Breaking News

திரை விமர்சனம்: 1983 கிரிக்கெட் உலகக்கோப்பையை தத்ரூபமாக நினைவூட்டும் '83'

1983 உலகக் கோப்பை போட்டிகளை காணாதவர்களுக்கான ஒரு உலகக் கோப்பை தொடர்தான் இந்த '83'
 
கிரிக்கெட்டை உருவாக்கிய இங்கிலாந்து, 1975 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக களம் இறங்கி வேட்டையாடிய இந்திய கிரிக்கெட் அணியின் உலகக் கோப்பை பயணத்தை '83' என்ற தலைப்பில் தத்ரூபமாக படமாக்கியுள்ளார் இயக்குனர் கபீர் கான்.
 
இந்திய அணியின் கேப்டன் கபில்தேவாக ரன்வீர் சிங், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக தமிழ் நடிகர் ஜீவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் நிஜ கிரிக்கெட் வீரர்களின் தோற்றம், மேனரிசம் என அனைத்தையும் உள்வாங்கி அத்தனை கச்சிதமாக நடிப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் விவியன் ரிச்சர்ட்ஸ், Lloyd உள்ளிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கான நடிகர்களையும் மிகப்பொருத்தமாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளனர்.
 
image
ஒரு உலகக் கோப்பை தொடரை கிரிக்கெட் போட்டியாக மட்டும் உருவாக்காமல், அதன் பின்னால் இருந்த உணர்வுப்பூர்வமான விஷயங்களை காட்சிகளாக, திரைக்கதையாக விவரித்திருக்கிறார் இயக்குநர் கபீர் கான். இங்கிலாந்து பயணம் செய்தபோது, இந்திய அணியின் மீதான ஆங்கில பத்திரிகைகளின் பார்வை, அந்த செய்திகளை கபில்தேவ் கையாண்ட விதம் என அனைத்தையும் உணர்வுப்பூர்வமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
 
கலவரத்தால் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஊர் மக்களை 1983 உலகக் கோப்பையின் இந்திய வெற்றி ஒன்றிணைத்தது என்ற காட்சி பிரமாதப்படுத்தியுள்ளது. மேலும் இந்திய அணியின் வெற்றியை ராணுவ வீரர்கள் முதல் ஊர் மக்கள் வரை கொண்டாடித் தீர்த்தக் காட்சிகளும் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
வெற்றியடைந்த ஒரு கிரிக்கெட் தொடரை வெறுமனே படமாக்கி வெற்றி அடையலாம் என்று நினைக்காமல், அதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்கில் அமர்ந்து 3 மணி நேரத்திற்குள் ஒரு முழு உலகக் கோப்பை தொடரை கண்டுகளிக்கும் அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும். அதற்கு ஒளிப்பதிவு மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது.
 
image
ஜூன் 18, 1983 தேதி ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது களமிறங்கிய அணியின் கேப்டன் கபில்தேவ் 175 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். ஆனால், அன்று பிபிசி நிறுவனம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்ததால் அந்தப் போட்டி வீடியோவாக பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அந்தக் குறையை இந்த 83 திரைப்படம் போக்கியுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெறும் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி மிக நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் நிஜ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்பொழுது, நிஜ வீரர்களின் ஆட்டத்தை சேர்த்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். முழுக்க முழுக்க கபில்தேவ் என்ற ஒரு வீரரின் விடாமுயற்சியாலும், நம்பிக்கையாலும் வென்று எடுக்கப்பட்ட இந்த உலகக் கோப்பை தொடரை நாம் நிச்சயம் ரசிக்கலாம்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3sxHDY6

No comments