Breaking News

அதிமுக: அந்தரத்தில் விடப்பட்ட அசோகன்... தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி மா.செ ஆனது எப்படி?!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் தளவாய் சுந்தரத்தின் அரசியல் வாழ்க்கை ஏற்றம் இறக்கம் நிறைந்தது. தென் சென்னை வழக்கறிஞர்பிரிவு துணைச் செயலாளர் பதவி மூலம் 1989-ம் ஆண்டு அ.தி.மு.க பதவிக்கு வந்தவர் தளவாய் சுந்தரம். பின்னர் சென்னை வழக்கறிஞர்பிரிவு மாவட்ட செயலாளர், உயர் நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞராக இருந்தவர், 1996-ல் நாடளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.

2001-ல் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ ஆகி அமைச்சர் ஆனார். 2007-ல் அம்மா பேரவை செயலாளர், 2010-ல் அமைப்புச் செயலாளர் ஆனவர், அ.தி.மு.க தலைமையில் செல்வாக்குடன் திகழ்ந்தார். 2011-ல் சசிகலா-வை ஜெயலலிதா வெளியேற்றிய சமயத்தில் தளவாய்சுந்தரத்தின் பவர் சற்று குறைந்தது. அதே சமயம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பச்சைமால் கையே ஓங்கி இருந்தது.

அசோகன்

சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் ஒருங்கிணைந்த குமரி மாவட்டச் செயலாளராக இருந்தார் பச்சைமால். இவர் 2001-ல் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ ஆனவர் . 2011-ல் தளவாய்சுந்தரத்துக்கு சீட் வழங்காமல் கன்னியாகுமரியில் பச்சைமால் நிறுத்தப்பட்டார். அங்கு வென்ற பச்சைமால் அமைச்சராகவும் ஆனார். இதற்கிடையே அவரின் உதவியாளராக இருந்த சகாயம் மீது இரட்டைக்கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து பச்சைமாலின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. 2013-ல் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு, மேற்கு என பிரிக்கப்பட்டு கிழக்குக்கு சிவசெல்வராஜன் மாவட்டச் செயலாளராகவும், மேற்கு மாவட்டத்துக்கு ஜான் தங்கம் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் ஜான் தங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போதும், தளவாய்சுந்தரத்துக்கு மேலும் சிக்கலை உருவாக்கும் நோக்கில் கட்சிக்கு செல்வாக்கே இல்லாத கிள்ளியூர் தொகுதியில் பொறுப்பாளராக போட்டனர். 2014-ல் நாடாளுமன்றத்தில் 37 தொகுதியில் வென்ற அ.தி.மு.க, தர்மபுரி, கன்னியாகுமரியில் தோல்வியை தழுவியது. ஆனாலும், கிள்ளியூர் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுக்கொடுத்து ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடித்தார் தளவாய்சுந்தரம். இதையடுத்து 2014-ல் கிழக்கு மாவட்டச் செயலாளராக தளவாய்சுந்தரம் நியமிக்கப்பட்டார்.

மேற்கு மாவட்ட செயலாளராக ஜெங்கின்ஸ் நியமிக்கப்பட்டார். கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்தாலும் மாவட்டம் முழுவதும் தொகுதிக்கு ஒரு கட்சி அலுவலகம் திறந்தார் தளவாய்சுந்தரம். இதையடுத்து அதே ஆண்டு ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக தளவாய்சுந்தரம் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

பச்சைமால்

2016 சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட தளவாய் சுந்தரம் உட்பட குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் அ.தி.மு.க தோல்வி அடைந்தது. ஆனால், தமிழகத்தில் ஆட்சியை பிடித்த ஜெயலலிதா தளவாய்சுந்தரத்தின் மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து, மாநில அமைப்புச் செயலாளர் ஆக்கினார். திவாகரனின் ஆதரவாளரான விஜயகுமார் மேல்சபை எம்.பி ஆக்கப்பட்டதுடன் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

அ.தி.மு.க குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ

ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா, தினகரன் அணியில் இருந்த தளவாய் சுந்தரம், பின்னர் எடப்பாடி அணியில் இணைந்து தீவிரமாக இயங்கினார். இதற்கிடையே விஜயகுமார் ஓரங்கட்டப்பட்டு 2018-ல் பன்னீரின் ஆதரவாளர் எஸ்.ஏ.அசோகன் குமரி கிழக்கு மாவட்டச் செயலாளராகவும், மேற்கு மாவட்ட செயலாளராக ஜான் தங்கமும் நியமிக்கப்பட்டனர். எடப்பாடியும், ஓ.பன்னீர் செல்வம் இடையே விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து எஸ்.ஏ.அசோகனை நீக்கி உத்தரவு பிறப்பித்தார் இ.பி.எஸ். இதையடுத்து பன்னீர் அணி மாவட்டச் செயலாளராக இயங்கினார் அசோகன். எடப்பாடி அணியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவி காலியாகவே இருந்தது. அந்த பதவிக்காக முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் மாவட்டச் செயலாளத் சிவசெல்வராஜன் ஆகியோர் முயற்சி செய்தனர். அதே சமயம் பன்னீர் அணியில் மாவட்டச் செயலாளராக இருந்த அசோகனும் எடப்பாடி அணியில் மாவட்டச் செயலாளர் ஆகும் ஆசையில் தளவாய் சுந்ததரத்தை நெருங்கினார். இதனால் அசோகனின் மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து அவரது தம்பி விக்கிரமனுக்கு கொடுத்தார் பன்னீர்.

பன்னீர் அணியில் இருந்து நீக்கப்பட்டதால் எடப்பாடி அணியில் இருந்து அழைப்பு வரும், மாவட்டச் செயலாளர் ஆகலாம் என காத்திருந்தார் அசோகன். ஆனால், இப்போது கிழக்கு மாவட்டச் செயலாளராக தளவாய்சுந்தரம் நியமிக்கப்பட்டதால் அரசியலில் ஆதாரம் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க விவரப்புள்ளிகள் சிலரிடம் பேசினோம், "கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு பலர் முயன்றாலும் யாருடைய பெயரையும் அமைப்புச் செயலாளர் தளவாய்சுந்தரம் பரிந்துரைக்கவில்லை. அதே சமயம் மதுரையில் நடந்த அ.தி.மு.க பொன்விழா மாநாட்டுக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்திய தளவாய் சுந்தரம் கூட்டத்திலும், ஏற்பாட்டிலும் பிரமாண்டம் காட்டினார்.

`தளவாய் சுந்தரம்

எத்தனை வாகனங்கள் வரும், அந்த வாகனங்களுக்கான பதிவெண், டிரைவர் மற்றும் பொறுப்பாளரின் செல்போன் எண்களுடன் பட்டியலை ஒப்படைத்து அசத்தினார். அதுமட்டும் அல்லாமல் மாவட்டச் செயலாளர் பதவியிடம் காலியாக இருந்த சமயத்திலேயே மாவட்ட பிரச்னைக்களுக்காக போராட்டங்களை நடத்தி கட்சியை உயிரோட்டமாக வைத்திருக்கிறார். எனவே மாவட்டச் செயலாளருக்கு தளவாய் சுந்தரம்தான் சரி என டிக் அடித்திருக்கிறது எடப்பாடி தரப்பு. அதே சமயம் ஓ.பி.எஸ் தீவிர ஆதரவாளராக தன்னைக்காட்டிக்கொண்ட அசோகன் பதவிக்காக விஸ்வாசத்தை கைவிட்டதை எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்களே ரசிக்கவில்லையாம். பதவிக்காக எப்போது வேண்டுமானாலும் நிறம் மாறுவார் என்பதால் அவரை எடப்பாடி தனது அணியில் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/s8Q7FIj

No comments