Breaking News

பாஜக - மார்க்சிஸ்ட் கட்சியினர் மாறி மாறிப் புகார்... 4 பேர்மீது வன்கொடுமை வழக்கு! - நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவாய் ஊராட்சிக்குட்பட்டது பாரதிபுரம். இங்கு ஆதிதிராவிடர் நலத்துறைக்குச் சொந்தமான இடத்தில் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்க வலியுறுத்தி, பல ஆண்டுகளாகப் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக 2017-ம் ஆண்டு 43 பேருக்கு வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், உரிய பயனாளிகளுக்கு பட்டா வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கெனவே பட்டா வைத்திருந்தவர்களுக்கே மீண்டும் பட்டா வழங்கப்பட்டதாகவும், வெளியூர்காரர்களுக்கும், மாற்று சாதியினருக்கும் பட்டா வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த மாதம் 16-ம் தேதி, திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க சுற்றுச்சூழல் பிரிவு மாவட்டத் தலைவர் செல்வகுமார் தலைமையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த செகமலையப்பன், சம்பத்குமார் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசனைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.

பாஜக

அப்போது, தங்கள் மூவரை கணேசன் உள்ளிட்டோர் தாக்கியதுடன், சாதியைச் சொல்லித் திட்டியதாக, மங்கலம் காவல் நிலையத்தில் செல்வகுமார் புதன்கிழமை புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன், அவரின் மகன் சிந்தன், ஊராட்சி மன்றத் தலைவரின் அண்ணன் ஈஸ்வரன், அவரின் மகன் ராஜேஷ் ஆகியோர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் சிந்தன் அளித்த புகாரின்பேரில் செல்வகுமார், செமலையப்பன், சம்பத்குமார் ஆகியோர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்தச் சம்பவத்தின்போது அந்த இடத்தில் இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன், சம்பவமறிந்து சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கு சென்றார். அங்கு வந்த பா.ஜ.க-வினர் அவரைத் தாக்க முற்பட்டனர். ஒரு மாதத்துக்குப் பிறகு இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

சிபிஐ(எம்)

சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்துக்கு மேலான நிலையில், இடுவாய் ஊராட்சித் தலைவர் கணேசன் உள்ளிட்ட நால்வர்மீது பா.ஜ.க-வினர் அளித்த பொய் புகாரின் அடிப்படையில், தவறாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இடுவாய் ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மக்களிடமுள்ள செல்வாக்கை சீர்குலைக்கும் நோக்கத்தோடும், அங்குள்ள நல்லிணக்க சூழ்நிலையைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



from India News https://ift.tt/ODjTmsx

No comments