Vijayakanth: `உம் பிள்ளைக்கு... பிள்ளையா வந்து நீ பொறக்கணும்!' - உருகவைக்கும் இறுதி நிமிடங்கள்
டிசம்பர் 28, 2023. `அந்தச் செய்தி பொய்' என்றுதான் அன்று காலை தூக்கத்திலிருந்து எழுந்தவர்கள் நினைத்திருந்தார்கள். தர்மம் தலைக்காக்கும் தர்மத்தின் தலைவனை எந்தக் காலனும் கொண்டுபோக முடியாது என்றே இதுகாறும் எண்ணியிருந்தார்கள். ஆனால், எண்ணம்போல் வாழ்க்கை என்பது வெற்று வாசகமாய்ப்போனது... வேண்டுதல்கள் யாவும் பொய்யாய்ப்போனது. விடிந்து வெளிச்சம் பாய்ந்துகொண்டிருக்க, மியாட் மருத்துவமனை அறிக்கை தனது மௌனத்தை மெல்ல கலைத்துப்போட்டது. `நுரையீரல் அழற்சி, கடின முயற்சி... இருந்தும் கேப்டனைக் காப்பாற்ற முடியவில்லை; ஆம், விஜயகாந்த் மறைந்துபோனார்' என்றது. வெளிச்சப் பிரதேசத்துக்குள் வேகமாக இருள் கவ்வியது.
பத்திரிகையாளர்களும் முதலில் நம்ப மறுத்தார்கள். என்ன..? ஒன்றுக்கு இரண்டுமுறை கேட்டு உறுதிசெய்துகொண்டார்கள். செய்தி உண்மைதான்! ஊடகங்கள் ஊளையிட்டன. செய்தியறிந்த யாவரும்... நெருங்கிப் பழகியும் நீரை எதிரியென்று நினைத்த மீன்களைப்போல், நீண்டகாலமாய்ப் பேசாமல்போயிருந்தோரும் ஒரு நிமிடம் திடுக்கிட்டுத்தான் போனார்கள். துண்டிலில் சிக்கிய மீன் முள்ளின் ரணம் தொண்டைக்குள் குத்தியதைப்போல குலைந்துபோயிருப்பார்கள். பொல்லாததை எதிர்பார்த்து பின் இல்லாததை நினைத்து ஏமாந்து... பின்வாங்கிச் சென்றவர்களே இப்படி ஏங்கித் தவித்திருக்கும்போது, அவர் வீட்டார்களும், அவர் வீட்டில் உண்டவர்களும், அவரைத் திரையில் மட்டுமே கண்டிருந்தவர்களும், `பெயர் பதவி போனாலும், பொருள் உதவி நின்றாலும்... எதுபோனாலும் யார்போனாலும் எங்கள் விசுவாசம் எப்போதும் கேப்டனுக்கே என்று பேரன்பு கொண்டிருந்தவர்களும்' என்ன ஆகியிருப்பார்கள்... எப்படித் தாங்கியிருப்பார்கள். நம்ப மறுத்து, இயல்பு மறந்து, பின் இதயம் மரத்து நொறுங்கித்தான் போயிருப்பார்கள்.
விஜயகாந்த்தின் உடல் மியாட் மருத்துவமனையிலிருந்து சாலிகிராமம் வீட்டுக்குச் செல்வதற்கு முன்பே, தமிழ்நாட்டில் ஒவ்வொரு மூலைகளிலிருந்தும் மூட்டை முடிச்சுகளையெல்லாம் கட்டிக்கொண்டு சென்னைக்குச் செல்லும் பேருந்துகளையும், வண்டிகளை எதிர்பார்த்து நின்றிருந்திருப்பார்கள் அந்த ஏழை சனங்கள். அதுமிகையென்றால் கோயம்பேடு எப்படி மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்துப் போயிருக்கும்... அகண்ட தீவுத்திடல் எப்படி போதாமல் போயிருக்கும்?
முதன்முறையாக மூச்சின்றி சொந்த வீட்டுக்குள் நுழைந்த விஜயகாந்த்தை ஏற்க மனமில்லாமல் வரவேற்க முடியாமல் கதவுகளே தாழ்ப்பாளிட்டுக் கொண்டிருக்கும். அதற்கிடையே, வாடகைக்கு வாங்கிவந்த கண்ணாடி ஐஸ் பெட்டி, அவரை அள்ளியெடுத்து வலிந்து அரவணைத்திருக்கும். அதில் அவர் முகம்காண, முதலமைச்சர் முதற்கொண்டு ஒவ்வொரு வர்க்கமும் முண்டியடித்துக்கொண்டு அவர் வீட்டு வாசலை நோக்கிப் படையெடுத்தது. சாது மிரண்டால் காடு கொள்ளுமா... அவர் சம்பாதித்துவைத்த சாமானியர்கள் திரண்டால் அந்த வீடு கொள்ளுமா... மாளிகை வீடும் மண்குடிசையாகி அல்லவா போகும்!
மதியவேளையில் அவரின் பூத உடல் வீட்டிலிருந்து இடமாற்றப்பட்டது. `திரண்டுவரும் பொதுமக்களின் அஞ்சலிக்காக' விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அங்கே கட்சிக்கொடியும் அரைக்கம்பத்தில் பறந்து துக்கம் அனுசரித்தது.
ஆயிரக்கணக்கான மக்கள் கோயம்பேட்டில் குழுமினார்கள். சாலைகளிலே நகரும் தடுப்புகளாயினர். ராட்சத வாகனங்கள் செல்லும் மேம்பாலங்களெல்லாம் அந்த எளிய மக்களின் தரைப்பாலங்கள் ஆயின. அவசர அவசரமாகப் போக்குவரத்து சாலைகளெல்லாம் அரசால் மாற்றியமைக்கப்பட்டன. அந்த சாலைகள் முழுவதும் `கேப்டன்... கேப்டன்' என்பது மட்டுமே உரக்க ஒலித்துக்கொண்டிருந்தன.
கூட்டத்தைப் பிளந்துகொண்டு அரசியல் பிரமுகர்கள் வந்தார்கள், அமைச்சர்கள் வந்தார்கள், உடன் நடித்த சக நடிகர்கள் வந்தார்கள்... விஜயகாந்த்தின் சலனமற்ற உடலைப்பார்த்து `இது எங்கள் வீட்டு இழப்பு' எனக் கதறி அழுதார்கள். தன்னைத் தளபதியாக்கிய செந்தூரப்பூவை பத்துநொடிகள் உத்துப்பார்த்து அழுதார் ஒருவர். பன்னீர் பூமாலைகளை கையிலெடுத்து வந்தவர்களெல்லாம், அதைமறந்துவைத்து தங்கள் கண்ணீராலே விஜயகாந்துக்கு மாலையிட்டுச் சென்றார்கள். மணித்தியாலங்கள் நீள நீள, நீர்த்திவலைகள் சிந்தவரும் கண்களின் எண்ணிக்கை எகிறிக்கொண்டிருந்தது. கோயம்பேடு, மக்கள் குறுங்காடாகிக் கொண்டிருந்தது. அஞ்சலி செலுத்த அலுவலகமும் போதவில்லை! அடுத்து கேட்கப்பட்ட ராஜாஜி ஹாலும் தயார்நிலையில் இல்லை!
கண்களைக் கசக்கியக் கூட்டத்துக்காக கைகளைப் பிசைந்தது தமிழ்நாடு அரசு. தனித்தீவாகிப்போயிருந்த கோயம்பேடுக்கு மாற்று... அகண்டு விரிந்திருக்கும் தீவுத்திடல்தான் என்று யோசித்தது. `விஜயகாந்தின் உடல் நாளை (டிசம்பர் 29) காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக அண்ணாசாலை தீவுத்திடலில் வைக்கப்படுகிறது' என யோசித்தபடியே அறிவித்தது. அதோடு, `அன்று மாலை 4:45 மணிக்கு கோயம்பேடு தே.மு.தி.க தலைமை அலுவலக வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும்' என்றும் உறுதிப்படுத்தியது. நள்ளிரவே தீவுத்திடலில் எல்லா ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. தீவை சுத்தம்செய்ய நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியார்கள் களமிறக்கப்பட்டார்கள். பாதுகாப்புத் திட்டமிடலைப் பிசகின்றிச் செய்துமுடிக்க ஆயிரக்கணக்கான காக்கிகள் கண்கொத்திப் பாம்புகளாக வலம்வந்துகொண்டிருந்தார்கள். பின்னிரவு கடந்தது, முழுவீச்சில் தீவுத்திடல் முழுமையாகத் தயாரானது.
இன்னும் கிழக்கு உதித்திராத ஆழ்நித்திரை நேரம். விஜயகாந்த்தின் பூத உடல் தாங்கிய வாகனம், கோயம்பேடு அலுவலகத்திலிருந்து தீவுத்திடலை நோக்கிக் கிளம்பியது. அதன் பின்னணியில் ஒரு பெருங்கூட்டமும் படையெனத் திரண்டு வந்துகொண்டிருந்தது. அதற்கு முன்னரே, நூற்றுக்கணக்கான விஜயகாந்த்வாசிகள் அவர் உடலின் வருகைக்காக ஏற்கெனவே தீவுத்திடலில் முகாமிட்டு காத்துக்கொண்டிருந்தனர். சரியாக அதிகாலை 5:50 மணிக்கு தீவுத்திடலுக்குள் விஜயகாந்தின் உடல் கொண்டுவரப்பட்டு, எல்லோரும் பார்க்கும்வகையில் மேடையில் சாய்தளமாக வைக்கப்பட்டது. அவரின் உடலைச் சுற்றி மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன், மைத்துனன் சுதீஷ் என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அழுது ஓய்ந்த முகத்தில் சோக ரேகையுடன் நின்றுகொண்டிருந்தார்கள்.
மக்கள் சாரைசாரையாக மேடையை நோக்கிக் குவிந்தார்கள். தூரத்து இடிமுழக்கமாய் எங்கும் கேப்டன் என்ற கோஷம் தீவுத்திடலையே அதிரவைத்தது. நா வரண்டு, கால்கடுக்க வரிசையில் நின்று, வியர்த்து விறுவிறுக்க கோஷமிட்டு ஓடிவந்தவர்களெல்லாம், விஜயகாந்தின் உடலைப் பார்த்த ஒரு நொடி உறைந்துபோனார்கள். அந்தக் கம்பீர மீசையைக் காணமுடியவில்லை. சிவந்த கண்களை கறுப்புக் கண்ணாடி திரையிட்டு மறைத்திருந்தது. முன்பு மோதிரத்தையேப் பிளக்கும் விரல்கள், இப்போது சுற்றிய நூலாய் சுருங்கிப்போயிருந்தது. `கேப்டன்... கேட்பன்' என்ற கூப்பிட்ட குரலுக்கு அவர் எழுந்து வரவேயில்லை!
அவரைப் பார்த்த சிலர் அப்படியே மயங்கி விழுந்தார்கள். சிலர் சில நிமிடங்களுக்காக காவலர்களிடம் முரண்டுபிடித்தார்கள். சிலர் கோபத்தில் எதிரே நின்ற பத்திரிகைகாரர்களை ஏகத்துக்கும் வசைபாடினார்கள். பலர் கத்திக் கதறினார்கள். தரையில் அழுது புரண்டார்கள். பலர் யாரையும் குற்றம் சொல்ல முடியாமல், தங்களைத் தாங்களே தலையில் அடித்துக்கொண்டார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியார்கள், காவல்துறையினர் என அவரைப் பார்த்து அழாத ஆளில்லை! அங்கு கட்சி வேட்டி கட்டியவர்களைவிட அழுக்குத் தோய்ந்த கச்சை வேட்டிகள் கட்டியவர்கள்தான் நன்றியுள்ள காக்கைகளைப்போல வட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். கேப்டனின் இழப்பை சகியாது கூட்டமாகக் கரைந்து கரைந்து தீவை கண்ணீரிலே மூழ்கடித்தனர்.
வி.ஐ.பி பாதை வழியே வந்த திரையுலக நட்சத்திரங்களும் அரசியல் பெருந்தலைகளும் அழுவதில் இங்கே விதிவிலக்கல்ல! கண்ணாடிப்பேழையில் விஜயகாந்த்துக்கு மாலை அணிவித்து, நிற்கதியாய் கலங்கிநிற்கும் அவரின் மனைவி, மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையின்றி கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டார்கள். மைக்கில் பேச வார்த்தையின்றி பாதியிலே நிறுத்தினார்கள். ரஜினியும் கமலும் `விஜயகாந்தின் கோபம் நியாயத்துக்கும் நேர்மைக்குமானது' என்றார்கள்.
தவிர, பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு திரையில் பார்த்திருந்த இதுவரை வெளியில் தலைகாட்டிராமல் இருந்துவந்த பழைய முகங்களும், வில்லன் நடிகர்கள், துணை நடிகர்களும், ஃபைட் மாஸ்டர்களும், ஸ்டன்ட் கலைஞர்களும், இயக்குநர்களும் திரைப்படத் தயாரிப்பாளர்களும் மறுபிறவி எடுத்து அமரர் விஜயகாந்தின் உடலின் அருகே அமர்ந்திருந்தார்கள். `எங்கள் வெற்றியும் வளர்ச்சியும் கேப்டன் போட்ட பிச்சை!' என ஒருசேரக் கூறினார்கள். சிலர் செய்த தவற்றுக்கு விஜயகாந்த்தின் பூவுடலின்முன்பு மன்னிப்பு கோரினார்கள். ``அவர் மனிதரல்ல... எங்களுக்கு கடவுள்! இறைவன்... இறைவனடிச் சேர்ந்திருக்கிறார்" என்றார்கள். ஒட்டுமொத்த கூட்டமும் உணர்ச்சிக் கடலில் கொந்தளித்தது.
மாலை, மலர்மாலை சூட்டியது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் சொல்லிய நேரத்தையும் தாண்டி அஞ்சலி செலுத்தும் நேரம் நீண்டது. அவை சிவப்பு மல்லியா... அல்லது சிறையில் பூத்த சின்ன மலரா... செந்தூரப்பூவா... இல்லை நான் சூட்டிய மலரா என்று தெரியவில்லை; வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனம் கேப்டனின் இறுதி ஊர்வலத்துக்காக முன்னால் நின்றது. விஜயகாந்தின் உடல் ஏற்றப்பட்டது. உடன் உற்ற மனைவியும் பெற்றப் பிள்ளைகளும் ஏறிக்கொண்டார்கள். வாகனம் தீவுத்திடலிலிருந்து விஜயகாந்தை நல்லடக்கம் செய்யவிருக்கும் கோயம்பேடு அலுவலகத்தை நோக்கி நகர்ந்தது.
வாகனத்தின் முன்னால் காவல்துறை பட்டாளம் அணிவகுத்துச்செல்ல, பின்னால் பட்டித்தொட்டி பாமரங்கள் முதல் பட்டணத்து ராஜாக்கள் வரை பின்தொடர்ந்தார்கள். லட்சோப லட்சக்கணக்கான மக்களும் தொண்டர்களும் விஜயகாந்தின் பூ உடல் சுமந்த வாகனத்தின் பின்னே புடைசூழ ஊர்வலம் போனார்கள். சாலையின் இருமருங்கிலும் மலர்தூவி கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தி வழியனுப்பினார்கள். பூவிலிருந்தவல்லி சாலை முழுக்க பூவிரிந்து பூக்கோலம் பூண்டது. நடந்தவர்கள் தவறவிட்டுச்சென்ற காலணிகள் இலக்குத் தெரியாமல் அந்தப் பூக்களுக்கேத் துணையாய் நின்றன.
இறுதி ஊர்வல வாகனம் ஒருவழியாக கோயம்பேடு தே.மு.தி.க அலுவலகத்தை வந்தடைந்தது. முதல்வர் மலர்வளையம் வைத்துவிட்டு இருக்கையில் அமராமல் வந்து நின்றுகொண்டார். குடும்ப முறைப்படி சடங்குகள் நடந்தேறின. சந்தனப் பேழையில் சொக்கத்தங்கம் கிடத்தப்பட்டது. மக்கள் மரியாதைக்குப் பின்னே அரச மரியாதைத் தொடங்கியது! 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. காவல்காக்க வந்த காவல்துறை அதிகாரிகள்கூட கடைசியில் தங்கள் கடமை மறந்து கையெடுத்துக் கும்பிட்டார்கள்.
சாதி, மதம், இனம், கட்சி, வர்க்கம் என எல்லா வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு, எல்லோராலும் நேசிக்கக்கூடிய ஒரு மாமனிதன், கேப்டன் விஜயகாந்த் என்பதை அவரின் இறப்புக்குக் கூடிய கூட்டம், மீண்டும் ஒருமுறை உலகுக்கு ஓங்கி உணர்த்தியிருக்கிறது.
சந்தனப் பேழையில் அந்த தூய உள்ளம் துயிலுறங்கட்டும்! பசியில் வாடும் வானத்து தேவதைகள் இனி இவர் கையால் சற்று இளைப்பாறட்டும்!!!
from India News https://ift.tt/JztNBAI
No comments