Breaking News

புதுச்சேரி: ``சுற்றுலா, ரெஸ்டோ பார் என்ற பெயரில் பாலியல் தொழில்” – சாடும் அதிமுக

புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``சுற்றுலா என்ற பெயரில் புதுச்சேரி மாநிலத்தின் கலாசாரமும், பெண்களின் பாதுகாப்பும் சீரழிக்கப்பட்டுவிட்டது. மாநிலம் முழுவதும் ரெஸ்டோ பார், மசாஜ் கிளப்புகள், ஸ்பா, பப், கேபரே நடனம் மற்றும் அதன் தொடர்ச்சியாக பாலியல் தொழிலும் தங்குதடையின்றி நடக்கிறது. புதுச்சேரியை ஆளும் அரசின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தாங்கள் நடத்தும் மதுபானக் கூடங்களில் பெண்களை வைத்து பாலியல் தொழிலை செய்து வருகிறார்கள். தனியார் பள்ளிகளில் படிக்கும் இளம் மாணவிகளை ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றின் மூலம் தொடர்பு கொண்டு, அந்த பெண்களை ஏமாற்றி துன்புறுத்துவது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. அப்படி பாதிக்கப்பட்ட பெண்களிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, ‘என் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இப்படி துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள்’ என்று பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றனர்.

புதுச்சேரி அரசு

இது மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து புதுச்சேரிக்கு வந்து தங்கி படிக்கின்ற மற்றும் வேலை செய்கின்ற அப்பாவி பெண்களை, சுற்றுலா என்ற பெயரில் அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் தள்ளிவிடுகின்றனர். அவர்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதுபோல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றை தடுக்க வேண்டிய காவல்துறை, கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறது. பல சட்டமன்ற உறுப்பினர்களும், ஆளுங்கட்சியில் உள்ள பல அரசியல் பிரமுகர்களும் தங்களின் தனிப்பட்ட வருமானத்திற்காக ரெஸ்டோ பார், மதுபானக் கூடங்கள், மசாஜ் சென்டர்களை நடத்துவதால், காவல்துறை உயரதிகாரிகள் அதை பார்வையாளராக நின்று பார்த்து வருகின்றனர். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் புதுவை மாநிலம் முழுவதும் கலாசார சீரழிவு ஏற்படுவதுடன், புதுவை என்றாலே மது, மாது, குத்தாட்டம் என்கின்ற எண்ணம்தான் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்படும். புதுச்சேரி பெண்களை திருமணம் செய்ய நினைக்கும் வேறு மாநிலத்தவர்கள், யோசிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, துணைநிலை ஆளுநர் இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது தவறான ஒன்றாகும்.

வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு அன்று அரைகுறை ஆடையோடு பெண்கள் வெளியே சுற்றுவதும், மது குடித்துவிட்டு தள்ளாடியபடி செல்வதும் அரங்கேறி வருகிறது். எனவே காவல்துறை உயர் அதிகாரியும், ஒரு பெண்ணாக இருக்கும் துணைநிலை ஆளுநரும் இந்த கலாசார சீரழிவை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய மார்க்கெட் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்படும் என கடந்த ஐந்து மாதங்களாக சொல்லி வருகின்றனர். ஆனால் இதுவரை போடப்படவில்லை. யார் அதை தடுக்கிறார்கள், அரசு ஏன் மெத்தனம் காட்டுகிறது என்று தெரியவில்லை. `இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்று சேர்த்து, இவர்கள் அடிக்கும் நாடகம் தெரிந்தும் ஏன் அரசு மவுனம் காக்கிறது என தெரியவில்லை. ஒரு மீன் மார்க்கெட் கட்டுவதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருக்கிறது. ஆனால் இப்படியான கலாசார சீரழிவை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறை முனைப்பு காட்டாதது ஏன்... அது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் வித விதமான போதைப்பொருள்கள் மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவற்றை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். காமாட்சி அம்மன் கோயில் நில விவகாரத்தில், நீதிமன்றம் நேரடியாக தலையிடும் வரை ஏன் அரசு அமைதி காக்கிறது... சட்டத்தினுடைய ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும். அரசின் போர்வையில் கொள்ளையடிப்பவர்களிடம் இந்த அரசு மண்டியிடுகிறது. முழுக்க முழுக்க இந்த பா.ஜ.க அரசு, தி.மு.க மற்றும் சமூக குற்றப் பின்னணியில் உள்ளவர்களுக்கு துணை போகிறது. முதலமைச்சர் ரங்கசாமி விழித்துக் கொள்வது நல்லது. பல குற்றச் சம்பவங்கள் கண்ணுக்கு தெரியாமல் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

அனைத்து விஷயத்திற்கும் பரிதாபப்பட்டால், பின்னாளில் அனைத்தும் முதலமைச்சர் தலையில்தான் வந்து விழும். முதலமைச்சர் ரங்கசாமி சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சட்டப்பேரவை நிலம் விவகாரத்தில், காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் குறித்து சி.பி.ஐ விசரணைக்கு அனுப்பி உள்ளேன் என்று சபாநாயகர் கூறினார். ஆனால் அதன்பிறகு அது குறித்து எந்த தகவலும் இல்லை. உண்மையில் சபாநாயகர் சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்பினாரா அல்லது அந்த விவகாரத்தில் சமாதானம் செய்வதற்காக பணம் ஏதாவது கைமாறியதா?" என்றார்.



from India News https://ift.tt/R1gfL0P

No comments