Breaking News

Tamil News Today Live: ``ரூ.3,000 கோடி முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு செயல்பட்டோம்; ஆனால்...” - சென்னை திரும்பிய ஸ்டாலின்

சென்னை திரும்பினார் ஸ்டாலின்!

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் கடந்த 23-ம் தேதி ஒன்பது நாள் பயணமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அதிகாரிகள் உடன் சென்றனர்.

சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில், தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ஒன்பது நாள்கள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு 10.30 மணியளவில் தமிழகம் திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் எம்.எல்.ஏ-க்கள், தி.மு.க நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ``உங்கள் வாழ்த்துகளோடு நான் மேற்கொண்ட சிங்கப்பூர், ஜப்பான் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தொழில் முதலீடுகளை ஈர்த்திடக்கூடிய வகையில் தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஏற்கனவே ஜப்பான் நாட்டிற்குச் சென்று ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார். குறைந்தபட்சம் 3,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம். மொத்தம் 3,233 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக, நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பல்வேறு துறைகளுடைய பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்தாண்டு தமிழகத்தில் நடைபெற இருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளேன்” என்றார்.



from India News https://ift.tt/Jdg7Xup

No comments