Breaking News

நியூசிலாந்து கிரிக்கெட்டின் புதிய நாயகன்! யார் இந்த டேவான் கான்வே?

நியூசிலாந்து கிரிக்கெட்டின் புதிய கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் 29 வயதான டேவான் பிலிப் கான்வே. ஆம் இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக இன்னிங்ஸில் 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இன்னமும் களத்தில் இருக்கிறார் டேவான் கான்வே.

இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கும் நிலையில் டேவான் கான்வேயின் இந்தச் சதம் நியூசிலாந்துக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இடக்கை தொடக்க ஆட்டக்காரரான கான்வேவுக்கு இது முதல் டெஸ்ட் போட்டி என்றாலும் தன்னுடைய வருகையை நியூசிலாந்து அணியில் டி20 போட்டியின் மூலம் நிரூபித்தவர்தான் கான்வே. அதற்கு பரிசாகதான் அவருக்கு நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது.

image

நியூசிலாந்து அணிக்காக 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கான்வேயின் ரெக்கார்டுகள் அசத்தலாக இருக்கிறது. 14 டி20 போட்டிகளில் மொத்தம் 4 அரை சதம் விளாசியுள்ளவரின் மொத்த ரன் குவிப்பு 473. அதுவும் டி20 போட்டியில் கான்வேயின் சராசரி 59.12, மேலும் அவரின் ஸ்டிரைக் ரேட் 151.11 என அசர வைக்கிறது. இதில் கான்வேயின் அதிகபட்ச ஸ்கோர் 99 நாட் அவுட்.

அதேபோல இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம், ஒரு அரைசதம் விளாசியுள்ளார். மொத்தம் 225 ரன்கள், அவரது சராசரி 75, ஸ்டைக் ரேட் 88, அதிகபட்ச ரன் 126 என பிரமிக்க வைக்கிறது. இத்தனை வேகமாக ரன் சேர்க்கும் திறன் கொண்டே கான்வேவை ஒரு ஐபிஎல் அணிகள் கூட கடந்த முறை ஏலம் எடுக்காதது வேடிக்கை. ஐபிஎல் ஏலம் முடிந்த பின்புதான் டேவான் கான்வே என்றொரு அசத்தலான நியூசிலாந்து வீரர் இருப்பது பலருக்கும் தெரிய வந்தது.

image

டேவான் கான்வேயின் திறமை மீது நம்பிக்கை வைத்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து தொடரில் அவரை தேர்வு செய்தது. இதில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடினார் கான்வே. அதுவும் உலக புகழ்ப்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் விளாசினார் கான்வே. நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையிலும் கான்வே இன்னும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்.

டேவான் கான்வே இந்தச் சதத்தின் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையையும் முறியடித்துள்ளார். 1996 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே சதமடித்தார் கங்குலி. அப்போது மொத்தம் 131 ரன்கள் எடுத்தார். இப்போது டேவிட் கான்வே 136 ரன்கள் எடுத்து அவரது சாதனையை முறியடித்துள்ளார். மேலும் அறிமுக போட்டியில் லார்ட்ஸில் அதிகபட்ச ரன்கள் எடுத்ததும் கான்வே மட்டுமே.

image

நியூசிலாந்து அணிக்கு வயது அடிப்படையில் "லேட்டாக" வந்தாலும் "லேட்டஸ்டாக" பல சாதனைகளை செய்ய காத்திருக்கிறார் டேவான் கான்வே. அவரின் ஆட்ட நுணக்கங்களை வைத்து பார்த்தால் விரைவில் உலகின் "கிளாஸ் மற்றும் மாஸ்" பேட்ஸ்மேனாக டேவான் கான்வே உருவெடுப்பார் என்பது சந்தேகமில்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3z08ooQ
via

No comments