Breaking News

`கொழுப்பின் அளவைக் குறைத்து, ஒவ்வொரு பால் பாக்கெட்டிலும் கொள்ளையடிக்கின்றனர்!' - பாயும் அண்ணாமலை

"தனியார் பால் நிறுவனங்களுக்கும் ஆவினுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது. மனோ தங்கராஜ் அரசியலில் இருப்பது, தமிழக மக்களின் சாபக்கேடு, மனோ தங்கராஜின் நாள்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன" என்று கடுமையாக விமர்சித்துள்ளார், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

செய்தியாளர் சந்திப்பு

மதுரையில் 'யெங் இந்தியன்' என்ற அமைப்பினர் நடத்திய தொழில்துறை கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது.... "அமைச்சர் மனோ தங்கராஜ் மீண்டும் தங்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளாரே?" என்ற கேள்விக்கு,

"தி.மு.க-வில் கோழைகள் மட்டுமே உள்ளனர். பிரதமர் குறித்த ட்வீட்டை அழித்துவிட்டு ஓடியவர், மனோ தங்கராஜ். தமிழ்நாட்டு அரசியலில் அடிப்படையில் ஒரு நாகரிகம் தேவை. தி.மு.க-வினர் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். காமராஜரை அவதூறு மூலம்தான் தோற்கடித்தனர். கொழுப்பின் அளவைக் குறைத்ததன் மூலம், ஒவ்வோர் ஆவின் பால் பாக்கெட்டிலும் 10 முதல் 12 ரூபாய் கொள்ளையடிக்கின்றனர். பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் வாங்கும்போது அதில் கொழுப்புச்சத்து குறைவாக இருந்தால், விலை குறைத்து வாங்குகிறார்கள். அப்படியிருக்கும்போது மக்களுக்கு வழங்கும் பாலில் மட்டும் கொழுப்பைக் குறைத்து விற்பது ஏன்?

இந்தியா முழுவதும் அமுல் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அந்தக் கூட்டுறவு பால் நிறுவனத்தின் 65 சதவிகித லாபம், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், ஆவின் அப்படி அல்ல. தனியார் பால் கம்பெனிகளுக்கும் ஆவினுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது. மனோ தங்கராஜ் அரசியலில் இருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு. மனோ தங்கராஜின் நாள்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன, ஐ.டி அமைச்சராக இருந்தபோது அவர் செய்த ஊழலை, ஆளுநரிடம் கொடுத்து உள்ளோம்" என்றவரிடம்,

அண்ணாமலை

"உங்களுடன் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க நிர்வாகிகளும்  `நாவடக்கம் தேவை' என்று விமர்சிக்கிறார்களே?" என்றதற்கு,

"நாங்கள் மக்களுக்காக அரசியல் செய்கிறோம். எனவே அது காரசாரமாகத்தான் இருக்கும். மரியாதை கொடுத்தால் நாங்களும் மரியாதை கொடுப்போம். இது பழைய பா.ஜ.க அல்ல, நானும் பழைய பா.ஜ.க-காரன் அல்ல. நான் பேசுவது பிடிக்கவில்லையென்றால், காதுகளை மூடிக்கொள்ளுங்கள்.'' என்றார்.

"இரண்டாவது முறை அனுப்பிய மசோதாக்களையும் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக, அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளாரே?" என்ற கேள்விக்கு,

"பொய் சொல்வதில் கில்லாடி, அமைச்சர் ரகுபதி. நான் ஆரம்பத்திலேயே சொன்னேன், ஆன்லைன் ரம்மி சட்டம் பிழையானது எனத் தெரிந்தும் ஆளுநருக்கு அனுப்பிவைத்தனர். பொய்யான மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிவைத்தனர். துணைவேந்தர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் உடனே கையெழுத்து போடவில்லை என்றால், தமிழக அரசு நிர்வாகமே முடங்கி விடுமா... ஆளுநர் கிடப்பில் வைத்திருந்த மசோதாக்கள் எவற்றால் அரசின் நிர்வாகம் முடங்கி விடும் என சொல்லுங்கள்... மசோதாவை சரியாக வடிவமைக்க முடியவில்லை. பெரும்பான்மை இருப்பதால் எந்த மசோதாவையும் கொண்டு வருவோம் என்றால், அதை அனைத்தையும் ஏற்க வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை" என்றவர்,

அண்ணாமலை

"தி.மு.க பலமுறை ஆட்சியில் இருந்தும், திருடுபோன 13 சிலைகளை மட்டுமே மீட்டுள்ளனர். இப்போது கோயில் சொத்துகளை மீட்டுள்ளதாக சொல்கிறார்கள். அதில் பா.ஜ.க-வினர் கோயில் சொத்துகளை ஆக்கிரமித்திருந்தாலும் நடவடிக்கை எடுங்கள், வரவேற்கிறேன். அதில் 3 சதவிகிதம் பா.ஜ.க-வினர் இருக்கலாம், மீதமுள்ள 97 சதவிகிதம் பேர் தி.மு.க-வினர்தான். ஆயிரம் கோயில்களுக்கு கும்பாபிசேகம் நடைபெற்றதற்கும் தி.மு.க-வுக்கும் என்ன தொடர்பு... கோயில் உண்டியலில் வரும் பணத்தை வைத்து குடமுழுக்கு நடத்தி மக்களை முட்டாளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

கோயில் வருவாயை வைத்து என்ன செய்ய வேண்டும் என்றால், அந்த கோயிலை ஒட்டியுள்ள மக்கள் பயன்படும் வகையில்தான் செலவிட வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. கோயில் பணத்தில் அதிகாரிகளுக்கு அலுவலகம், கார் வாங்குவது அறநிலையத்துறை சட்டத்திலேயே கிடையாது.

அமைச்சர் மனோ தங்கராஜ்

நிதி மோசடி வழக்குகளில் சிக்கியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முதலில் புகார் கொடுத்தது நாங்கள்தான். முத்துராமன் பா.ஜ.க-வே கிடையாது, அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். அதுபோல் ஆர்.கே.சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சியிலும், அனைத்து துறைகளிலும் தவறானவர்கள்  இருப்பார்கள், அதற்காக ஒட்டுமொத்தமாக குற்றம்சாட்ட முடியாது. முதலமைச்சர் தன்னை பிராமணர்கள் பேஷ் பேஷ் என்று பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறார். நடைபயிற்சி செல்லும்போது, ஒரே பிராமண தாத்தா தினமும் வாழ்த்து சொல்கிறார். பிராமணர் வாழ்த்தை பெற்று ஆட்சியை விளம்பரப்படுத்த முயல்கிறார் முதலமைச்சர். கிரிக்கெட் வெற்றி, தோல்வியை சரியாக கையாள நம் நாட்டு மக்களுக்கு மனப்பக்குவம் வர வேண்டும். கபில்தேவை கூப்பிடவில்லை, தோனியை கூப்பிடவில்லை என்று சொல்வது தேவையில்லாதது. ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாகத்தான் பார்க்கிறார்கள். அவர்களை வரவேற்க யாரும் வரவில்லை, நம் நாட்டில்தான் கிரிக்கெட்டை, சினிமாவை உயரத்தில் வைத்துள்ளோம்.  கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும்" என்றார்.



from India News https://ift.tt/9CrBPUN

No comments