`கழிவுநீர் அகற்றும்போது இறந்தால், ரூ.30 லட்சம் இழப்பீடு!' - உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன?
கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடும்போது தொழிலாளர் உயிரிழந்தால், அவருக்கு குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
அசாதாரணமான அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்திருக்கும் இந்தக் காலத்தில், Cashless Economy, Digital INDIA, Artificial intelligence என எல்லாத்துறைகளிலும் மிதமிஞ்சிய வளர்ச்சி என மார்தட்டிக்கொண்டாலும்கூட `மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தை' மட்டும் எந்த அரசுகளாலும் ஒழிக்கமுடியவில்லை. ஒவ்வோர் ஆண்டும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்செய்யும்போது, விஷவாயு தாக்கி உயிரிழக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏற்றமும் இறக்கமுமாக இருந்துகொண்டுதான் இருக்கிறது.
என்னதான் இந்திய அரசு, இந்தக் கொடிய நடைமுறையைத் தடுப்பதற்காக `மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டத்தை (Manual Scavengers Deaths Prevention Act)' 2013-ம் ஆண்டு கொண்டுவந்திருந்தாலும், அதைமீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தாலும், இந்த அவல நிலையை முற்றிலும் அகற்றுவதிலிருந்து அரசு இயந்திரங்கள் தோல்விதான் அடைந்திருக்கின்றன.
குறிப்பாக, 2022-ம் ஆண்டு மலக்குழி மரணங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் `சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை' இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ``கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் 325 பேர் உயிரிழந்திருக்கின்றனர்" எனத் தெரிவித்தார். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் அதிர்ச்சித் தகவலும் வெளியானது.
இது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ``தமிழ்நாடு பல்வேறு சமூக பொருளாதார குறியீடுகளில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும், கழிவுநீர் தொட்டிகளைச் சுத்திகரிக்கும்போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைத் தடுப்பதில் பின்தங்கியே இருக்கிறோம். அதைத் தவிர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது. தமிழ்நாட்டில், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாம் முன்னணியில் இருக்கிறோம். அப்படியிருக்கும்போது, நம்மால் ஏன் இந்த அவலநிலையை மாற்ற முடியவில்லை என்பதை நாம் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாதாளச் சாக்கடைகளையும், கழிவுநீர் தொட்டிகளையும் மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை மானுடத்திற்கே களங்கமாய் விளங்குகிறது. இது குறித்து உண்மையிலேயே நான் மிகுந்த கவலை கொள்கிறேன்!" என வேதனை தெரிவித்தார்.
இந்த நிலையில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறைகளை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்குப் புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதாவது, கழிவுநீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், படுகாயமடைந்து நிரந்தர உடல் பாதிப்பு அடைந்தால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருக்கிறது. மேலும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே 2003-ம் ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனுமீது, உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், `கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்' என தீர்ப்பளித்ததும் குறிப்பிடத்தக்கது.
`நீதி என்பது நிவாரணமல்ல... இந்த அவல நிலையை முற்றிலுமாக ஒழிப்பதே!' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
from India News https://ift.tt/yQI81PV
No comments