ஓடிடி திரைப் பார்வை 3: குஞ்ஞு தெய்வம் - குழந்தைகளிடம் இறை நம்பிக்கையை 'திணித்தல்' தகுமோ?
குழந்தைகள் சினிமாவை குழந்தைகள் இல்லாமல் எடுக்க முடியாது. ஆனால், குழந்தைகளுக்கான சினிமாவை குழந்தைகள் இல்லாமலேயே எடுக்க முடியும். டாம் அண்ட் ஜெர்ரி, டொன்ல்ட் டக் துவங்கி இன்றைய சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் வரை எத்தனையோ குழந்தைகளுக்கான படைப்புகள் உருவாகி வந்துகொண்டிருக்கின்றன. குழந்தைகள் சினிமா மற்றும் குழந்தைகளுக்கான சினிமா இவற்றை இயக்குவது எப்போதும் சவாலான ஒன்று. கொஞ்சம் சொதப்பினாலும் அவை குழந்தைத்தனமான சினிமாவாக மாறிவிடும் அல்லது தவறான வழிகாட்டுதலை கொடுத்துவிடும். இப்படியாக குழந்தைகளை மையமாக வைத்து மிகப்பெரிய படைப்புலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
2018-ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான குஞ்ஞு தெய்வம் (Kunju Daivam) எனும் சினிமா சிறிய கேரள கிராமத்தில் வசிக்கும் மனிதாபிமானம் கொண்ட சிறுவனை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. ஜோசப் ஜே ஈராலி எனும் 6 வயது சிறுவன் கேரள மலைக் கிராமமொன்றில் தனது தாத்தா மற்றும் தாயுடன் வசித்து வருகிறான்.
ஒருநாள் கணித பரீட்சைக்கான தேதியை அறிவிக்கிறார் ஜோசப்பின் ஆசிரியர். கணிதப் பாடத்தை சரியாக படிக்கவில்லை ஜோசப். அதே நாளில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவர் மரணப் படுக்கையில் இருக்கும் செய்தியும் பரவுகிறது. 'அவர் இறந்துபோனால், பள்ளிக்கு விடுப்பு தருவார்கள்; பிறகு பரீட்சையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்' என நினைக்கும் ஜோசப், 'அவர் மரணிக்க வேண்டும்' என உள்ளூர் தேவாலயத்தில் மனமுருகி பிராத்திக்கிறான். தீவிர பிராத்தனை பலனளிக்கும் என அவனுக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. அவன் வேண்டியதும் தற்செயலாக முன்னாள் குடியரசுத் தலைவரின் மரண செய்தியும் கிடைக்கிறது. பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. பரீட்சை ரத்தான மகிழ்ச்சியில் கொண்டாடித் திரிகிறான் அப்பாவி சிறுவன் ஜோசப்.
சில நாள்களுக்குப் பிறகு ஜோசப்பின் பள்ளியில் மீண்டும் ஒரு பரீட்சை அறிவிக்கப்படுகிறது. பிராத்தனை பலனளிக்கும் என நம்பும் ஜோசப் இம்முறை யாராவது ஒருவர் இறந்து போக வேண்டும் என மனமுறுகி வேண்டிக் கொள்கிறான். மீண்டும் ஒரு தற்செயலான மரணம் நிகழ்கிறது. இம்முறை ஜோசப்பின் தாத்தா இறந்து போகிறார். செய்தி அறிந்து வீட்டிற்கு வரும் சிறுவன் தனது தாத்தாவின் உடல் முன்நின்று குற்ற உணர்ச்சி தாளாமல் உடைந்து அழுகிறான். "தாத்தா நீ சாகணும்னு நான் வேண்டிக்கல. எனக்கு உன்னைத்தான் ரொம்ப பிடிக்கும். இப்டி தப்பு பண்ணிட்டனே...'' என அழுகிறான். பிறகு வரும் நாள்கள் இச்சம்பவத்தின் எதிரொலியால் அச்சிறுவனை எத்தகைய நற்பண்புள்ளவனாக மாற்றுகிறது என்பதே திரைக்கதை.
ஓர் எளிய கதைதான். நம்மில் பலரும் கூட சின்ன வயதில் விடுப்பு எடுப்பதற்காக பலமுறை நமது தாத்தா, பாட்டி இறந்துபோனதாக சொல்லி இருப்போம். இக்கதையின் இரண்டாம் பாதியில் மனம் மாறிய சிறுவனின் செயல்கள் நெகிழ்ச்சிக்குரியவை. அவ்வூரில் வசிக்கும் ஒரு சிறுமிக்கு கிட்னி பிரச்னை இருப்பதால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கிறது. முதல்முறை அச்சிறுமியை சந்திக்கும் ஜோசப் ''அக்கா., உனக்காக நான் பிராத்தனை செய்கிறேன். தீவிரமாக பிராத்தனை செய்தால் நிச்சயம் உனக்கு உடம்பு சரியாகிவிடும்'' என்கிறான்.
தொடரும் காட்சிகளில் ஜோசப் வெறும் பிராத்தனையோடு நின்றுவிடாமல் ஆக்கபூர்வமான செயல்களை நோக்கி நகர்கிறான். அச்சிறுமிக்கு தானே கிட்னி கொடை கொடுக்கத் தயாராகும் ஜோசப் அச்சிறுமியின் தேவையை எப்படி சரி செய்தான் என்ற சுவாரஸ்யமான காட்சிகளால் நகர்கிறது இரண்டாம் பாதி. அதேநேரம் படத்தின் முதல் பாதியில் இருந்த இயல்புத்தன்மை மெள்ள மாறி இரண்டாம் பாதியில் செயற்கையான க்ளீஷே வகை காட்சிகளும், செண்டிமென்ட் காட்சிகளும் கொஞ்சம் ஓவர் டோஸாக படத்திற்கு அமைந்து போனது சோகம்.
ஜோஜு ஜார்ஜ் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் இக்கதையில் நடித்திருக்கிறார். மேலும், சித்தார்த்தா சிவா, ரயினா மரியா ஆகியோர் இத்திரைப்படத்திற்கு நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். சிறுவன் ஜோசப்பாக நடித்திருக்கும் அதீஷ் பிரவீன் இக்கதைக்கு நல்ல தேர்வு.
ஜியோ பேபி இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' திரைப்படம் மூலம் மிகப் பெரிய சமூக விசாரணையை உருவாக்கியவர் ஜியோ பேபி. 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' படத்துக்கு முன்பாக 2018-ல் இவர் இயக்கத்தில் வெளியான சினிமாதான் 'குஞ்ஞு தெய்வம்'.
மிகப்பெரிய யூனிட் வசதிகளுடன் 'குஞ்ஞு தெய்வம்' உருவாக்கப்படவில்லை. டி5 வகை கேமராவைக் கொண்டு மிக எளிமையாக படம்பிடிக்கப்பட்ட திரைப்படமே 'குஞ்ஞு தெய்வம்'. டி5 கேமராவைக் கொண்டே நல்ல தரமான ஒளிப்பதிவை வழங்கி இருக்கிறார் ஜோபி ஜேம்ஸ். ''கேமராவில் என்ன இருக்கிறது. படைப்பு குறித்துப் பேசாமல் படைப்பை எழுதிய பேனா குறித்தா கேட்பீர்கள்...?'' என்று பாலுமகேந்திரா ஒருமுறை கேட்டது நினைவுக்கு வருகிறது.
இத்திரைப்படத்தின் கதை அம்சத்தினை ஆராயும்போது குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயதிலேயே இறைநம்பிக்கையை ஓவர் டொஸாக சொல்லிக் கொடுப்பது நல்லதா? இது குழந்தைகளின் சுய சிந்தனையினை மடைமாற்றுமா? - இப்படி கேள்விகள் எழுகின்றன. இது குழந்தைகள் பார்க்க வேண்டிய சினிமா என்பதால் இக்கேள்வி இன்னுமே அழுத்தமான முன்வைக்கப்பட வேண்டும்.
ஆனால், படத்தின் முடிவில் ஜியோ பேபி இந்த சந்தேக முடிச்சுகளை ஒரு காட்சியினைக் கொண்டு அவிழ்க்கிறார். 'பிறர் நலனுக்காக பிராத்தனை செய்கிறவன் மனிதன். பிறரது துன்பம் நீங்க உதவி செய்கிறவன் அதனினும் மேன்மை கொண்டவன்' என்ற செய்தியை குழந்தைகளுக்கு புரியும் வகையில் சொல்லி இருக்கிறார் ஜியோ பேபி.
அமேசான் பிரைமில் காணக் கிடைக்கும் இத்திரைப்படம் நல்ல குழந்தைகள் சினிமாவாகவும், நல்ல ஃபீல் குடு படமாகவும் அமைந்திருக்கிறது. இந்தத் திரைப் பார்வையில் ஸ்பாய்லர்கள் உண்டுதான். ஆனால், அதையெல்லாம் கடந்தும் உங்களுக்கு நிச்சயம் நல்ல சினிமா அனுபவத்தை இப்படம் நிச்சயம் தரும்.
முந்தைய அத்தியாயம்: ஓடிடி திரைப் பார்வை 2: புல்புல் - அர்த்தம் கற்பிக்கும் ரத்தம் தோய்ந்த கவிதை!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3B75D5Z
No comments