'ஈ சாலா கப் நம்தே' கனவை சிதைத்த சுனில் நரைன் - வெளியேறியது ஆர்சிபி; முன்னேறியது கொல்கத்தா
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டரில் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 138 ரன்களை எடுத்தது. பெங்களூர் அணியின் பேட்டிங் ஆர்டரை மொத்தமாக காலி செய்திருந்தார் சுனில் நரைன். 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது கொல்கத்தா.
அந்த அணிக்காக கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 41 ரன்களை எடுத்திருந்தனர். கில் 29 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி 6 ரன்களில் அவுட்டானார். வெங்கடேஷ் ஐயர் 26 ரன்களில் அவுட்டானார். நித்திஷ் ராணா 23 ரன்களில் அவுட்டானார்.
ஐந்தாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய சுனில் நரைன், 15 பந்துகளில் 26 ரன்களை சேர்த்தார். அவர் சந்தித்த முதல் நான்கு பந்துகளில் 19 ரன்களை எடுத்திருந்தார். அது கொல்கத்தா அணிக்கு உதவியது.
இருப்பினும் சிராஜ் வீசிய 18-வது ஓவரில் போல்டானார். அதே ஓவரில் தினேஷ் கார்த்திக் விக்கெட்டையும் வீழத்தியிருந்தார் அவர். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் அவர். அதோடு ஐபிஎல் அரங்கில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர்.
மறுபக்கம் பெங்களூர் அணியின் மற்றொரு பவுலர் ஹர்ஷல் பட்டேல் நடப்பு சீசனில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பிராவோவின் சாதனையை சமன் செய்துள்ளார் அவர்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் மற்றும் ஷகிப் அல் ஹசன் களத்தில் இருந்தனர். நான்கு பந்துகளில் வெற்றிக்கு தேவைப்பட 7 ரன்களை எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா.
இந்த வெற்றியின் மூலம் அக்டோபர் 13ம் தேதி நடைபெறும் இரண்டாவது பிளே-ஆஃப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா விளையாடுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3AweD3p
via
No comments