Breaking News

`ஜெயலலிதாவுக்கு நடந்த கொடூரம்; நானே சாட்சி; அவையில் அன்று..!’ - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

"அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, முன்னிலையிலே பெண் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல், ஜெயலலிதா மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது." என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருகின்ற 20-ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டு ஏற்பாடுகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

பின்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் "மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டேன். மாநாட்டு அரங்கம், நுழைவு வாயில், உணவு வழங்கும் இடம், சமையல் கூடம் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டேன்" என்றவரிடம்,

"சட்டசபையில் ஜெயலலிதா நடத்தியது நாடகம் என்று ஸ்டாலின் கூறியுள்ளாரே?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

'"ரொம்ப நாள் சிந்தித்து இப்போதுதான் சொல்லி இருக்கிறார். 1989-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இப்போதுதான் பொம்மை முதலமைச்சருக்கு ஞாபகம் வந்துள்ளது. பத்திரிகை, ஊடகச் செய்திகளை பார்த்து பேசியிருந்தாலாவது நல்ல முதலமைச்சர் என்று மக்கள் சொல்லி இருப்பார்கள். இப்போது பொம்மை முதலமைச்சர் என்று அவரே நிரூபித்துவிட்டார்.

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது, கனிமொழி எம்.பி, திரெளபதியை துச்சாதனன் துயில் உரித்த சம்பவத்தை மேற்கோள் காட்டி பேசினார். அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசினார். அன்று எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா இருந்தபோது அந்த சம்பவம் நடக்கும்போது நானும் அவையில் இருந்தேன்.

அன்றைய முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையிலே பெண் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல், ஜெயலலிதா மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது. கருணாநிதி திட்டமிட்டு சில கருத்துக்களை பேசும்போது இந்த பிரச்னை ஏற்பட்டது. அன்றைய திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கினார்கள். திருநாவுக்கரசும், கேகேஎஸ்எஸ்ஆரும் அப்போது தடுத்ததை நான் பார்த்தேன். தடுத்துக் கொண்டிருக்கும்போது, இப்போது இருகின்ற ஒரு மூத்த அமைச்சர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுக்க, சில சட்டமன்ற உறுப்பினர்கள், சில அமைச்சர்கள் தலைமுடியை  பிடித்து இழுக்க மிகப்பெரிய கோரமான சம்பவம் சட்டமன்றத்தில் அரங்கேறியது. இன்றைக்கும் அந்த நிகழ்வு மனதில் உள்ளது. அன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தினால் இதை தெரிவிக்கிறேன்.

சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவத்தின்போது

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலே மிக மோசமான நாள் என்றால் 1989 மார்ச் 25 -ம் நாள்தான். இதுவரை அப்படிப்பட்ட சம்பவம் சட்டமன்றத்தில் பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு நடந்ததில்லை, எந்த ஒரு எதிர்கட்சித் தலைவருக்கும் நடந்தது இல்லை. ஆனால், இன்றைய முதலமைச்சர் அச்சம்பவத்தை கொச்சைப்படுத்தி இப்போது பேசுகிறார்.

இந்த சம்பவம் அப்போது பத்திரிகை ஊடங்களில் வந்த காரணத்தினால் இப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்று 1991-இல் ஜெயலலிதா தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது.

தமிழகத்தின் முதலமைச்சராக சட்டமன்றத்திற்கு நிச்சயம் வருவேன் என்று ஜெயலலிதா சபதம் செய்துவிட்டு வெளியே சென்றார் என்று நிர்மலா சீதாராமன் பேசினார். இதன் மூலம் உண்மை, தர்மம், நியாயம் வென்றது. முதலமைச்சர் தவறான பொய்யான தகவலை திட்டமிட்டு பரப்புகிறார். இது கடும் கண்டனத்திற்கு  உரியது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்." என்றார்.

"சபை குறிப்பில் இருக்கிறது என்று முதலமைச்சர் கூறியுள்ளாரே?" என செய்தியாளர்கள் கேட்டதற்கு,

"சபை குறிப்பில் என்ன இருக்கிறது? அவர்களே ஏற்றுகிறார்கள், அவர்களே இறக்கி கொள்கிறார்கள். சட்டமன்றமாகவா நடந்தது? உண்மையாக சட்டமன்றம் நடந்திருந்தால் இது நடந்திருக்காது. இந்த நிகழ்வு நடந்தபோது அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள். டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். முதலமைச்சர் கண்ணெதிரே ஒரு பெண் என்று பாராமல் எதிர்க்கட்சித் தலைவர் என்று பாராமல் சேலையை பிடித்தும் முடியை பிடித்து இழுத்தும் கடுமையாக தாக்குகின்ற பொழுது அவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள்?

 தன் குடும்பத்திலுள்ள தாய், தங்கை, மகளுக்கு இப்படிப்பட்ட நிகழ்வு நடந்திருந்தால் நமது மனம் எப்படி வேதனைப்பட்டு இருக்கும் என மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.? அப்படிப்பட்ட வேதனையுடன்தான் மக்களின் பேரதரவை பெற்று நாட்டின் முதலமைச்சராக வருவேன் என்று சொன்னார். அதுபோல மக்கள் அதிகமான இடங்களில் வெற்றி பெற வைத்தனர். அப்போது நானும் வெற்றி பெற்றேன்." என்றார்.

எடப்பாடி பழனிசாமி

"நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை என ஆளுநர் கூறியுள்ளாரே?"

``இப்படிபட்ட ஆட்சியில் என்ன எதிர்பார்க்க முடியும்? பொய்தானே பேசி வருகிறார்கள். 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றனர், எங்கே ரத்து செய்தார்கள்? மக்களுக்கு சட்டத்தைப் பற்றி தெரியாது என்று ஏமாற்றினார்கள்.

உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு அளித்துவிட்டது. அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை அமல்படுத்தி விட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டும் எப்படி ரத்து பண்ண முடியும்.? திட்டமிட்டு மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்தவுடன் அந்தர் பல்டி அடிக்கிறார்கள். நாங்கள் ரெடியாக இருக்கிறோம், கவர்னர் ஒத்துக்கொள்ள மாட்டார் என்று கூறுகிறார்கள். 

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நீங்ளோ நானோ செயல்பட முடியுமா? எல்லாமே சட்டத்துக்கு உட்பட்டது. ஆனால், நீங்கள் சட்டத்தையும் மதிப்பதில்லை, மக்களையும் மதிப்பதில்லை, திட்டமிட்டு பொய் பேசி ஏமாற்றி வருகிறீர்கள். இதற்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்களா? நாங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்தபோதும் காவிரி உரிமைக்காக 22 நாள்கள் நாடாளுமன்றத்தில் அவையை ஒத்திவைக்க எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டார்கள். அதுபோல் உங்களுடைய கூட்டணிக்கட்சிகளை இணைத்து, ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய என்ன முயற்சி எடுத்தீர்களா? அதற்கு தில், திராணி வேணும். இவருக்கு அவர் குடும்பம்தான் கண்ணுக்கு தெரிகிறது.” என்றார்.

எடப்பாடி பழனிசாமி

" மாநாட்டிற்கு மோடி அல்லது அமிஷா வர வாய்ப்புள்ளதா?"

"இது அதிமுக மாநாடு, கூட்டணி கட்சி மாநாடு அல்ல. ஸ்டாலின் விருந்து சாப்பிட்டு வருவது போல இந்த கட்சி அல்ல. தொண்டன் நிறைந்த கட்சி, இங்கு தொண்டர்கள்தான் தலைவர்கள்.

கட்சிகள் சேர்ந்து கூட்டம் போட்டு இந்தியா என்ற பெயர் வைத்தார்கள். இவர்களுக்கு பெயருக்கும் சம்பந்தம் கிடையாது. இந்தியா என்கிற பெயர் 140 கோடி மக்களுக்கும் சொந்தம். அந்த பெயர் வைத்ததே தப்பு. 

முதல் மாநாடு எங்கு நடந்தது என்று உங்களுக்கு தெரியும். இரண்டாவது மாநாடு பெங்களூரில் நடந்தது. அப்போது கெஜ்ரிவால், உயர் அதிகாரிகளை மாற்றக்கூடிய மசோதாவில் தங்களை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தார்கள்.

அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூரு சென்றபோது காவிரியில் இருந்து குறிப்பிட்ட டிஎம்சி திறந்து விட வேண்டும் என கெஜ்ரிவால் போல கோரிக்கை வைத்திருக்க வேண்டும். அழகாக தண்ணீர் வந்து சேர்ந்திருக்கும்.  தமிழக முதலமைச்சரை அங்குள்ள நீர் பாசனத்துறை அமைச்சர்தான் வரவேற்று கூட்டி செல்கிறார். இரண்டு வார்த்தை அவரிடம் பேச முடியாதா? அவருக்கு மக்களைப் பற்றி, நாட்டை பற்றி, விவசாயி பற்றி கவலை இல்லை.

"தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகமாகி வருகிறதே?"

"திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இப்படிப்பட்ட பிரச்னைகள் வந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்ததே இல்லை."

" தமிழக பாஜக அதிமுக-வுக்கு எதிராக உள்ளதா?"

"உங்கள் கேள்வியிலயே பதில் உள்ளது" என்று கூறிவிட்டு கிளம்பினார்.



from India News https://ift.tt/HLO1U2x

No comments