Breaking News

`நானும் போய்விட்டால் யார் சிகிச்சையளிப்பார்கள்?!’ - இஸ்ரேல் போரில் பலியான பாலஸ்தீன டாக்டர்

ஹமாஸ் குழு தொடங்கிய தாக்குதலை தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் காஸாவில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நிறுத்தாமல் போர்தொடுத்து வருகிறது இஸ்ரேல். இதில், சிறுவர்கள், குழந்தைகள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து உயிரிழந்துகொண்டிருக்க, மருத்துவமனைகளில் பிணவறையில் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன. மருத்துவமனை வளாகங்கள் எங்கிலும் நோயாளிகள் உணவு, தண்ணீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்துவருகினறனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம்

இந்த நிலையில், காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் பணியாற்றிவந்த பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர் ஹம்மாம் அல்லோ (Hammam Alloh), இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து, இறப்பதற்கு முன் அவர் கொடுத்த உருக்கமான பேட்டியொன்றை டெமாக்ரசி நவ் (Democracy Now) என்ற ஊடகம் வெளியிட்டிருக்கிறது.

அந்தப் பேட்டியில், ``வடக்கு காஸாவில் இருப்பவர்கள் தெற்கு காஸாவுக்கு இடம்பெயருமாறு இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாகக் கூறிவருகிறது. நீங்கள் ஏன் உங்கள் குடும்பத்துடன் தெற்கு காஸாவுக்கு செல்லவில்லை?" என்று ஹம்மாம் அல்லோவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஹம்மாம் அல்லோ, ``நான் சென்றுவிட்டால் என்னுடைய நோயாளிகளுக்கு யார் சிகிச்சையளிப்பார்கள். நாம் ஒன்றும் மிருகங்களல்ல, முறையான மருத்துவ சேவைகளைப் பெற நமக்கு உரிமை இருக்கிறது. எனவே, நாம் அப்படியே விட்டுச் செல்லமுடியாது" என்று கூறியவரிடம், ``உங்கள் குடும்பத்தை எப்படி ஆறுதல்படுத்துகிறீர்கள்... நீங்கள் மருத்துவமனையில் இருப்பதால் உங்கள் குடும்பத்துக்கு என்ன நடக்கிறது" என்று கேள்வியெழுப்பட்டது.

ஹம்மாம் அல்லோ - பாலஸ்தீன டாக்டர்

அதற்கு, ``எங்களைப் போன்று வாழ்ந்த பல்லாயிரம் பேர் அகதிகளாக கழிவு நீர், குப்பைகளால் சூழப்பட்டிருக்கின்றனர். அவர்களைப் பாதுகாக்க வீடுகளும் கதவுகளும் இல்லை. அவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் கூட இல்லை. அவர்களில் பலர், தங்கள் குடும்பங்களிலிருந்து வழிதவறி வந்தவர்களே. தற்போது இவர்கள் உயிரோடு இருக்கின்றனரா என்பது கூட அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரியாது. எனவே, `நமக்கு வீடு என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அப்படி எதுவும் இல்லை' என்று என் குடும்பத்திடம் கூறுவேன். மருத்துவமனையில் இருக்கும் அகதிகளுடன் ஒப்பிடுகையில் என்னுடைய 4 வயது மற்றும் 5 வயது குழந்தைகள் நல்ல சூழலில் இருக்கின்றனர். இந்த யதார்த்தத்தை அவர்களும் ஏற்றுக்கொள்கின்றனர்" என்று ஹம்மாம் அல்லோ கூறினார்.

அதைத்தொடர்ந்து, ``நோயாளிகளை விட்டுவிட்டு, மருத்துவர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையைக் கவனிக்குமாறு உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறதே, அதைப்பற்றி நீங்கள் கூற முடியுமா... ஏனெனில், இதுவரை பல நோயாளிகளால் மருத்துவமனையை விட்டு வெளியேற முடியவில்லை... உதாரணமாக இன்குபேட்டர்களில் இருக்கும் குழந்தைகள்" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு...

ஹம்மாம் அல்லோ - பாலஸ்தீன டாக்டர்

``மருத்துவ படிப்பு, மருத்துவ மேற்படிகளுக்காக 14 ஆண்டுகள் ஓடியிருக்கிறேன். அதனால், நோயாளிகளைப் பற்றி நினைக்காமல், என் வாழ்க்கையைப் பற்றி மட்டுமே நான் யோசிக்கிறேன் என்று நினைக்கிறீர்களா... என் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க மட்டுமே மருத்துவம் படித்தேன் என்று நினைக்கிறீர்களா... நான் மருத்துவரானதற்குக் காரணம் இதுவல்ல" என்றார் ஹம்மாம் அல்லோ.

இறுதியாக, ``இந்த நேரத்தில் அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் நீங்கள் கூற விரும்புவதென்ன" என்று கேட்கப்பட்ட போது, ``முதலில், இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும். ஏனெனில், நாம் அனைவரும் மனிதர்கள், விலங்குகளல்ல. சுதந்திரமாக வாழ உரிமை இருக்கிறது. இரண்டாவதாக, நீங்களும் உங்கள் குடிமக்களும் இந்தச் சூழ்நிலையில் வாழ்ந்தால், அவர்களுக்காக நீங்கள் என்ன செய்வீர்களோ... அதை ஒரு வல்லரசு நாடாக, அமெரிக்காவாக எங்களுக்காகச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

பைடன் - நெதன்யாகு

அமெரிக்க குடிமக்களைப் போலவே நாங்களும் மனிதர்கள்தான். மனித, சுகாதாரப் பேரழிவுகள், நெருக்கடிகளுக்கான தீர்வுகள் போன்றவற்றை நாங்கள் முன்னரே எதிர்பார்த்தோம். நாங்கள் அழிக்கப்படுகிறோம். ஆனால், மனித உரிமைகளில் அக்கறை காட்டுவது போல நீங்கள் நடிக்கிறீர்கள். தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள்" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/PwDtWCM

No comments