Breaking News

அணணமல மகவரய இலலமல ஆகவடவர..!" - எசசரககம க.பலகரஷணன

ஆளுநரின் நடவடிக்கைகள், எதிர்க்கட்சிகள் கூட்டணி, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் பலக் கேள்விகளை முன்வைத்தேன்.

“சனாதன தர்மம் உருவானதே தமிழ்நாட்டில்தான். இது ஆன்மிக பூமி என்று ஆளுநர் கூறுகிறாரே?”

“ஆன்மிகத்தைப் பயன்படுத்தி வருணாசிரம தர்மத்தை திணிக்க முயல்வதுதான் சனாதனம். சனாதனம் என்பது வேத காலத்திலேயே உருவாக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம்மீது திணிக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாட்டில்தான் சனாதனம் உருவானது என்று சொல்ல முடியாது. `யாதும் ஊரே, யாவரும் கேளீர்' என்பதுதான் தமிழரின் பண்பாடு. அந்தப் பண்பாட்டுடன் சனாதனத்தை கலப்பதை ஏற்க முடியாது.”

“சனாதன தர்மத்தில் தீண்டாமை, பாகுபாடுகளுக்கே இடமே இல்லை என்கிறாரே ஆளுநர்?”

“சனாதனம் மனு தர்மத்தை அடிப்படையாகக் கொண்டதா... இல்லையா என்பதை ஆளுநர்தான் சொல்ல வேண்டும். மனு தர்மத்தில் 4 வர்ணங்கள் இருக்கின்றன. அதிலிருந்துதான் பாகுபாடு தோன்றியது. அதிலிருந்து பிரிக்க முடியாத பிணிதான் சாதி. அவைதான் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகின்றன.”

ஆளுநர் ஆர்.என்.ரவி

“செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்த ஆளுநர், 5 மணி நேரத்தில் அதை திரும்பப் பெற என்ன காரணமாக இருக்கும்?”

“அரசியல் அரிச்சுவடிகூட தெரியாமல் இந்த நடவடிக்கையை ஆளுநர் மேற்கொண்டார். நாடு முழுவதுமிருந்து பகிரங்கமாக கண்டனங்கள் வந்ததையடுத்து, `நாமும் சேர்ந்து பதில் சொல்ல வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது' என்று மத்திய அரசுக்கும் அச்சம் வந்துவிட்டது. அதனால் ஆளுநர் அதை வாபஸ் வாங்கிவிட்டார்.”

“அப்படியானால் ஆளுநரே தன்னிச்சையாக எடுத்த முடிவு என்கிறீர்களா?”

“ஆளுநர் தன்னிச்சையாக இப்படியொரு முடிவை எடுத்திருக்க வாய்ப்பே இல்லை. மத்திய அரசோடு ஆலோசித்துதான் செய்திருப்பார். ஆனால் பூதாகரமாக எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வந்துவிட்டதால் அதை நிறுத்திவைக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகிவிட்டார்கள்.”

செந்தில்பாலாஜி

“ஒருபக்கம் அரசியல், மற்றொரு பக்கம் பண்பாடு என இரு முனைகளில் நீங்கள் ஆளுநரோடு கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறதோ?”

“நாங்கள் ஆளுநரோடு சண்டையிடுவதற்கு கட்சி நடத்தவில்லை. ஆளுநர் என்ற எல்லையைத் தாண்டி ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ் பிரசாரகராக மாறி அரசியல், பண்பாட்டுத் தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் நாங்கள் ஆளுநரை எதிர்த்து களத்தில் போராட வேண்டியிருக்கிறது.”

“எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உங்களுக்கே சில மாநிலங்களில் சிக்கல்கள் இருக்கிறதே... எப்படிச் சரி செய்வீர்கள்?”

“தமிழ்நாட்டில் எந்தச் சிக்கலும் இல்லை. கேரளாவில் பா.ஜ.க டெபாசிட்கூட வாங்காது. எனவே காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்தனியாகத்தான் போட்டியிடும். பா.ஜ.க வந்துவிடக் கூடிய இடங்களில், அதை முறியடிக்கும்விதமாக கூட்டணி அமைப்போம். மாநிலவாரியாக மட்டும் இந்தக் கூட்டணி அமையும் என்றல்ல, தொகுதி அடிப்படையில்கூட கூட்டணி அமைத்துக்கொள்ளலாம் என்றும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.”

கே.பாலகிருஷ்ணன்

“ `பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்குப் பிறகு முடிவுசெய்துகொள்ளலாம்' என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணிமீது, மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?”

“பிரதமராக யார் வர வேண்டுமென்பதற்காக தேர்தல் நடக்கவில்லை. வி.பி.சிங், நரசிம்ம ராவ், தேவகவுடா போன்றோர் பிரதமரான சமயத்தில், அவர்களை பிரதமர் வேட்பாளர்களாக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கவில்லை. யார் வர வேண்டுமென்பதைவிட யார் வரக் கூடாது என்பதற்கான தேர்தல் இது. பா.ஜ.க-வை வீழ்த்துவோம் என்ற புள்ளியில் இணைகிறோம். வெற்றிபெற்ற பின்னர் கூடி பொருத்தமானவரை தேர்வுசெய்வோம்.”

“ `சிதம்பரம் தீட்சிதர்களுக்கு அரசு தொல்லை கொடுத்தால் நானே போராடுவேன்' என்று அண்ணாமலை சவால் விடுத்திருக்கிறாரே?”

“அரசுக்கு சவால்விடும் அளவுக்கு அண்ணாமலை பெரிய ஆள் கிடையாது. அண்ணாமலை சிதம்பரத்துக்குப் போனால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது... உலகமே குலுங்கிவிடுமா... நாங்கள் செயலில் இறங்கினால் அண்ணாமலை முகவரியே இல்லாமல் ஆகிவிடுவார். அரசியல் முதிர்ச்சி இல்லாமல் இப்படி பேசக்கூடிய அரசியல் தலைவரை நான் பார்த்ததே இல்லை. தன்னடக்கத்தோடு பேச அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.”

அண்ணாமலை

“சிதம்பரத்தில் நடராஜர் கோயில் தீட்சிதர்களை அரசாங்கம் ஒடுக்கப் பார்ப்பாதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அந்தக் கோயில் குறித்த சர்ச்சைகளும் அதிகரித்திருக்கின்றனவே?”

“சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக இப்போது புதிதாக சர்ச்சைகள் உருவாகவில்லை. இப்போது ஆளுநர் தலையீட்டால் சர்ச்சைகள் அதிகரித்திருக்கின்றன. கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசு விரும்புகிறது. தீட்சிதர்கள் எதிர்க்கிறார்கள். அரசாங்கம் தனிச்சட்டம் இயற்றி கோயிலை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டால், பிரச்னைகள் தீர்ந்துவிடும். தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் வரவு, செலவு கணக்குகளைக்கூட சரியாகத் தருவதில்லை. நேர்மையாக இருந்தால் தருவதில் அவர்களுக்கு என்ன சிக்கல்... குழந்தைத் திருமண விவகாரத்தில் தீட்சிதர்கள் மனசாட்சியோடு உண்மையைப் பேச வேண்டும்.”

“மணிப்பூர் இரண்டு மாதங்களாகப் பற்றி எரிகிறது. எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தேசிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?”

“தேசிய அளவில் வலுவான எதிர்ப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிகழவில்லை என்பது வருத்தமான உண்மைதான். ஆனால் அகில இந்திய அளவில் ஆங்காங்கே எதிர்ப்புகள் இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் இது குறித்துப் பேசுகிறார்கள். உண்மையிலேயே மணிப்பூர் விவகாரத்தை கண்டுகொள்ளாத ஒரே கட்சி பா.ஜ.க-தான். அமித் ஷாவே 30 நாள்களுக்குப் பிறகுதான் மணிப்பூருக்குச் சென்றார். பா.ஜ.க-வின் அரசியல் நோக்கம்தான் இந்த கலவரத்துக்குக் காரணம் என்பதே எங்கள் குற்றச்சாட்டு. தமிழ்நாட்டில் ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று சொல்கிற அண்ணாமலை, ஜெயக்குமார் போன்றோர், ஏன் மணிப்பூரில் ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று சொல்லவே இல்லை?”



from India News https://ift.tt/3bnU2EY

No comments