ஒன ப ட: பரதமர ஏன மணபபரககச சலலவலல?' - சபபரமணயன சவமயன களவ சரய?
செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்
``மிகச் சரியாகக் கேட்டிருக்கிறார். இதே கேள்வியைத்தான் எதிர்க்கட்சியினரும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். மே மாத தொடக்கத்தில் வெடித்தது பிரச்னை... இரண்டு மாதங்களைத் தாண்டி இன்றளவும் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை, இருப்பிடங்களை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். பலர் உயிருக்கு பயந்து அந்த மாநிலத்திலிருந்தே வெளியேறியிருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும், பா.ஜ.க-தான் கலவரத்தைக் கட்டவிழ்த்துவிடுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் நிலையிலும், பிரதமர் வாய் திறக்கவேயில்லை. கலவரத்தைக் கட்டுப்படுத்தவேண்டிய மாநில முதல்வர் ராஜினாமா நாடகமாடுகிறார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், `முதல்வரை நீக்க வேண்டும்’ என முன்வைக்கப்பட்ட கோரிக்கையின்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. உண்மையில் இந்தக் கலவரத்தை, பிரதமர் ரசிக்கிறார். மணிப்பூர் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, குளிர்காய நினைக்கிறார். மக்களின் உயிர்களை வைத்து கேவலமான அரசியல் செய்துகொண்டிருக்கும் பா.ஜ.க அரசு, மணிப்பூர் வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.’’
நாராயணன் திருப்பதி, மாநில துணைத் தலைவர், பா.ஜ.க
``அர்த்தமற்ற கேள்வி. மணிப்பூர் பிரச்னையைச் சரிசெய்ய மாநில, மத்திய அரசுகளின் தரப்பிலிருந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா ஐந்து நாள்களுக்கு மேலாக மணிப்பூரின் பிரச்னைக்குரிய இடங்களுக்குச் சென்று அங்கிருக்கும் மக்களைச் சந்தித்து அமைதி திரும்புவதற்கான பணிகளைச் செய்திருக்கிறார். `பிரதமர் ஏன் போகவில்லை, `மக்களை ஏன் சந்திக்கவில்லை?’ என்ற கேள்வியே சரியானதல்ல. அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி எதிர்க்கட்சியினர்தான் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். தற்போது மணிப்பூரில் இரண்டு தரப்பினருக்கிடையே பிரச்னை நடக்கிறது. அதைப் பேசித்தான் சரிசெய்ய வேண்டும். மாறாக, எதிர்க்கட்சிகளோ பிரச்னையைப் பெரிதாக்கி, மதக் கலவரமாக மாற்ற நினைக்கின்றன. இந்த விவகாரத்தை திறம்படக் கையாள வேண்டுமென மொத்த அரசு இயந்திரமும் முழு வீச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது. ஒரு மாநிலத்தில் பிரச்னை ஏற்படும்போது அதை ஊதி, பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட நினைப்பது கீழ்த்தரமான அரசியல். அதை எதிர்க்கட்சிகள் உட்பட யார் செய்தாலும் தவறுதான்.’’
from India News https://ift.tt/gOHMdsv
No comments