Breaking News

பற்றவைத்த ஆளுநர் ரவி... பாய்ந்த திமுக! - நாயக்கனேரி ஊராட்சிமன்றப் பிரச்னையும், பின்னணியும்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள நாயக்கனேரி என்ற மலைக் கிராமத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் பதவி, பட்டியலினச் சமூகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு, பழங்குடியினப் பிரிவினர் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். 2021-ம் ஆண்டு, ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது நாயக்கனேரி ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இந்துமதி போட்டியிட்டார்.

இந்துமதி

ஆனால், தாங்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது, அந்த ஊராட்சித் தலைவர் பதவி பட்டியலினப் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டதால், அதற்கு பழங்குடியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பழங்குடி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். அதற்கு மத்தியில், ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இந்துமதி என்ற ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனால், அவர் போட்டியின்றி தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில், எதிர்த்தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். இந்த நிலையில், ஊராட்சித் தலைவராக இந்துமதிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்படவில்லை. ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும், இந்தப் பிரச்னையில் தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்துமதி தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

கணவர் பாண்டியனுடன் இந்துமதி

இந்த நிலையில்தான், நாயக்கனேரி விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, நாயக்கனேரி விவகாரம் குறித்துக் கேள்வியெழுப்பியதுடன், தி.மு.க அரசை விமர்சித்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, ``தமிழ்நாட்டில் பட்டியலினப் பெண் ஊராட்சித் தலைவராகப் பதவியேற்பது தடுக்கப்படுவதாக வெளியான செய்தியைப் படித்தேன். பட்டியலினப் பெண்ணுக்கு உரிமை மறுக்கப்படுவதுதான் சமூகநீதியா... சமூகநீதியைக் காப்பதாக பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், பட்டியலின மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். சமூகத்தைப் பிளவுப்படுத்திவைத்திருக்கின்றனர்" என்றார். இந்த விவகாரம் குறித்த ஆளுநரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஊராட்சிமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துமதி பாண்டியனுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க வேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல அமைப்புகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தின. இந்துமதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கோரி, ஆம்பூரில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

வாக்களித்த இந்துமதி

அதை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் சில சட்டப் பிரச்னைகள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்தப் பிரச்னையை விரைவில் தீர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டிப் பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டின் சமூகநீதியால் பிறந்திருக்கும் அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல. அரசியல் பேச வேண்டுமென்றால், அரசியல்வாதியாக மாறி அவர் தாராளமாக அரசியல் பேசட்டும். அதற்கு பதிலடி கொடுக்க நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களும் தயாராக இருக்கிறார்கள்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் படிக்காமல் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்போல ஆளுநர் பேசுகிறார். இது தமிழ்நாடு அரசுக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படும் பொய்ப்பிரசாரம். நாயக்கனேரி ஊராட்சிமன்றம் பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலேயே அங்கு பதவியேற்பு நடைபெறவில்லை’ என்று கூறியிருக்கிறார்.

தொடர்ச்சியாக சனாதனம் குறித்துப் பேசிவந்த ஆளுநர் ரவி, சமீபகாலமாக சாதிப்பிரச்னைகள் குறித்து அதிகமாகப் பேசிவருகிறார். வேங்கைவயலில் பட்டியலின மக்களின் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம், நாங்குநேரியில் பட்டியலினச் சமூக மாணவன் சக மாணவர்களால் வெட்டப்பட்ட பிரச்னை உட்பட பல பிரச்னைகளை ஆளுநர் ரவி கிளப்பியிருக்கிறார். இதனால், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தி.மு.க அரசுக்கும் இடையிலான உஷ்ணம் மேலும் அதிகரித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/QvhDIS9

No comments