Breaking News

சேலம்: `பாஜக-வுக்குப் பல்லக்குத் தூக்கி ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டவர் பழனிசாமி!'- ஸ்டாலின் காட்டம்

சேலம் கிழக்கு, மத்திய, மேற்கு மாவட்டங்களுக்கான ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம், சேலம் ஐந்து ரோடு பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``உங்களையெல்லாம் பார்க்கும்போது , நான் தெம்போடும், இறுமாப்போடும் நின்று கொண்டிருக்கிறேன், என்றே சொல்வேன். நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடிய சூழலில், முதல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டமாக சேலம் மாவட்டக் கூட்டம் அமைந்திருக்கிறது.

தொண்டனுக்குத் தொண்டனாக இருந்து களத்தில் முதல் போர் வீரனாக இருந்து, மறைந்த வீரபாண்டியார் இருந்த சேலம் மாவட்டத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவான ஊர் இந்த சேலம். அண்ணா அவர்களால் கொண்டுவரப்பட்ட தீர்மானம்தான் சேலத்தில் திராவிடர் கழகத்தை உருவாக்கியது. சமூக சீர்திருத்த எண்ணங்களைச் செயல்படுத்த திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. இந்த சேலத்தில்தான் கனல் மிகுந்த வசனங்களை கலைஞர் எழுதியிருக்கிறார். எனவே என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஊர் சேலம்.

ஸ்டாலின்

1996-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி நடந்தது. அப்போது 1997-ம் ஆண்டு சேலத்தில் தி.மு.க மாநாடு நடந்தது. அதில் நடந்த ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கும் மிகப்பெரிய பொறுப்பை வீரபாண்டியார் எனக்குக் கொடுத்தார். மாலை 5 மணிக்குத் தொடங்கிய பேரணி விடிய விடிய நடந்தது. அப்படிப்பட்ட மாபெரும் பேரணிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை எண்ணி பெருமைப்படுகிறேன். மூன்று நாள்கள் மாநாட்டில் ஒரு நாள் முழுக்க இளைஞர் அணி நடத்தியது. 2004-ம் ஆண்டு மாநாட்டில் கட்சிக் கொடியேற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நினைவலைகளில் நீந்தி உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன்.

கலைஞர் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. ஊர்கள்தோறும் தி.மு.க கொடிக் கம்பங்களைப் புதுப்பிக்க வேண்டும். `எல்லாமே கலைஞர்' என்ற தலைப்பில் கல்விக்கு உதவிட வேண்டும், கலைஞரின் மார்பளவு சிலையை அனைத்து இடங்களிலும் அமைக்க வேண்டும். `கழகமே குடும்பம்' என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு உதவிட வேண்டும், `என்றென்றும் கலைஞர்' என்ற பெயரில் அவரின் சிறப்புகளை விளக்கிடும் வகையில், பட்டிமன்றம் நடத்த வேண்டும். கலைஞர் பெயரில் இன்டர்நெட் வசதியுடன் கூடிய படிப்பு மையம் அமைப்பது என்ற முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

கலைஞர் நூற்றாண்டு விழாவின்போதுதான், நாம் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறோம். 40 இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு அச்சாரமாக இந்தக் கூட்டம் அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சேலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அதற்காகத்தான் முதன்மைச் செயலாளர் நேருவை இங்கு அனுப்பியிருக்கிறேன். அவர் செயலாற்றுவதில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர். உங்களைப் பார்த்தவுடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை கிடைத்துவிட்டது. நாளை நமதே, நாற்பதும் நமதே என்பதை உரக்கச் சொல்ல சேலம் வந்திருக்கிறேன். 10 ஆண்டுக்காலம் தமிழகத்தைப் பாலாய்ப்படுத்திய அ.தி.மு.க-வை அகற்றிவிட்டு, மக்கள் நம்மிடம் ஆட்சியைக் கொடுத்திருக்கின்றனர்.

அமித் ஷா

கடந்த 2 ஆண்டுகளில் தி.மு.க கட்சிப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆட்சிக்கு வந்த பிறகு கட்சிப் பணிகள் மந்தமாகும் சூழ்நிலை தி.மு.க-வில் இல்லை. ஒவ்வொருவரும் உறக்கமின்றி பாடுபட்டு வருகின்றனர். அந்த உழைப்பின் பலனாக 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். 68,000 வாக்குச்சாவடிகளுக்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்துப் பேச உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த அளவுக்குக் கட்டமைப்பு கொண்ட கட்சி உலகத்திலேயே எங்கும் இல்லை.

தி.மு.க-வை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது என்ற சூழ்நிலையை இந்த ’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். உங்கள் உழைப்பின் பலன் உங்களை வந்து சேரும். நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. கட்சி வளர்ச்சி ஒருபுறம், நாம் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் தமிழகத்தின் வளர்ச்சி ஒருபுறம் என்ற வகையில் செயலாற்றி வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டுதானே என அலட்சியமாக இருக்கக் கூடாது. பா.ஜ.க செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. அதற்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். கர்நாடகாவில் தோல்வி ஏற்பட்டதால், முன்கூட்டியே தேர்தலை நடத்த வாய்ப்பிருக்கிறது. எனவே நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வருவது பரபரப்பு செய்திகளாக வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது தெரிகிறது. கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ.க ஆட்சியில் அமைச்சராக இருக்கும் அமித் ஷா, தமிழகத்துக்கு என்னென்ன சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்தார் எனப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு அமித் ஷா தயாராக இருக்கிறாரா... மத்தியில் 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க அங்கம் வகித்தபோது ஏராளமான திட்டங்கள் தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்டன. 14,600 கோடி ரூபாயில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது 80 சதவிகிதம் பணிகள் நிறைவடைய காரணம், தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான்.

மத்திய அரசின் நிதியில் 11 சதவிகித நிதியை தமிழகத்துக்குக் கொண்டு வந்த பெருமை தி.மு.க-வுக்குத்தான் இருக்கிறது. மிக முக்கியமான 69 திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம். 2,000 ஆண்டுகள் இலக்கியப் பெருமை கொண்ட தமிழுக்கு, `செம்மொழி' என்ற பெருமையைப் பெற்றுத் தந்தோம். 56,600 கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலை திட்டப்பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. தேசிய மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம் என பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.

சசிகலா - எடப்பாடி பழனிசாமி

தாம்பரத்தில் தேசிய சித்தா ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 1,550 கோடி ரூபாய் மதிப்பில் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம், சேது சமுத்திரத் திட்டம், நெசவு தொழிலுக்கான சென்வாட் வரி நீக்கம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பொடா சட்டம் ரத்து, மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகல ரயில் பாதைகளாக மாற்றியது, ரயில்வே மேம்பாலங்கள், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், கடல் சார் பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், உயர் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா என எண்ணற்ற பணிகளைச் செய்திருக்கிறோம்.

இதுபோன்றதொரு பட்டியலை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட தயாரா... அந்த தைரியம் ஆற்றல் அவருக்கு வருமா, வராதா... 2015-ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுவரைக்கும் மருத்துவமனை கட்டப்படவில்லை. அதே நேரத்தில் மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கட்டப்படவில்லை. தமிழ்நாட்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மனமில்லாத ஆட்சிதான் மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வி. இதற்கு அமித் ஷா பதில் சொல்ல வேண்டும்.

பா.ஜ.க தமிழகத்துக்குக் கொடுத்தது நீட், தமிழ் புறக்கணிப்பு, குடியுரிமைச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினர் உரிமை பறிப்பு, இந்தித் திணிப்பு, சம்ஸ்கிருத திணிப்புதான் பா.ஜ.க அரசு கொடுத்தது. கொத்தடிமைக் கூட்டமான அ.தி.மு.க-வை நம்பி பா.ஜ.க வருகிறது. ஜெயலலிதாவுக்குப் பிறகு தோல்வியை மட்டுமே பெற்ற கட்சி அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி, சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி என தோல்வி மேல் தோல்வி அ.தி.மு.க-வுக்கு கிடைத்திருக்கிறது.

சசிகலாவின் காலைப் பிடித்து ஆட்சியைப் பிடித்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் சசிகலாவின் காலை வாரிவிட்டதோடு, பா.ஜ.க-வுக்கு பல்லக்குத் தூக்கி தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. மக்கள் வெள்ளத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க இருவரும் அடித்துச் செல்லப்படுவது உறுதி.

தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஒவ்வொருவரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயனடைந்து வருகின்றனர். மகளிர் இலவசப் பேருந்து திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு, காலை சிற்றுண்டி, புதுமைப் பெண் திட்டம், நம்மைக் காக்கும் 48 திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மகளிர் உரிமைத் தொகை வரும் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளில் வழங்கப்படும். தி.மு.க ஆட்சியின் சாதனைகளை நிர்வாகிகள் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். சமூக வலைதளங்கள் மூலமே மக்கள் செய்திகளைத் தெரிந்து கொள்கிறார்கள். எனவே தி.மு.க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் கணக்கை உடனடியாக தொடங்க வேண்டும். செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எதிர்முகாமில் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்திகளை முடக்க வேண்டும்" என்று மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டார்.

ஸ்டாலின்

தொடர்ந்து பேசியவர், ``தாய் கழகத்தில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு துணை அமைப்புகளில் வாய்ப்பு வழங்கிட வேண்டும். மாவட்ட அளவில் மட்டுமே பொறுப்புகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு கணிசமாக பொறுப்புகளை வழங்க வேண்டும். தி.மு.க-வினரை அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மகிழ்ச்சியோடு வைத்திருக்க வேண்டும். தி.மு.க தொண்டர்களை கவனித்து குறையை தீர்த்து வைக்க வேண்டும். குறையை தீர்க்க முடியாவிட்டாலும் காது கொடுத்தாவது கேட்க வேண்டும். நம்முடைய குடும்பம்போல கட்சி இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்க தேவையானதை செய்ய வேண்டும்.

தேசிய அளவில் திராவிட மாடல் ஒங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. தெற்கிலிருந்து எழும் குரலை வடக்கே இருப்பவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யார் வந்தாலும் நாங்கள் பயப்படப் போவதில்லை. உறுதியோடு இருந்து களப்பணியாற்றிட வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழாவில் ஜனநாயகத் திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்” என்றார்.



from India News https://ift.tt/1ci7JlM

No comments