Breaking News

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: 500-க்கும் மேற்பட்டோர் பலி; தொடரும் தாக்குதல்- அவசரக்கூட்டத்தை கூட்டும் ஐ.நா

1967-ம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போருக்குப் பிறகு இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட காஸா பகுதி, யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை காரணமாக, இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு மத்தியில் பல ஆண்டுகளாக சிக்கல் இருந்துவருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா முனை ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஹமாஸ் அமைப்பைப் பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. மேலும் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்

இந்தப் பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்குமிடையே மோதல் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வது வழக்கமாக இருந்துவந்தது. இந்த நிலையில், தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் உச்சமடைந்திருக்கிறது. சனிக்கிழமை காலை 6:30 மணி முதல் பாலஸ்தீனத்தின் காஸாவிலிருந்து ஹாமஸ் குழு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. அதனால், இஸ்ரேல் ‛ஸ்டேப் ஆஃப் வார்' என அறிவித்திருக்கிறது. ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலில் ஊடுருவி துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ 22 இடங்களில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கும் நூற்றுக்கணக்கான ஹமாஸ் குழுப் போராளிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்ட நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலிலும், 230-க்கும் மேற்பட்டோர் பேர் பாலஸ்தீனத்திலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிரச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant, ``இஸ்ரேல்மீது ஹாமஸ் குழு வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இன்று, தீமையின் முகத்தைப் பார்த்தோம். ஹமாஸ் குழு பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று பாகுபாடின்றி தாக்குதலைத் தொடுத்தது. அது மாபெரும் தவறு என்பதை மிக விரைவில் உணரும். காஸாவில் உள்ள ஹமாஸ் கோட்டைகளை இடித்து தரைமட்டமாக்குவோம்" என சபதமேற்றிருக்கிறார்.

இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு, "நான் காஸா மக்களுக்குச் சொல்கிறேன்: இப்போது நீங்கள் அங்கிருந்து வெளியேறுங்கள், ஏனென்றால் நாங்கள் எல்லா இடங்களிலும் எங்கள் முழு பலத்துடன் செயல்படப் போகிறோம், இஸ்ரேல் மற்றும் அதன் மக்கள்மீதான இந்த கறுப்பு நாளில் அவர்களுக்கு கசப்பான அனுபவமாக மாற்றுவோம். பலவந்தமாக பழிவாங்குவோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரக் கூட்டத்தை திட்டமிட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க நட்பு நாடான இஸ்ரேலுக்கான தனது ஆதரவை, ``இஸ்ரேலின் எந்த எதிரிகளும் தற்போதைய இந்த நிலைமையைப் பயன்படுத்தி, இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படக் கூடாது" எனத் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் எக்ஸ் பதிவில், "இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேலுடன் ஒற்றுமையாக இருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்திருப்பதை, இஸ்ரேல் வரவேற்றிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/jM2N0vw

No comments