Breaking News

``14 வயதில் கருத்தரிப்பது சாதாரணமானதுதான்; மனுஸ்மிருதி படியுங்கள்"- குஜராத் நீதிமன்றம்

குஜராத் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 17 வயது சிறுமி ஒருவர் கருவுற்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தை சிக்கந்தர் சையத், சிறுமியின் வயது, அவரின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு குஜராத் உயர் நீதிமன்றத்தில், கரு கலைப்பதற்கான அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தார். கருக்கலைப்புக்கான மருத்துவச் சட்டத்தின் திருத்தப்பட்ட பிரிவு 3-ன் படி, கருக்கலைப்புக்கான உச்சவரம்பு 24 வாரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வன்கொடுமை

ஆனால், கருயுற்ற பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படும் அல்லது அவரது உடல் அல்லது மன ஆரோக்கியத்தைக் கடுமையாக பாதிக்கும் என மருத்துவர்கள் கருதினாலோ, அல்லது குழந்தை பிறந்தால், ஏதேனும் மனதளவிலோ அல்லது உடலளவிலோ பாதிக்கப்படும் ஆபத்து இருந்தாலோ அந்தக் கரு கலைக்க அனுமதிக்கப்படும். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சமீர் ஜெ. தேவ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள்,"நாம் 21-ம் நூற்றாண்டில் வாழ்கிறோம். ஆனால், உங்கள் அம்மா அல்லது பாட்டியிடம் கேளுங்கள், அவர்களுக்குத் தெரியும், திருமணம் செய்ய அதிகபட்சம் 14 முதல் 15 வயதுதான். அதன் பிறகு 17 வயதிற்கு முன்பே குழந்தை பிறந்துவிடும். ஆண்களுக்கு முன்பே பெண்கள் முதிர்ச்சியடைகிறார்கள். 4-5 மாதங்கள்தான் இங்கும் அங்கும். அதைத் தவிர பெரிய வித்தியாசம் இருந்ததில்லை.

குஜராத் நீதிமன்றம்

நீங்கள் மனுஸ்மிருதியை படிக்க மாட்டீர்கள், ஆனால் இதை தெரிந்துக்கொள்ள மனுஸ்ம்ருதியை ஒருமுறை படியுங்கள். சிறுமியின் கரு 7 மாதங்கள் ஆகிவிட்டதால் இந்தக் கருவை கலைக்கலாமா வேண்டாமா என மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். மேலும், இந்த வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ராஜ்கோட் சிவில் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு மூலம் சிறுமிக்கு உடனே மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிடப்படுகிறது.

பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு அதிலிருந்து மீண்டும் வரும் சிறுமியின் மன நிலையையும் கண்டறிய வேண்டும். இந்த சோதனைகளை நடத்திய பிறகு, அதன் அறிக்கைகள் அடுத்த விசாரணை தேதியில் இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். வழக்கின் உண்மைகளைக் கருத்தில் கொண்டு, ராஜ்கோட் மருத்துவக் குழு கர்ப்பத்தை மருத்துவ ரீதியில் கலைக்கும் நடைமுறையை மேற்கொள்வது நல்லதுதானா என்பது குறித்தும் மருத்துவர்கள் குழுவின் கருத்தைச் சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது. கருவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணும் நல்ல நிலையில் இருந்தால் கருக்கலைப்பை அனுமதிப்பது கடினம். குழந்தையை தத்துக் கொடுப்பது குறித்தும் கூட ஆலோசிக்கலாம்" என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.



from India News https://ift.tt/DtNma34

No comments