Breaking News

`உங்க ஆட்சியில் கஞ்சா, பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்குது’ - புதுச்சேரி முதல்வரிடமே திமுக புகார்

புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ சிவா முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், புதுச்சேரியில் தற்போது கஞ்சா, பாலியல் தொழில் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். அவர் தனது புகார் மனுவில், ``ஆன்மிகம், சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து தாராளமாக கஞ்சா தடையின்றி விற்கப்படுவதும், கஞ்சா பழக்கத்திற்கு இளைஞர்கள், மாணவர்கள் அடிமையாகி, போதையிலிருந்து மீள முடியாமல், சமூக விரோதிகளாக மாறுவதும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதில் சிறார்கள் பெருமளவு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர் என்பதும், தினம்தோறும் நாளிதழ்களில் அதுகுறித்து வரும் செய்திகளுமே அதற்கு சான்றாக உள்ளது. அதேபோல் ரெஸ்டோ பார்கள், மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து இணையத்தளங்கள் மூலமாகவும், புரோக்கர்கள் மூலமாகவும் பாலியல் தொழிலும் கொடிகட்டி பறக்கிறது.

புதுச்சேரி அரசு

புதுச்சேரிக்கு சென்றால் மதுபானம் குடித்துவிட்டு, மசாஜ் சென்டரில் மஜாவாக இருக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வார இறுதி நாட்களில் உள்ளூர் மக்கள் குறிப்பாக, குடும்பப் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். புதுச்சேரியை இவையெல்லாம் சீரழிப்பது போதாது என்று, பல்வேறு பகுதிகளில் சூதாட்ட கிளப்புகள் அமைக்கும் பணியில் ஆளும் கட்சியின் துணையுடன் பெருமுதலாளிகள் களத்தில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கெனவே ஏனாம் பிராந்தியத்தில் சட்டத்திற்கு விரோதமாக ’ராயல் ஏனாம் ரெக்ரேஷன் கிளப்’ மற்றும் ’விட்டல் ஏனாம் ஸ்போர்ட்ஸ் கிளப்’ என 10–க்கும் மேற்பட்ட கிளப்புகள் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் மிகுந்த பகுதியில் செயல்படுகின்றன.

அதனால் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒரிசா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களைச் சேர்ந்த சமூக குற்றவாளிகள் ஏனாமுக்கு தினம்தோறும் படையெடுப்பதாகவும், நாளொன்றுக்கு ரூ.100 கோடி அளவிற்கு சூதாட்டம் நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த கிளப்புகள் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாகக் கூறி அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஆகியோர் துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோரிடம் மனு அளித்திருக்கின்றனர். ஆனால் இதுவரை அவற்றின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறை ஆய்வு நடத்த உயர்நீதி மன்றம் தடை பெற்றுள்ளதால், சூதாட்ட உரிமையாளர்கள் தைரியமாக நடத்துகின்றனர். மாவட்ட நிர்வாகமும் அமைதியாக இருப்பதைப் பார்த்தால், உயர் பதவியில் இருப்பவர்களுக்கு மாதம்தோறும் கையூட்டு வழங்கப்படுவது உறுதியாக தெரிகிறது. சூதாட்ட கிளப் மூலம் பெரும் பணத்தை பார்த்த உயரதிகாரிகள்தான், புதுச்சேரியிலும் சூதாட்ட கிளப்புகளை அமைக்கும் பணிகளில் ஆர்வமாக இருக்கின்றனர்.

ஏற்கனவே நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் புதுச்சேரியில் கஞ்சா, பாலியல் தொழில் போன்ற சமூக விரோத செயல்களுடன் சூதாட்டமும் சேர்ந்தால், கறுப்பு மாநிலமாக மாறிவிடுமோ என்று அச்சம் எழுந்திருக்கிறது. எனவே புதுச்சேரி மாநில மக்களின் நலன்கருதி, இதுபோன்ற சமூக விரோத செயல்களை சட்டம் இயற்றி அடக்கி ஒடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு இந்த அரசு மீது நம்பிக்கை ஏற்படும். வெளிநாடு மற்றும் வெளி  மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அச்சம் களைந்து புதுச்சேரிக்கு வருவார்கள். இந்த சட்டம் இயற்றுவதற்கு ஒன்றிய உள்துறையிடம் அனுமதிபெற தேவையில்லை என நினைக்கிறேன். எனவே இந்த சட்டம் இயற்றுவதற்கு தலைமைச் செயலர், உள்ளாட்சித் துறை செயலர், நகராட்சி ஆணையர்களைக் கொண்ட சிறப்பு அமைச்சரவையை எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடருக்குள் கூட்டி, அறிவிப்பு செய்ய வேண்டும் என புதுச்சேரி அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/Af14vHI

No comments