திமுக அரசு vs ஆளுநர் ரவி - பல்கலைக்கழக பட்டமளிப்பிலும் தொடரும் மோதல் போக்கு!
தமிழக ஆளுநராக ரவி நியமிக்கப்பட்டது முதல் அவருக்கும் தி.மு.க-வுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. நீட், புதிய கல்விக் கொள்கை, சனாதனம், திராவிடம் உள்ளிட்டவைகள் குறித்து ஆளுநர் கொளுத்திப்போட்ட வெடிகள் ஏராளம். பதிலுக்கு தி.மு.க-வினர் ஆற்றிய எதிர்வினைகளும் அதிகம். இதற்கிடையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.
இந்த நிலையில் உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசிய ஆளுநர், "நாம் கேட்பதாலோ அல்லது வெளிநாட்டுக்குச் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வந்துவிடாது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த குழுவை உருவாக்க வேண்டும்" என யார் பெயரையும் குறிப்பிடாமல் பேசினார்.
இது தி.மு.க-வினருக்கு கோபத்தை ஏற்படுத்தவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான 'முரசொலி', ஆளுநரின் பேச்சை கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை எழுதியிருந்தது.
இந்நிலையில் தி.மு.க அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் வெடித்திருக்கிறது. சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. "பல்கலைகளின் பட்டமளிப்பு விழாவில் பெரும்பாலும் முன்னாள் துணைவேந்தர்கள் போன்ற கல்வியாளர்களை வைத்துதான் பட்டம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது ஆளுநர் வடஇந்திய பிரபலங்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை வைத்து பட்டமளிப்பு விழா நடத்த விரும்புகிறார். ஆனால் மத்திய அமைச்சர்கள் தேதி தருவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பட்டமளிப்பு விழா நடத்தாமல் இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் தவிர மற்ற 12 பல்கலை.களிலும் யாருக்கும் பட்டம் வழங்கப்படவில்லை. அதாவது 2022-ம் ஆண்டில் தேர்ச்சிபெற்ற 9 லட்சத்து 29,142 மாணவர்கள் பட்டம் பெற முடியவில்லை.
இதனால் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடுத்தகட்ட பணி பாதிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ் அவசியமாகும். அவர்களுக்கு சான்றிதழ் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இதற்கு ஆளுநரே முழு காரணம். அவர் எப்போது தேதி கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறோம்.
மாணவர்கள் நலன்கருதி அனைத்து பல்கலைகளிலும் உடனடியாக பட்டமளிப்பு விழாவை நடத்த ஆளுநர் முன்வரவேண்டும். கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தரை தேர்வு செய்வதற்கு விதிகளின்படி தேடல் குழுவை கடந்த அக்டோபரில் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. ஆனால், விதிமுறையைமீறி பல்கலை மானியக்குழு தரப்பில் இருந்து ஒருவரை உறுப்பினராக நியமிக்க ஆளுநர் கூறுகிறார்.
அது தவறு. இதனால் இதுவரை அதை கிடப்பில் வைத்துள்ளார். பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டிலும் தமிழகம் சிறப்பாக திகழ்கிறது. ஆளுநருக்கு இது தெரியவில்லை எனில் எங்களிடம் விளக்கம் கேட்கலாம். இதில் அவர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்" என்றார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில், ‘‘இதுவரை 7 பல்கலைக்கழகங்களில் மட்டுமே பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கோரப்பட்டிருக்கிறது. இதில் சென்னை பல்கலை (ஜூன் 16), வேலூர் திருவள்ளுவர் பல்கலை. (ஜூன் 19), பெரியார் பல்கலை (ஜூன் 29), மீன்வளப் பல்கலை (ஜூலை 7) தேதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலை, நெல்லை மனோன்மணீயம் பல்கலை, கோவை வேளாண் பல்கலை ஆகியவற்றில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும். இதில் திருச்சி பாரதிதாசன் பல்கலையில் மட்டுமே கொரோனா பரவலால் 3 ஆண்டுகளுக்கு சேர்த்து மாணவர்களுக்கு தற்போது பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கிறது.
கோவை பாரதியார் பல்கலையில் இதுவரை துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. துணைவேந்தர் நியமிக்கப்பட்டு இருந்தால், அங்கு பட்டமளிப்பு விழாவை நடத்த அனுமதித்திருப்போம். தமிழ்நாடு அரசு சார்பில் அதற்காக தேடுதல் குழு அமைக்கப்படவில்லை. இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் துரை.கருணா, "ஆளுநருக்கும் தமிழக அரசுக்குமான பனிப்போர் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பு இருந்த ஆளுநர்கள், அரசுக்கு எதிரான கருத்துக்கள், சித்தாந்த ரீதியிலான கருத்துக்களை பொதுவெளிகளில் பேசமாட்டார்கள். அவர்கள் அரசு தேர்தெடுக்கப்பட்டதும் பதவி பிரமாணம் செய்து வைப்பார்கள்.
ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்துவார்கள். அங்கு நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுப்பார்கள். குடியரசு தினம், சுதந்திர தினம் போன்றவற்றில் கலந்து கொள்வார்கள். நேரடியாக அரசியல் தலையீடுகளை செய்ய மாட்டார்கள். ரவியை பொறுத்தவரை ஆரம்பம் முதலே சித்தாந்த ரீதியிலான கருத்துக்களை பேசி வருகிறார். அது திராவிட கருத்தியலுக்கு எதிராக இருப்பதால், தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தல், பிளஸ்-2-வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களை சந்தித்தது போன்றவற்றை, இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் செய்து வந்தது. ஆளுநர்கள் செய்யமால் இருந்து வந்தனர். ஆளுநர்கள் செய்யக்கூடாது என்ற விதியும் இல்லை. இதை சொல்லி தான் ஆளுநர் ரவி தரப்பு, இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் செய்து வருகிறது. எனவே இரண்டு தரப்புக்கும் விட்டுக்கொடுக்கும் தன்மை இருக்க வேண்டும். இல்லை என்றால் மாநிலத்தின் நலனுக்கு உகந்ததாக இருக்காது. எனவே இரண்டு தரப்பினரும் இதை உணர வேண்டும்" என்றார்.
from India News https://ift.tt/hQgd0U4
No comments