Breaking News

செல்போன் வெளிச்சத்தில் தையல்போட்ட மருத்துவ ஊழியர்கள்; செஞ்சி அரசு மருத்துவமனை அவலம்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் இயங்கி வருகிறது அரசு பொது மருத்துவமனை. இங்கு அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாகவும், மருத்துவர்களின் செயல்பாடுகள் அதிருப்தியளிக்கும் வகையில் இருப்பதாகவும் மக்கள் தொடர் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், செஞ்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதலே பரவலாக மழை பெய்து வந்துள்ளது. இதனால் அவ்வப்போது மின்சாரம் தடைபட்டு போயுள்ளது. அரசு மருத்துவமனையிலும் மின்சாரம் இல்லாமல் போயுள்ளது. ஆனால், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிலிருந்த இன்வெர்டர் முறையாகப் பராமரிக்கப்படாமல், பழுதடைந்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

செஞ்சி அரசு மருத்துவமனை

இதனிடையே தலையில் காயமடைந்த ஒருவர், சிகிச்சை பெறுவதற்காக இந்த மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். மருத்துவமனையில் மின்சாரமே இல்லாததால், தலையில் காயமடைந்து வந்தவருக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தையல் போட்டிருக்கின்றனர் மருத்துவ ஊழியர்கள். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வேகமாகப் பகிரப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. 

வீடியோ காட்சிகள்

இது குறித்து விளக்கம் கேட்க விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் லட்சுமணனைத் தொடர்பு கொண்டோம். "இந்த விஷயம் என்னுடைய கவனத்துக்கு வந்தது. சி.எம்.ஓ-விடம் (Casualty Medical Officer) தகவல் தெரிவித்தேன். அது ஜெனரேட்டரை ஆபரேட் செய்யும் நேரம்தான் என்று சொன்னார்கள். யு.பி.எஸ் பேக்கப் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். மற்ற எதுவென்றாலும் அலுவலகத்துக்கு நேராக வந்து பேசுங்கள்" என்றபடி அழைப்பை துண்டித்துக் கொண்டார்.



from India News https://ift.tt/FEtBs0C

No comments