Breaking News

காவிரி: களத்தில் இறங்குவாரா... தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்?!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

நம் எல்லையில் மல்லுக்கட்டி நிற்கும் பாகிஸ்தான்கூட, தண்ணீர் விஷயத்தில் முரண்டு பிடிப்பதில்லை. ஆம், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையே ஓடும் பியாஸ், சட்லஜ், ராவி, செனாப், ஜீலம் மற்றும் சிந்து ஆகிய ஆறுகளின் நீரை இருநாடுகளும் சத்தமில்லாமல் பகிர்ந்துகொள்கின்றன. ஆனால், எதற்கு எடுத்தாலும் ‘ஒரே நாடு’ என்று ஒரே போடாகப் போடப்படும் இந்திய நாட்டில், காவிரி நீர் பிரச்னை நூற்றாண்டு பிரச்னையாக நீடிக்கிறது.

தாங்கள்தான் தேசியத்தைக் காக்க வந்த தியாகச் செம்மல்கள்போல பேசும் காங்கிரஸும் பி.ஜே.பி-யும்தான், இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்பதே நிதர்சனம். குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற குறுகிய எண்ணத்தோடு பி.ஜே.பி, காங்கிரஸ் இரண்டுமே ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் காவிரிப் பிரச்னையைக் கிளறிவிட்டு அரசியல் லாபம் தேடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளன.

காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்னை பல கட்டங்களைக் கடந்து, சட்டபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனடிப்படையில் நீர் பங்கீடு நடப்பதை உறுதிப்படுத்துவது மட்டும்தான் மாநில அரசாங்கங்களின் வேலை. குறிப்பாக, வறட்சி காலங்களில் நீரை எப்படி பகிர்ந்துகொள்வது என்பதை நடுவர் மன்றமும் நீதிமன்றமும் இறுதி செய்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. இதைத்தான் ஏற்று செயல்படுத்த வேண்டும். ஆனால், கர்நாடகத்திலிருக்கும் பி.ஜே.பி, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே ‘காவிரி ஆறு, கர்நாடகாவுக்கு மட்டுமே சொந்தம்’ என்கிற மாயப் பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளன.

‘நதிநீரில், கடைமடை பகுதிக்குதான் அதிக உரிமை’ என்பது உலகளாவிய சட்டம்... இயற்கை நீதி. அந்த வகையில், தமிழ்நாட்டுக்குதான் அதிக உரிமை என்கிற உண்மையை, அங்குள்ள எந்த அரசியல் கட்சியும் தன் மக்களிடம் எடுத்துச் சொன்னதே இல்லை. மக்களை உணர்ச்சி கொந்தளிப்பிலேயே வைத்து வாக்கு வேட்டையாட விரும்பும் அரசியல் வியாபாரிகள், ஒருபோதும் உண்மையைச் சொல்ல மாட்டார்கள்தானே. அதனால்தான் காவிரி என்றதுமே... லெட்டர்பேடு கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை அங்கே குறுகிய மனப்பான்மையோடு போராட்டங்களை முன்னெடுக்கின்றன. தமிழர்கள் மற்றும் தமிழகத்துக்கு எதிரான விஷயங்களையும் கையில் எடுக்கிறார்கள்.

‘தேசிய நீரோட்டம்’ பேசும் காங்கிரஸின் மேலிடத் தலைவர்களும் சரி... ‘ஒரே நாடு’ கோஷத்தை ஓயாமல் ஒலிக்கவிடும் பி.ஜே.பி-யும் சரி, இந்த விஷயத்தில் தங்களுடைய கட்சியின் கர்நாடக கிளைத் தலைவர்களையோ... தொண்டர்களையோ ஒருபோதும் தட்டிக்கேட்பதில்லை.

அரசியல் கட்சிகளை, லெட்டர் பேடு இயக்கங்களை, சினிமா கும்பல்களை விட்டுவிடலாம்... ஆனால், மாநிலத்தை ஆளும் அரசாங்கமே சட்டத்தை மதிக்காதபோது... களத்தில் இறங்கித்தானே ஆக வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் எதையும் சிறிதுகூட மதிக்காத கர்நாடக அரசு மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழ்நாடு அரசு தொடர்வது ஒன்றே இறுதி முடிவு. இதன் மூலம் கர்நாடகாவில் ஆட்சியையே கலைக்க வைக்க முடியும். நீதிமன்ற அனுமதியுடன் துணை ராணுவத்துடன் கர்நாடக மாநிலம் சென்று காவிரியின் குறுக்கே இருக்கும் அணைகளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முடியும்.

சட்டமும் உரிமையும் தமிழ்நாட்டுக்குச் சாதகமாக இருக்கும் சூழலில், இனி பேச்சுவார்த்தை என்கிற பேச்சே ஒருபோதும் இருக்கக் கூடாது. நூறாண்டுகளாகப் பேசியாகிவிட்டது. ஆக, இனி ஒரே தீர்வு சட்டத்தீர்வு மட்டுமே. அதை நாம் உடனடியாகச் செய்ய வேண்டும் என்பதே காவிரியால் பலன்பெறும் அனைத்து மக்களின் ஒரே கோரிக்கை.

களத்தில் இறங்குவாரா... தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்?!

- ஆசிரியர்

கார்ட்டூன்


from India News https://ift.tt/Pez0gsW

No comments