``கை, கால்கள் இல்லா உடல்கள்; எங்கு பார்த்தாலும் இரத்தக்கறை" - பயணி வெளியிட்ட `அதிர்ச்சி' தகவல்
இரண்டு பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் என்று மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்து, நேற்று இரவு ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்திருக்கிறது. ஒடிசாவின் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த விபத்தின்போது ஹவுராவிலிருந்து சென்னை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸில் பயணித்த அனுபவ் தாஸ் என்னும் பயணி, சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் பதிவில், ``கோரமண்டல் எக்ஸ்பிரஸில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் நான் உயிர் பிழைத்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதுவே மிக மோசமான ரயில் விபத்தாக இருக்கும். பெங்களூரு-ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸின் மூன்று ஜெனரல் பெட்டிகள் முற்றிலும் தடம் புரண்டு சேதமடைந்திருக்கின்றன. மேலும் ஸ்லீப்பர் பெட்டிகள், 2-ம் மற்றும் 3-ம் ஏசி பெட்டிகள் உட்பட 13 பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. நசுங்கிய உடல்கள்.. கைகள், கால்கள் இல்லாத உடல்கள், இரத்தக்கரை நிறைந்த தண்டவாளங்கள் என்று நான் கண்ட காட்சிகளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். நான் தனிப்பட்ட முறையில் 200 - 250 இறந்தவர்களின் உடல்களை பார்த்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.
இச்சம்பவம் குறித்து, நேற்று இரவே கோரமண்டல் ரயிலில் பயணித்த தஞ்சையை சேர்ந்த வெங்கடேசன், சம்பவ இடத்திலிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவர் அந்த வீடியோவில், `` விபத்துக்குள்ளான ரயிலில்தான் நான் பயணம் செய்து வந்தேன். மாலை 6.15 மணி அளவில் ரயில் பாலாசூர் வந்தடைந்தது. அடுத்த 15 நிமிடங்களில், ரயில் விபத்துக்குள்ளானது. நான் பி-7 பெட்டியில் பயணித்தேன். பி-6 பெட்டி வரை முழுமையாக விபத்தில் சிக்கியிருக்கிறது. 500 பேராவது உயிரிழந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நானும் மீட்பு படையைச் சேர்ந்தவன்தான். ரயில் விபத்துக்குள்ளான உடன் எனது கமாண்டோவுக்கு தகவல் தெரிவித்தேன். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது, அப்பொழுது எதிர் திசையில் டெல்லியை நோக்கி ஒரு ரயில் வந்தது கொண்டிருந்தது. இதற்கிடையில் சரக்கு ரயில் ஒன்று இடையில் புகுந்ததால் மூன்று ரயில்களும் விபத்தில் சிக்கின. ஏராளமானோர் இறந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். 2 பெட்டியில் இருந்த ஒருவர் கூட பிழைக்கவில்லை என்று நினைக்கிறேன்" என்றார்.
இந்நிலையில், மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடந்துவருகிறது. 3 என்.டி.ஆர்.எப் குழுவினர், ஒடிசா பேரிடர் மேலாண்மை குழு, 15 தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், இந்திய விமானப்படை வீரர்கள் உள்ளிட்டோர் மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களில், அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், 60-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. தற்போது வரை, 288 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
from India News https://ift.tt/lWedifs
No comments