Breaking News

எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்... சாதக, பாதகங்கள் என்னென்ன?!

டிசம்பர் 4-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், டிசம்பர் 21-ம் தேதி நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தொடரில் பல களேபரங்கள் நடைபெற்றாலும், பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்து வெளியேற்றிவிட்டு, முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

பிரதமர் மோடி

குற்றவியல் மசோதா முதல் தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கான மசோதா வரை, எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரின் விமர்சனத்துக்கு ஆளான முக்கியமான பல மசோதாக்கள் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதா முக்கியமானது. தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. தேர்தல் ஆணையர்களின் சுதந்திரத்தை உறுதி செய்யும் அந்த உத்தரவைப் பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.

இந்திய தேர்தல் ஆணையம்

உச்ச நீதிமன்றத்தின் அந்த உத்தரவில் மத்திய பா.ஜ.க அரசுக்கு உடன்பாடு இல்லை. எனவே, தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையிலிருந்து உச்ச நீதிமன்றத்தை விலக்கும் வகையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக கேபினெட் அமைச்சர் ஒருவர் தேர்வுக் குழுவில் இடம்பெறச் செய்வதென்று மத்திய அரசு முடிவுசெய்தது. அந்த வகையிலேயே இந்த மசோதாவை மத்திய அரசு வடிவமைத்தது.

மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 97 பேரை சஸ்பெண்ட் செய்து வெளியேற்றிய சூழலில், இந்த மசோதா மீது டிசம்பர் 21-ம் தேதி விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், ‘முந்தைய சட்டம் கணக்கில் எடுக்கத் தவறிய அனைத்து அம்சங்களும் இந்தப் புதிய மசோதாவில் இடம்பெற்றிருக்கின்றன’ என்றார்.

ரன்தீப் சுர்ஜேவாலா

இந்த மசோதா மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி ரன்தீப் சுர்ஜ்வாலா பங்கேற்றார். ‘மோடி அரசு இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்திய ஜனநாயகமும், தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி, அச்சமின்மை, நேர்மை போன்றவையும் தகர்க்கப்படுகின்றது’ என்று ரன்தீப் சுர்ஜ்வாலா விமர்சித்தார்.

இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் மூலம், தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரைத் தேர்வுசெய்யும் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இடம்பெறுவதை மத்திய அரசு தடுத்துநிறுத்தியிருக்கிறது.

அமித் ஷா

பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்து அவையிலிருந்து வெளியேற்றிய பிறகு, ஆளும் தரப்பு முதலில் எடுத்தது குற்றவியல் மசோதாவைத்தான். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றும் நோக்கத்துடன், ‘பாரதிய நியாய சன்ஹிதா’, ‘பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா‘, ‘பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்தது.

‘புகார் பெற்ற மூன்று நாள்களில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து, 14 நாள்களில் முதற்கட்ட விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்தில் நீதிபதியிடம் தாக்கல் செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை 180 நாள்களுக்கு மேல் தாமதம் செய்யக் கூடாது’ என்பன போன்ற சாதகமான அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது இந்த மசோதா.

நாடாளுமன்றம் - எதிர்க்கட்சி எம்.பி-க்கள்

திருத்தப்பட்ட குற்றவியல் மசோதாவில் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய குற்றங்களில், ‘தவறான செய்திகள் அல்லது பொய்ச் செய்திகளை வெளியிடுதல்’ என்பது சேர்க்கப்பட்டிருக்கிறது. இதை வைத்து, ஆட்சியாளர்களின் தவறுகளை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர், சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவோர் ஆகியோருக்கு எதிராகப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

இவை தவிர, தொலைத்தொடர்பு மசோதா, ஜி.எஸ்.டி தொடர்பான மசோதாக்கள் உள்ளிட்ட சில மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து விவாதங்களில் பங்கேற்றிருந்தால், இந்த மசோதாக்கள் குறித்த சாதக, பாதகங்களை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள ஏதுவாக இருந்திருக்கும்.

நாடாளுமன்றம் - மோடி

ஆனால், வரலாறு காணாத அளவுக்கு எதிர்க்கட்சி எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்களை அவசர அவசரமாக அரசு நிறைவேற்றிவிட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/9Owzj8I

No comments