Breaking News

``நம்பகமான காரணம் இருக்கிறது; அதனால்தான் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்" - கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், இந்தியா - கனடாவின் உறவு சிக்கலை சந்தித்திருக்கிறது. கனட குடியுரிமைப் பெற்ற ஒருவரை இந்திய அரசின் உளவுப் பிரிவு கொலை செய்திருக்கலாம் என்றும், இதற்கு பின்னணியில் இந்திய அரசு இருக்க வாய்ப்பிருக்கிறது என கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த திங்கள் கிழமை கனட நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இந்தியத் தூதரக அதிகாரியையும், கனடாவைவிட்டு வெளியேற்றினார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

ஆனால், கனடாவின் குற்றச்சாட்டை மறுத்த இந்திய அரசு, கனடாவின் நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் விதத்தில் கனட தூதரகத்தின் அதிகாரியும் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. மேலும், கனடாவிலுள்ள அனைத்து இந்தியர்கள் மற்றும் அங்கு செல்லவிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படியும் கேட்டுக்கொண்டது. இதற்கு பதிலளித்த கனடா அரசு, "உலகில் மக்களுக்குப் பாதுகாப்பான நாடுகளில் கனடாவும் ஒன்று" எனத் தெரிவித்திருந்தது. மேலும், கனடாவில் உள்ள இந்தியாவின் விசா செயலாக்க மையம் நேற்று முதல் அதன் சேவைகளையும் நிறுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான கனடாவின் நிரந்தர தூதுக்குழுவின் செய்தியாளர் சந்திப்பின் போது, கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,"நான் நாடாளுமன்றத்தில் கூறியது போல, கனேடிய மண்ணில் கனேடியர் ஒருவரின் கொலையில் இந்திய அரசின் முகவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நம்புவதற்கு, நம்பகமான காரணங்கள் உள்ளன. சர்வதேச விதிகள் அடிப்படையில், ஒழுங்கைக் கடைபிடிக்கும் கனடாவைப் பொருத்தவரை, இந்த விவகாரம் மிகவும் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

பிரதமர் மோடி, ஜஸ்டின் ட்ரூடோ

எங்களிடம் நேர்மையான, சுதந்திரமான நீதிபதிகள் மற்றும் வலுவான செயல்முறை திட்டங்கள் இருக்கின்றன. எனவே, இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறும், இந்த விஷயத்தில் முழு வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்குமாறும், நீதியை உறுதிப்படுத்தவும் எங்களுடன் இணைந்து செயலாற்றுமாறும் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம். கனேடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, எங்களின் மதிப்பையும், சட்டத்தையும் காப்பாற்ற தேவையான பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம். அதில்தான் இப்போது எங்கள் கவனம் இருக்கிறது.

நாங்கள் சட்டத்தின் ஆட்சிக்காக நிற்கிறோம். எந்தவொரு நாடும் தனது சொந்த மண்ணில் தனது குடிமகனை பலி கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, இதுபோன்ற விவகாரங்களில் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட நாடான கனடாவில், நீதிச் செயல்முறைகள் மிகுந்த நேர்மையுடன் செயல்படுவதற்கு அனுமதிப்பது அத்தியாவசியம் என நினைக்கிறேன். இந்தியப் பிரதமருடன் நான் நேரடியாகவும் வெளிப்படையாகவும் உரையாடி, எனது கவலைகளை பகிர்ந்திருக்கிறேன். எங்களுடன் ஒத்துழைக்க கேட்டிருக்கிறேன்" என்றார்.

நரேந்திர மோடி, ஜஸ்டின் ட்ரூடோ

கனடப் பிரதமர் இந்தியப் பிரதமருடன் உரையாடியது குறித்துப் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "கனடாவுக்கு இந்தியாவிடம் இருக்கும் குற்றச்சாட்டு குறித்து கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். பிரதமர் மோடி, அந்தக் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கிறார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கனடா எந்த குறிப்பிட்ட தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒருவேளை எங்களுக்கு அத்தகைய தகவல்கள் அளித்தால், அது குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம். பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கனடாவை இந்தியா கேட்டுக்கொள்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.



from India News https://ift.tt/klCr5Md

No comments