Breaking News

காங்கிரஸ் மேயரை நான்கு மணி நேரம் சிறைப்பிடித்த திமுக துணை மேயர் - கும்பகோணம் மாநகராட்சி பரபரப்பு!

கும்பகோணம் மாநகராட்சியில் மாமன்றக் கூட்டம் காங்கிரஸ் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை மேயர், ஆணையர், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற 13 புதிய திட்டப் பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்து போட வேண்டும் என மேயரிடம் தி.மு.க துணை மேயர் தமிழழகன் மற்றும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

மேயர் சரவணன் மற்றும் துணை மேயர் தமிழழகன்

அதற்கு, `என்னால் கையெழுத்து போட முடியாது' என மேயர் சரவணன் கூறியுள்ளார். என்ன காரணம் என துணை மேயர் கேட்க, காரணம் கூற முடியாது என மேயர் சொல்லியுள்ளார். இதையடுத்து கூட்டம் நிறைவடைந்துவிட்டதாகக் கூறி மேயர் சரவணன் இருக்கையில் இருந்து எழுந்து வெளியே செல்ல முயன்றார். அப்போது துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் மேயரை வெளியே செல்ல விடாமல் தடுத்து, இருக்கையில் அமர வைத்து சிறைப்பிடித்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தி.மு.க கவுன்சிலர்கள் தரப்பில் பேசினோம், ``பொதுமக்கள் தொடர் கோரிக்கை வைத்த 13 புதிய திட்டப்பணிகளுக்கு எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதி உள்ளிட்டவற்றில் நிதி ஒதுக்கி பணிகள் தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் அத்தியாவசிய ஆறு திட்டங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டியவை. இந்த திட்டங்கள் கவுன்சிலர்களின் ஏகோபித்த ஆதரவை தந்து கையெழுத்திட்டுள்ளனர். இவற்றை மாமன்றக் கூடத்தில் தீர்மானமாக நிறைவேற்றி மேயர் கையெழுத்திட்டால் உடனே பணிகள் தொடங்கப்படும்.

மேயர் சரவணன் - துணை மேயர் தமிழழகன்

முன்கூட்டியே இதில் கையெழுத்து போட வேண்டும் என மேயரை வலியுறுத்தி கோரிக்கை வைத்தோம். மாமன்றக் கூட்டத்தில் போடுவதாக சொன்னவர் அப்போதும் கையெழுத்து போடாமலேயே கூட்டம் முடிந்துவிட்டதாகக் கிளம்பினார். அ.தி.மு.க கவுன்சிலர்கள் தவிர காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் துணை மேயர் ஆகியோர் கையெழுத்து போடாமல் வெளியே விடமாட்டோம் என மேயரை சூழ்ந்து நின்று முற்றுகையிட்டனர். மேயரை அவரது இருக்கையில் அமர வைத்து அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இப்படியே சுமார் நான்கு மணி நேரம் மேயர், மாமன்றக் கூட்டத்திலேயே சிறைப்பிடித்து வைத்திருப்பதுபோல் உட்கார வைக்கப்பட்டார். பின்னர் மேயர் கையெழுத்து இல்லாமலேயே சம்மந்தப்பட்ட துறையில் அனுமதி வாங்கி விடலாம் என்பதால், போராட்டத்தை முடித்துக் கொண்டோம்" என்றனர்.

துணை மேயர் தமிழழகனிடம் பேசினோம், ``நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்களுக்கு கையெழுத்திட மறுக்கிறார். பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். நீங்கள் மக்கள் மேயராக இருங்கள், தீர்மானத்தை நிறைவேற்றி கையெழுத்திடுங்கள் என கெஞ்சி கேட்டும் அவர் செய்யவில்லை. எதற்காக மறுக்கிறீர்கள் என கேட்டதற்கும் வெளிப்படையான பதில் இல்லை. மேயர் தன்னை மிரட்டுகின்றனர் என தேவையில்லாதவற்றை பேசி திசைதிருப்புகிறார். யார் மிரட்டுகிறார்கள் அவர்கள் பெயரை சொல்லுங்கள் என்றாலும் பதில் இல்லை. எனக்கு அரசு கார் தருவதை தடுத்தார். தொடர்ந்து பல பிரச்னைகளை செய்து வருகிறார். மக்களுக்குகான திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் தடையாக இருக்கிறார். அதனால் அவரை முறுக்கையிட்டு உட்கார வைத்தோம்" என்றார்.

மேயரை சிறைப்பிடித்த துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள்

மேயர் சரவணன் தரப்பில் விசாரித்தோம், ``வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளை அழைத்தால் வருவதில்லை. அப்படியே அதிகாரிகள் வந்தாலும் அவர்களை தி.மு.க கவுன்சிலர்கள் `ஏன் செல்கிறீர்கள்...' என மிரட்டுகின்றனர். மேயர் நேரடி ஆய்வுக்கு சென்றாலும், அவருக்கு என்ன தெரியும் என கேட்பதுடன், கூட்டம் நடப்பதற்கு முன்பே தீர்மானங்களுக்கு கையெழுத்து போடவேண்டும் எனவும் மிரட்டுகின்றனர். பரிசீலனை செய்யாமல் ஒப்புதல் அளிக்க முடியாது என மேயர் தெரிவித்தார். அதனால் அவரை வெளியே செல்ல விடாமல் முற்றுகையிட்டு சிறைப்பிடித்து உட்கார வைத்தனர். இது தி.மு.க துணை மேயர் மற்றும் கவுன்சிலர்களின் அத்துமீறலை காட்டுகிறது" என்றனர்.



from India News https://ift.tt/DY6cuZG

No comments