Ambati Rayudu: ஜெகன் மோகன் முன்னிலையில் YSR காங்கிரஸில் இணைந்த அம்பத்தி ராயுடு! - 2024-ல் போட்டியா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்திருக்கிறார். இது குறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி திருப்பதி ராயுடு, முதல்வர் அலுவலகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிகழ்வின்போது, துணை முதல்வர் நாராயண சுவாமி, எம்.பி பெத்திரெட்டி, மிதுன் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்" என்று குறிப்பிட்டு, அதன் வீடியோவையும் பதிவுசெய்திருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு, நல்ல ஃபார்மில் இருந்தபோது, 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வுசெய்யப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உடனடியாக, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்தார்.
இருப்பினும், ஐ.பி.எல்-லில் சென்னை கிங்ஸ் சூப்பர் அணிக்காக தொடர்ந்து விளையாடிவந்த அம்பத்தி ராயுடு, இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல்-லில் சாம்பியனாக ஓய்வுபெற்றார். அதன் பின்னர், ஆந்திர அரசியலில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடவிருப்பதாக அம்பத்தி ராயுடு கூறிவந்தார்.
குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் முட்லூரு கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நான் விரைவில் ஆந்திர மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வருவேன். அதற்கு முன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களின் எண்ணவோட்டங்களையும், அவர்களின் பிரச்னைகளையும் அறிந்து கொள்ள முடிவுசெய்திருக்கிறேன்" என்று அம்பத்தி ராயுடு கூறியிருந்தார்.
இந்த நிலையில், சொன்னதைப்போலவே அம்பத்தி ராயுடு இன்று அரசியல் கட்சியில் சேர்ந்திருக்கிறார். லோக் சபா தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதங்களே இருக்கும் நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் அம்பத்தி ராயுடு இணைந்திருப்பதால், கட்சி சார்பாகத் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், குண்டூர் அல்லது மச்சிலிப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று பேச்சுகள் அடிபட்டாலும், அம்பத்தி ராயுடு அதனை தொடர்ந்து மறுத்துவருகிறார்.
from India News https://ift.tt/NAL3gsW
No comments