Breaking News

`ஒரே கையெழுத்தில் நீட்டை ரத்து செய்வோம் என்றவர், கோடி கையெழுத்து கேட்பது ஏன்?’ - ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியபோது, "கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சியின் கொடியை, சின்னத்தை பயன்படுத்த கூடாது என பலமுறை சொன்ன பிறகும் அதை பயன்படுத்தி வருகின்றனர். அதற்காகத்தான் எடப்பாடியார் நீதிமன்றத்தை நாடியுள்ளார். நிச்சயமாக நீதியின் பக்கம் தீர்ப்பு வரும்.

ஆர்.பி.உதயகுமார்

கடந்த மூன்று நாள்களாக மதுரையில் அறிவிக்கப்படாத முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் முகாமிட்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு ஏன் தீர்மானம் போடவில்லை என கேட்கிறார். எவ்வளவு தற்குறியாக இருக்கிறார். முதன்முதலாக நீட் தேர்வுக்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநரிடம் கொண்டு சென்றவர் எடப்பாடியார்.

ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என சொன்ன உதயநிதி ஸ்டாலின் இன்று ஒரு கோடி கையெழுத்து வேண்டும் என சொல்வதில் உள்ள ரகசியம் என்ன? நீட் தேர்வு விவகாரத்தில் நீங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ள தயாரா? எடப்பாடியார் உத்தரவிட்டால் எட்டுக் கோடி தமிழரிடத்திலும் கையெழுத்து பெற்று கொடுக்க எங்களால் முடியும் என சவால் விடுகிறேன்.

உசிலம்பட்டி நிகழ்ச்சியில்

கையெழுத்தைப் பெற்று ஜனாதிபதியிடம் கொடுக்க முடியும், ஆனால், எங்களது கையெழுத்தை ஜனாதிபதி ஏற்க மாட்டார், ஏனென்றால் ஆட்சி பொறுப்பில் நாங்கள் இல்லை.

ஒருமுறையாவது தமிழ்நாட்டு மக்களுக்காக எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ கோரிக்கை வைத்தார்களா?

முதன்முதலாக கோரிக்கை வைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2018-ம் ஆண்டு மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்ததால் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தது ஜெயலலிதா மற்றும் எடப்பாடியார். தனியாருக்கு போனால் குளறுபடிகள் நடைபெறும் என்பதால் நாங்களே அனைத்து இடங்களையும் பெற்றுக் கொடுத்தோம்.

எய்ம்ஸ் குறித்த ரகசியத்தை கொடுங்கள் என எங்களிடம் கேட்டால் எப்படி? உங்களிடம்தான் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எந்த ரகசியமும் கிடையாது. இடம் கொடுத்துவிட்டோம், மாணவர் சேர்க்கையும் நடைபெற்றுவிட்டது, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களிடம் மட்டுமே உள்ளது. பூச்சாண்டி காட்டும் வேலை எங்களிடம் வேண்டாம்.

அறிவிக்கப்படாத முதல்வராக நீங்கள் வலம் வருகிறீர்கள். நேற்று ஜல்லிக்கட்டு மைதானத்தை ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின் அவர்களே, ஜல்லிக்கட்டுக்கென ஒரு வரலாறு உள்ளது, சீறி வரும் களையை அடக்கும் வீர வரலாற்று நிகழ்வான ஜல்லிக்கட்டு விளையாட்டை பொம்மை விளையாட்டாக மாற்றி உள்ளீர்கள். ஜல்லிக்கட்டு போட்டிக்கு மைதானம் வேண்டும் என யார் கேட்டார்கள்.?

ஆர்.பி.உதயகுமார்

பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு நிறைவேறி உள்ளது. அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். இன்று இந்த சட்ட மசோதா கொண்டு வந்ததை எடப்பாடியாரும் வரவேற்று உள்ளார்.

மகளிர் உரிமை தொகைக்காக ஒவ்வொரு வருவாய் வட்டாச்சியர் அலுவலகங்களிலும் பெண்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல இரண்டரை கோடி குடும்ப அட்டைதார்களுக்கும் மகளிர் உரிமை தொகையை கொடுக்க வேண்டும்" என பேசினார்.



from India News https://ift.tt/0ZM46yA

No comments