செஞ்சி: தலைமைக்கு பறந்த புகார்... அமைச்சர் மஸ்தான் தம்பியின் கட்சி பொறுப்பு பறிப்பு - நடந்தது என்ன?
தமிழ்நாடு அமைச்சரவையில், தற்போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக இருந்து வருபவர் செஞ்சி மஸ்தான். 1976 காலக்கட்டத்தில், தன்னை தி.மு.க-வில் இணைத்துக் கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கி, படிப்படியாக அடுத்தடுத்த கட்டங்களை அடைந்தவர், 1986 - 2016 காலங்களில் 5 முறை தொடர்ச்சியாக செஞ்சி பேரூராட்சி தலைவராக இருந்தார். இதனிடையே செஞ்சி பேரூர் கழக தி.மு.க செயலாளராகவும் இருந்து வந்திருக்கிறார்.
2014-ம் ஆண்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக அறிவிக்கப்பட்ட மஸ்தான், செஞ்சி பேரூர் கழக தி.மு.க செயலாளர் பொறுப்பில் தனது தம்பி காஜாநஜீரை அமர்த்தினாராம். அதனைத் தொடர்ந்து, 2016 மற்றும் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் செஞ்சியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு தொடர் வெற்றி பெற்ற மஸ்தான், 2021-ல் அமைச்சரானார். அண்மையில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது, செஞ்சி பேரூராட்சியில் தனது மகன் மொக்தியார் அலி மஸ்தானை களமிறக்கி வெற்றி பெற செய்த அவர்... தான், 5 முறை அலங்கரித்த செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் பதவியிலும் மகனை அமர்த்தி அழகுப்பார்த்தார். விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளராகவும் மொக்தியார் அலி மஸ்தானே இருந்து வருகிறார்.
இதுமட்டுமின்றி, அமைச்சர் மஸ்தானுக்கு உதவியாளராக இருந்து வரும் மருமகன் ரிஸ்வான், தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். அமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே, கட்சி பொறுப்புகள் அனைத்திலும் வியாபித்து இருந்தது கட்சி தொண்டர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில்தான், மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது சாராய வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் பாய்ந்த நிலையில்... திண்டிவனம் நகராட்சியின் 20-வது வார்டு தி.மு.க கவுன்சிலரின் கணவரும், பிரபல சாராய வியாபாரியுமான மரூர் ராஜா-வும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நபர், அமைச்சர் மஸ்தான் மற்றும் மகன், மருமகனிடம் நெருக்கமாக இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர் கட்சியினரிடமிருந்து கடும் கண்டனங்கள் வலுத்து வந்தன. இதனிடையே, அமைச்சர் மஸ்தானின் செயல்பாடுகள் குறித்தும், அவரது குடும்பத்தாரின் கட்சி பதவி ஆக்கிரமிப்பு குறித்தும் தலைமைக்கு புகார்களை அடுக்கியிருக்கின்றனர் ஆதங்கத்தில் திளைத்திருந்த உடன்பிறப்புகள். இந்த நிலையில்தான், அமைச்சர் மஸ்தானுடைய சகோதரர் காஜாநஜீரின் செஞ்சி பேரூர் கழக செயலாளர் பதவியை பறித்து அறிவிப்பு வெளியட்டிருக்கிறார் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன். மேலும், காஜாநஜீருக்கு பதிலாக கார்த்திக் என்பவர் பொறுப்பாளராக செயல்படுவார் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடையே பேசிய தி.மு.க-வினர் சிலர், "செஞ்சி பகுதியில் ரியல் எஸ்டேட் பிசினஸில் பெயர் போனவராக இருந்தவர்தான் இந்த காஜாநஜீர். இப்போது அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட கட்சி பொறுப்பு, அமைச்சர் மஸ்தானின் தீவிர ஆதரவாளரான கார்த்திக் என்ற கவுன்சிலரிடம் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எவ்வித மாற்றமும் நிகழவில்லை. அமைச்சரின் மகன் செஞ்சி பேரூராட்சி தலைவராகவும், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளராகவும் இருக்கிறார். அதேபோல், மருமகன் ரிஸ்வான் விளையாட்டு மேம்பாட்டு அணியின் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளராக இருக்கிறார். அந்த அணியின் அமைப்பாளர் பொறுப்பே அவருக்குதான் கொடுக்கப்பட இருந்தது. சர்ச்சை எழும் என்பதால்தான் அவருடைய ஆதரவாளரான திண்டிவனம் பகுதி சந்திரன் என்பவருக்கு அந்த பொறுப்பை கொடுத்திருந்தார்கள்.
அமைச்சர் குடும்பத்தில் ஒரு பிரச்னை போகிறது. மாப்பிள்ளை, பிள்ளையை மட்டும் அமைச்சர் வளர்த்து விடுவதாகவும், தம்பி காஜாநஜீரை கண்டுக் கொள்வதும் இல்லை என்பதுதான் அது. ஒரே குடும்பத்தில் இத்தனை பொறுப்புகளை வைத்துக் கொண்டு, ஆதிக்கம் செலுத்தியதால் தான் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது. இதுமட்டுமின்றி, அமைச்சர் குடும்பத்தின் மீது ஏகப்பட்ட புகார்கள் தலைமைக்கு போயிருக்கிறது. குறிப்பாக கட்சி தொண்டர்களை கண்டுக்கொள்வதே கிடையாது, அவர்களுக்கு ஏதும் செய்வதும் கிடையாது. அப்படியானால், கீழே உள்ள தொண்டர்களின் நிலை என்னவாவது. அதனுடைய வெளிப்பாடாகத்தான் இப்படியாக புகார்கள் சென்றிருக்கிறது. அதனால்தான், அமைச்சர் தம்பியின் பதவி பறிப்புக்கு தொண்டர்கள் யாரும் வருத்தப்படவே இல்லை.
மொக்தியார் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் தலைமையின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல்கள் வருகிறது." என்றனர் பரபரப்பாக.
from India News https://ift.tt/hxH8vD5
No comments