Breaking News

"மகளிர் இடஒதுக்கீடு மசோதா முழுமையடையாமல் இருப்பது வருந்தத்தக்கது!" - ராகுல் காந்தி காட்டம்

சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, "நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பெண்களுக்கு அதிகாரமளித்து வருகிறது. முதன் முதலில் பஞ்சாயத்து ராஜ் தான் பெண்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில் மிக முக்கிய பங்காற்றியது. பஞ்சாயத்துகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுத்தது காங்கிரஸ் கட்சி. மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு நாட்டின் பெண்களுக்கு உதவும் முக்கியமான முடிவு என்பதை எல்லோரும் ஏற்கிறார்கள்.

பிரதமர் மோடி

இந்த மசோதாவில் ஓ.பி.சி ஒதுக்கீட்டையும் இணைக்க வேண்டும். இந்த மசோதாவில் இரு முரண்பட்ட விஷயங்களை பார்க்கிறேன். ஒன்று மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது, மற்றொன்று தொகுதி வரையறை தேவை என்பது. ஓ.பி.சி பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாததால் முழுமையற்ற மசோதாவாகவே இருக்கிறது. ஓ.பி.சி பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. என்னுடைய பார்வையில் இன்றே இந்த இடஒதுக்கீட்டை இதை நடைமுறைப்படுத்தலாம். இதை மேலும் காலதாமதப்படுத்துவதற்காக கொண்டுவரவில்லை என்று நான் நம்புகிறேன்.

அதனால் இதை உடனடியாக நிறைவேற்றி, நடைமுறைக்கு கொண்டுவாருங்கள். மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதிகள் மறுசீரமைப்பு செய்தபிறகே இது நடைமுறைக்கு வரும் என்பது ஏற்கத்தக்கதல்ல. அதேபோல் நாட்டு மக்களுக்கு அதிகாரமளிப்பது என்பது அனைவருக்கும் அதிகாரம் அளிப்பதாக இருக்க வேண்டும். நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினராக இருப்பவர்கள் ஓ.பி.சி பிரிவினர்.

புதிய நாடாளுமன்றம்

ஆனால், மத்திய அரசின் நிர்வாகத்தில் 90 செயலாளர்கள் இருக்கிறார்கள். அதில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்கள். புதிய நாடாளுமன்றம் மிகவும் அருமையாக இருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் நாட்டின் முதல் குடிமகளான பழங்குடி இன பெண் குடியரசுத் தலைவியை பார்க்க முடியவில்லை. அதானி உட்பட பிற பிரச்னைகளில் இருந்து எப்படி மக்களவை திசைதிருப்புவது என்பதை பா.ஜ.க-வினர் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்" எனப் பேசினார்.



from India News https://ift.tt/9qHbJMF

No comments