Breaking News

ஆன்மிக திருவிழாவாக ஆனதா நாடாளுமன்றத் திறப்பு நிகழ்வு?! - விமர்சனங்களும் நடைமுறைகளும்!

மே மாதம் 28-ஆம் தேதி நாட்டின் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்திய வரலாற்றில் பொறிக்கபடும் ஒரு மிக முக்கிய தினம் பெரும் சர்ச்சைகளுடன் கடந்திருக்கிறது. `இந்திய நாடாளுமன்றத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டுமே தவிர பிரதமர் மோடி அல்ல’ எனக் கூறி புதிய நாடாளுமன்ற திறப்பை புறக்கணித்திருக்கிறது 19 எதிர்க்கட்சிகள். சர்ச்சைகள் அதோடு நின்றுவிடவில்லை. மத சார்பற்ற நாட்டின் நாடாளுமன்றத்தை ஒரு குறிப்பிட்ட மத மடாதிபதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் வேத மந்திரங்கள் ஓத செங்கோல் நிறுவப்பெட்டது கூடுதல் சலசலப்பை கிளப்பியிருக்கின்றன.

புதிய நாடாளுமன்றம் - செங்கோல் - பிரதமர் மோடி

புதிய நாடாளுமன்றத்தின் திறப்பின்போது திருவாடுதுறை ஆதீனம் சார்பில் தங்க செங்கோல் வழங்கப்பட்டது. செங்கோல் நிறுவனப்படுவதற்கு முன்பு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க செங்கோலுக்கு பூஜை செய்யப்பட்டது. மேலும் செங்கோலுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. வேத மந்திரங்கள் ஓத, தேவார பாடல் பாட, செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கைக்கு அருகில் அதனை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்கு முன்பாக ஒவ்வொரு ஆதீனங்களிடமும் ஆசிப்பெற்றார் மோடி. தரையில் படுத்து வணங்கி செங்கோலுக்கு மரியாதை செலுத்தினார் மோடி.

”மக்களாட்சி காலத்தில் இது போன்ற குறியீடுகள் தேவையற்றது. இங்கே அரசமைப்பு சட்டம்தான் அனைத்திற்குமான அடையாளம். மக்களாட்சிக்கு மாறிவிட்ட நாம் மீண்டும் பிற்போக்கில் செல்வது ஏற்புடையதல்ல. புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்ட தினத்தை கருப்பு தினமாக கடைபிடிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டவில்லை என்பது ஒரு காரணம், மற்றொன்று சாவர்க்கரின் பிறந்தநாளை கொண்டாடும் நோக்கில் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்கிறார்கள்” என்றிருக்கிறார் விடுதலை சிறுத்தைக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்

ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ, “எவ்வித மத அடையாளமும் இல்லாமல், மரபு ரீதியாகவே செங்கோல் வைக்கப்படுகிறது. அதில் அரசியல் இல்லை” என் விளக்கமளித்திருக்கிறார்.

பிரதமர் மோடி - புதிய நாடாளுமன்றம் - செங்கோல்

புதிய நாடாளுமன்றத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவின்போதும் அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் வேளையிலும் ஜனாதிபதி அழைக்கப்படவில்லை என்பது கவனிக்கதக்கது. “நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தைத் திறந்துவைப்பதுதான் அரசியலமைப்பு மரபின்படி ஜனநாயகம். மோடி திறப்பது அவமானம்; ஜனநாயகத்தின்மீதான தாக்குதல்!” என எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலாக அறிக்கைவிட்டிருக்கிறார்கள்.

ஜி.ராமகிருஷ்ணன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தின் தலைவர் குடியரசுத் தலைவர். அவர் தான் நாடாளுமன்றத்தைக் கூட்ட அதிகாரம் கொண்டவர். ஆனால் குடியரசுத் தலைவரை நாடாளுமன்ற திறப்பு நிகழ்வுக்கே அழைக்காமலிருந்தது கண்டனத்திற்குரியது.

அதோடு மதச்சார்பின்மையையும் அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டிருக்கக் கூடிய நாடு இந்தியா. தனிப்பட்ட நபர் எந்த மதத்தையும் கடவுள் நம்பிக்கைகளையும் பின்பற்றுவதற்கான உரிமை உள்ளது. அதனை அனைத்து மதத்தைச் சார்ந்த மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கும் நாடாளுமன்றத்திற்குள் மதத்தை ஆன்மிக செயல்பாடுகளையும் கொண்டு வருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது ஏதோ கோயில் கும்பாபிஷேகம் போல் காட்சி அளித்தது. மத சடங்குகளை நாட்டின் நாடாளுமன்றத்திலேயே அரங்கேற்றுகிறார்கள் என்றால் இந்து ராஷ்ட்ரியம், இந்துத்துவ நாடு என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை நோக்கி நகர்வதில் அடுத்த படிநிலைக்கு சென்றுவிட்டார்கள் என்றே பொருள். நேருவுக்கும் செங்கோல் வழங்கப்பட்டது என பாஜகவினர் கோடிட்டுக் காட்டுகிறார்கள். அது அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து வழங்கப்பட்டதே தவிர. இவர்களை போல நாடாளுமன்றத்தில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு அங்கேயே நிறுவப்படவில்லையே” என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.

அஸ்வத்தாமன்

நம்மிடம் பேசிய பா.ஜ.க பிரமுகர் அஸ்வத்தாமன், “நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவதென்பது அறம் சார்ந்த செயலாகும். அறம் சார்ந்த செயல்களுக்கு மதச்சாயம் பூசுகிறார்கள் அந்நிய நாட்டுச் சித்தாந்தம் கொண்ட தி.மு.க காங்கிரஸ் கட்சிகள். ஜனாதிபதியை அழைக்கவில்லை என்கிறார்களே... 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ஓமந்தூரார் மாளிகையில் புதிய சட்டமன்ற வளாக திறப்பிற்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தானே வந்தார்.

அப்போது ஜனாதிபதியையோ ஆளுநரையோ ஏன் அவர்கள் அழைக்கவில்லை. ஜனாதிபதியைச் சாதி ரீதியாக இழிவுப்படுத்திவிட்டோம் என விமர்சனம் செய்கிறார்கள். அந்த உயர் பதிவில் அவரை அமர வைத்ததே பா.ஜ.க தானே. சோழர்கள், பாண்டியர்களும் செங்கோல் வைத்துத்தான் பதவியேற்றுள்ளனர். பதவியேற்றுக் கொண்டவர்கள் வேத மந்திரங்கள் முழங்கித் தானே பதவி ஏற்றுக் கொண்டனர். பாரம்பரிய நிகழ்வினை உள்நோக்கம் கொண்டு விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைப் புறந்தள்ளுகிறோம்.” என்றார் அஸ்வத்தாமன்

புதிய நாடாளுமன்ற கட்டடம்

”சென்டர் விஸ்டா என பெயரிடப் பெற்ற புதிய நாடாளுமன்றம், திறக்கப்பட்ட தருவாயிலேயே சர்ச்சை விஸ்டாவாக மாறியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் ஜனாதிபதியை அழைத்திடாமலும் மடாதிபதிகளை கொண்டு வேத மந்திரங்கள் ஓதியதும், எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையில் நாட்டின் நாடாளுமன்ற திறக்கப்பட்டிருப்பதும் வரலாற்றில் நினைவில் கொள்ளப்படும்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்



from India News https://ift.tt/AvLU8CP

No comments