தமிழ்நாடு கேட்டது ₹5,060 கோடி; கிடைத்தது ₹450 கோடி; மத்திய அரசின் செயல்பாடு சரியா?
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க
“எப்போதும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு, மிக்ஜாம் புயல் நிவாரண விஷயத்தில் இன்னும் மோசமாக வஞ்சித்திருக்கிறது. ஒரு பேரிடர் காலத்தில் மக்களுக்கான நியாயமான நிவாரணத் தொகையாக ரூ.5,060 கோடி கேட்டோம். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு எந்தச் சிறப்புத் தொகையையும் வழங்காமல், மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ஒதுக்கிய 450 கோடி ரூபாயை மட்டுமே கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தொகை புயல் பாதிப்பே இல்லாமல் போனாலும், ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய தொகைதான். அதை முன் தேதியிட்டு வழங்குவதாகச் சொல்லிவிட்டு, ஏதோ புயல், வெள்ள நிவாரணத்துக்காகச் சிறப்பு நிதி ஒதுக்கியதுபோல நாடகமாடுகிறார்கள். சென்னை பாதிப்பை, பேரிடராக அறிவிக்கக்கூட ஒன்றிய அரசுக்கு மனமில்லை. குஜராத், உத்தரப்பிரதேசம் என பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்குச் சிறப்பு நிதிகளை வாரி வழங்குகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. ஆனால், தமிழ்நாடு, கேரளா என்று வரும்போது நியாயமான நிதியை வழங்கக்கூட ஒன்றிய அரசுக்கு மனம் வருவதே இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெயும், மறு கண்ணில் சுண்ணாம்பும் தடவும் ஒன்றிய பா.ஜ.க அரசின் காழ்ப்புணர்ச்சி அரசியலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். `வரி வசூல் செய்வதற்கு மட்டும் நாங்கள் வேண்டுமா?’ என்று கோபத்திலிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். விரைந்து ஆய்வுசெய்து நியாயமான நிவாரணத் தொகையை விடுவிக்கவேண்டியது ஒன்றிய அரசின் கடமை.”
நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க
“ஏதாவது ஓர் இயற்கைப் பேரிடர் வரும்போதெல்லாம் இந்த விவாதம் எழுகிறது. பேரிடர் நிவாரண நிதி என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்காக உடனடியாக வழங்கப்பட வேண்டியது. அவர்களுக்கு, உடை, உணவு, இருப்பிடம் போன்றவற்றுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. இந்தப் பேரிடர் நிவாரண நிதி அளவை, ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து பேசி முடிவுசெய்திருக்கின்றன. அந்த முடிவுசெய்யப்பட்ட தொகைதான் உடனடியாகக் கொடுக்கப்படுகிறது. மற்ற பாதிப்புகளுக்கு அந்தந்த அமைச்சகங்கள் மூலம் நிவாரணம் வழங்கப்படும். இவை எதுவுமே தெரியாததுபோல ஒரு மாநில அரசு பேசுவது முற்றிலும் தவறு. மத்தியக் குழு இப்போதுதான் சென்னையில் ஆய்வுசெய்துவருகிறது. அதன்படி, மின்சாரத் துறை, வேளாண்துறை என ஒவ்வொரு துறைக்குமான பாதிப்புகளுக்கு அந்தந்தத் துறை சார்பில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பணத்திலிருந்து நிவாரணம் வழங்கப்படும். இது பற்றிய அனைத்துத் தகவல்களும் தெரிந்து தி.மு.க அரசு மலிவான அரசியல் செய்துகொண்டிருக்கிறது. முந்தைய பேரிடர்களிலிருந்து தி.மு.க அரசு எதையும் கற்றுக்கொள்ளவில்லை. புயல், வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் இந்த அரசு முறையாகச் செய்யவில்லை. மீட்புப்பணியிலும் நிர்வாகரீதியாகத் தோற்றுவிட்டது. ஆனால், தங்கள் தோல்வியை திசைதிருப்புவதற்காக, தேவை யில்லாமல் மத்திய அரசைக் குறை சொல்கிறார்கள். அதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.”
from India News https://ift.tt/ycoRQFO
No comments