Breaking News

`பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு தேவையற்றது' என்ற அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்து?

தமிழரசி ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க

``ஒரு பெண்ணாகவும், ஒன்றிய மகளிர் நலத்துறை அமைச்சராகவும் இருந்துகொண்டு சக பெண்களின் வலியைக்கூட அவர் புரிந்துகொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அமைச்சரின் இந்தக் கருத்து அவர் வகிக்கும் பதவிக்குத் தகுதியானவரா... என்ற சந்தேகத்தையும் வலுப்படுத்துகிறது. மாதவிடாய் என்பது எப்படிப் பெண்களின் குறைபாடு இல்லையோ, அதேபோல பெண்களின் விருப்பத் தேர்வும் அல்ல. இதை அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். சமூக நீதித் திட்டங்களின் வழியாகப் பெண்களுக்குக் கல்வி, அரசியலில் பல உரிமைகளை அளிக்கத் தொடங்கியதின் விளைவாகவே, இன்று இந்தியச் சமூகத்தில் பெண்கள் பெரும் பொறுப்புகளுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டிய கடமை அரசுக்கு உண்டு. பல தனியார் நிறுவனங்களே மாதவிடாய்க் காலங்களில் ஊதியத்துடன்கூடிய விடுமுறையை வழங்கிவருகின்றன. இந்தச் சூழலில் அரசும் தானாக முன்வந்து பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன்கூடிய விடுப்பு வழங்க வேண்டும். அந்தக் கடமையும் பொறுப்பும் ஒன்றிய அரசுக்கு உண்டு. அதைப் பயன்படுத்துவதும், பயன்படுத்தாததும் பெண்களின் உரிமை சார்ந்தது. அந்த உரிமையைப் பறிக்கும்விதமாக பா.ஜ.க அமைச்சர் பேசியிருக்கிறார். பெண்கள் பயன்படுத்தும் நாப்கினுக்கு 12 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதித்த ஒன்றிய பா.ஜ.க அரசிடம், பெண்களின் உரிமைகளை எதிர்பார்ப்பதும் தவறுதான்.’’

தமிழரசி ரவிக்குமார், ஆர்.ஆனந்த பிரியா

ஆர்.ஆனந்த பிரியா, மாநிலச் செயலாளர், பா.ஜ.க

``அமைச்சர் சொல்லியிருப்பதில் என்ன தவறு இருக்கிறது... ஒரு பெண்ணாக அமைச்சர் சொன்ன கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன். மாதவிடாய் என்பது உடல் குறைபாடு கிடையாது. அது ஓர் இயற்கையான உடலியல் சுழற்சிதான். இதைச் சிலர் உடல் குறைபாடு என்பதுபோல் சித்திரித்து அதைவைத்து அரசியல் செய்ய நினைக்கின்றனர். பெண்கள்மீது அக்கறை இருப்பதுபோல் சில அரசியல் கட்சியினர் பேசுவது நகைப்புக்குரியது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற திலிருந்து பெண்களுக்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. `ஜன் ஔஷதி சுவிதா சானிடரி நாப்கின்’ வழங்கும் திட்டத்தின்கீழ், ஒரு ரூபாய்க்கு ஒரு நாப்கின் வழங்குவதன் மூலம் கிராமப்புறப் பெண்களும் பயன்பெறுகின்றனர். மாதவிடாய் விடுப்பால் மட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திவிட முடியாது. பெண்களுக்குச் சுகாதாரமான கழிப்பிடம், ஆரோக்கியமான உணவு, சுகாதாரம், மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது முக்கியம். அதை மத்திய அரசு உறுதி செய்துகொண்டிருக்கிறது. பெண்களின் மாதவிடாய் கால விடுப்பால் ஏற்படும் நிதி இழப்பைத் தடுத்து, அந்த நிதியில் பெண்களுக்கான பல்வேறு சுகாதாரத் திட்டங்களை மேலும் செயல்படுத்தலாம் என்ற அடிப்படையிலே மத்திய அமைச்சர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல.’’



from India News https://ift.tt/icR5DLu

No comments