மகாராஷ்டிராவில் தொடரும் சிக்கல்... நிதித்துறையை பெற டெல்லியில் முகாமிட்டுள்ள அஜித் பவார் தரப்பு!
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியில் வந்துள்ள அஜித் பவார், பா.ஜ.க.கூட்டணி அரசில் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். அவருடன் அவரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இந்த அமைச்சர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கப்படாமல் இருக்கிறது. மற்றொரு புறம் கடந்த ஒரு ஆண்டாக அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்களை உடனே அமைச்சரவையில் சேர்க்கவேண்டும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதையடுத்து ஓரிரு நாளில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், முதல்வர் ஷிண்டே ஆகியோர் தெரிவித்திருந்தனர். இதற்காக முதல்வர் ஷிண்டேயும், தேவேந்திர பட்னாவிஸும் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பலமுறை சந்தித்து பேசியுள்ளனர். தற்போது ஏற்கனவே அமைச்சர்களாக பதவியேற்ற அஜித் பவார் உட்பட 9 தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்களுக்கு இலாலா ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
அஜித் பவார் தனக்கு நிதித்துறை கட்டாயம் வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் நிதித்துறையை அஜித் பவாரிடம் கொடுக்கக்கூடாது என்று சிவசேனா அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க-வுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதற்கு முன்பு மகா விகாஷ் அகாடியில் சிவசேனா அங்கம் வகித்த போது நிதியமைச்சராக இருந்த அஜித் பவார் தங்களுக்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை என்று இப்போது சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கூட்டுறவு துறையும் தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அத்துறையை கொடுக்க பா.ஜ.க. தயாராக இல்லை.
மாநிலம் முழுவதும் இருக்கும் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவேதான் அத்துறை தங்களுக்கு வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது இப்பிரச்னையில் தேக்க நிலை நீடிப்பதால் அஜித் பவார், பிரபுல் பட்டேல், அமைச்சர் ஹசன் முஸ்ரீப் ஆகியோர் நேற்று மாலையில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
அவர்கள் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இலாகா தொடர்பாக பேச இருக்கின்றனர். மரியாதை நிமித்தமாக அமித் ஷாவை சந்தித்து பேச வந்திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நிதித்துறை கொடுப்பதாகத்தான் அஜித் பவாருக்கு பா.ஜ.க.வாக்குறுதி கொடுத்ததாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு உள்துறையோ அல்லது நகர்ப்புற மேம்பாட்டுத்துறையோ தேவையில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதோடு இலாகா பிரச்னைக்கு தீர்வு காணப்படும் வரை அமைச்சரவை விரிவாக்கத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்துள்ளது. சட்டமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் முடிந்த பிறகு அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்று பா.ஜ.க.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் அதிருப்தியில் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு அமைச்சர்கள் சிலருடன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லப்போவதாக கூறிவிட்டு புறப்பட்டுவிட்டார். அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாவதால் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் மிகவும் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்களில் அதிகமானோர் உத்தவ் தாக்கரே அணியுடன் தொடர்பில் இருக்கின்றனர். இதனால் முதல்வர் ஷிண்டே மிகவும் பதட்டத்தில் இருக்கிறார். அஜித் பவார் வந்து தங்களது கட்சியில் பிளவை ஏற்படுத்திவிடுவாரோ என்ற அச்சத்தில் ஷிண்டே இருக்கிறார். அஜித் பவார் பவார் டெல்லியில் இருந்து வந்த பிறகு இலாகா தொடர்பான விவகாரங்கள் ஒரு முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
from India News https://ift.tt/7JZ9MmB
No comments