது வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்டது.
அவர்களின் அப்போதைய நோக்கம், தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து நெருக்குதல் கொடுக்கப்பதுதான். அதேபோலத்தான், எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து, இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சோதனை முடிய இன்னும் மூன்று நாள்களுக்கு மேலாகும் எனக் கூறப்படுகிறது. சோதனையின் முடிவில் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டால், அதனை அந்த நிறுவனங்கள் வரியைச் செலுத்தி முறைப்படுத்திக் கொள்வார்கள். அதேபோல, வருமான வரித்துறை சோதனை முடிவில், அலுவலகங்களில் சீல் வைக்கப்படுவது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். அடுத்த நாள் சோதனையிட வேண்டிய சூழல் இருப்பின், சீல் வைத்துவிட்டு மீண்டும் அதனை அகற்றி சோதனையைத் தொடர்வார்கள். ஆனால், அதை ஊடகங்கள் பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன.
குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் பற்றி முக்கியமான ஒன்றை கூறி ஆக வேண்டும். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கவே தகுதி இல்லாதவர். எனக்கு வேண்டியவர்கள், அவர்களது நண்பர்கள் என செவி வழி செய்தியாக எனக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சோதனைகள் முடிந்த பிறகு, முழு விவரங்கள் தெரியவரும். சுவர் ஏறி குதித்து அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஒருகட்டத்தில், இரண்டு பெரிய பைகளைக் கொண்டு வந்ததன் காரணமாக, அங்கு இருந்தவர்கள் கேள்விகள் கேட்டு வாக்குவாதம் செய்திருக்கின்றனர். சரியான பதிலளிக்காத வருமான வரித்துறை அதிகாரிகளின் போக்கு காரணமாகவே அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வருமான வரித்துறை அதிகாரிகள் யார் வீட்டிலும் திடீரென்று, உள்ளே நுழையும்போது, அடையாள அட்டையைக் காண்பியுங்கள் என்று கேட்பது வழக்கம். கதவை தட்டும்போது, நீங்கள் யார் என கேட்டு கதவைத் திறப்பது வழக்கம். அந்த அடிப்படையில் மாவட்டக் காவல் அதிகாரி, தகவல் இல்லை எனக் கூறியதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ளாமல் விமர்சித்திருக்கிறார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு லாயக்கற்றவர். வேலுமணி போன்றவர்கள் வீட்டில் சோதனை நடைபெற்றபோது, கட்சிக்காரர்களை அங்கே கொண்டுவந்து குவித்து, மூன்று வேளை அவர்களுக்கு சாப்பாடு வழங்கி இடையூறு செய்ததுபோல், இங்கு யாரும் செய்யவில்லை. அதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் தி.மு.க-வினருக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. சொந்த தொகுதியிலேயே வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் ஜெயக்குமார். எண்ணற்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் வரும் நகைச்சுவை தொலைக்காட்சியைப்போல, காமெடியனாக அவர் அரசியலில் வந்து போய்க்கொண்டிருக்கிறார். அதனால், அவரது காமெடி கூற்றுக்கெல்லாம் நான் பதிலளிக்க விரும்பவில்லை. இதுமட்டுமல்ல, இன்னும் எத்தனை ரெய்டுகள் வந்தாலும் சந்திப்பேன். ஓராயிரம் சோதனைகளை நடத்தினாலும் சரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நலத்திட்டங்களினால் இந்த அரசு மிகப் பெரிய வரவேற்பினை மக்கள் மத்தியில் பெற்றிருக்கிறது. அதனால், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெறுவதை எத்தனை சோதனைகள் நடத்தினாலும் தடுக்க முடியாது" என்றார்.
from India News https://ift.tt/AOczqNZ
No comments