Breaking News

கடவுளின் தேசமா... கலவர தேசமா?! - கேரளாவில் அதிகரிக்கும் அரசியல் கொலைகள்

கேரளாவில் அரசியல் படுகொலைகள் புதிதல்ல என்றாலும், அதை எளிதாகக் கடந்துசெல்லும் விஷயமும் அல்ல! பெரும்பாலும், சிபிஎம், காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகளுக்குள் நடைபெற்றுக்கொண்டிருந்த அரசியல் படுகொலைகள் நாளடைவில் சிபிஎம், பாஜக, எஸ்.டி.பி.ஐ. என அனைத்து கட்சிகளிலும் மாறிமாறி நடைபெற்றுவருகின்றன. அதேபோல, கண்ணூர், மலப்புரம் போன்ற வடக்கு கேரளாவில் வழக்கமாக நடைபெற்றுக்கொண்டிருந்த அரசியல் படுகொலைகள் தற்போது தென்பகுதி, மத்தியப்பகுதி என ஒட்டுமொத்த கேரளாவிலும் வேரூன்றிவிட்டது. அனைத்துக் கட்சிகளிலும், அனைத்துப் பகுதிகளிலும் வேறுபாடின்றி தலைதூக்கியிருக்கும் அரசியல் படுகொலைகளால், படித்த கேரளா இரத்தக்கறைப் படிந்த கேரளாவாக உருமாறியிருக்கிறது.

கொலைச்செய்யப்பட்ட ஷான் மற்றும் ரஞ்சித் சீனிவாசன்

இவற்றை இன்னும் அழுத்தமாகப் பதியவைக்கிற சமீபத்தில் நடைபெற்ற ஆழப்புலா இரட்டைப் படுகொலை சம்பவம். ஆலப்புழா மாவட்டம், மண்ணஞ்சேரியைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ மாநிலச் செயலாளர் கே.எஸ். ஷான், கடந்த 18-ம் தேதி இரவு பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, காரில் வந்த நான்குபேரால் வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு மறுநாளே, அதிகாலை 6 மணியளவில் ஆலப்புழா, வெள்ளக்கிணற்றைச் சேர்ந்த பா.ஜ.க., ஓ.பி.சி பிரிவு மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ரஞ்சித் சீனிவாசன், 8 பேர்கொண்ட கும்பலால் வீட்டில்வைத்தே வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். வெறும் 12 மணிநேரத்தில், அதுவும் ஒரே மாவட்டத்தில் நடந்த இருவேறு படுகொலை சம்பவங்களால் கேரளாவில் பதற்றம் நிலவுகிறது.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்திவரும் கேரள காவல்துறையினர், எஸ்.டி.பி.ஐ ஷான் கொலைவழக்கு தொடர்பாக 2 ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் உட்பட 6 பேரை காவலில் எடுத்துவிசாரித்து வருகின்றனர். அதேபோல, பா.ஜ.க ரஞ்சித் சீனிவாசன் கொலை தொடர்பாக, 12 பேரை குறிவைத்துள்ள கேரள காவல்துறை அதில் 4 பேரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கொலை

இந்தப் படுகொலைகள் சம்மந்தமாக, எஸ்.டி.பி.ஐ அதன் துணை அமைப்பான பி.எஃப்.ஐ - பா.ஜ.க மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் ஆகிய இருதரப்பினரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருக்கின்றனர்.

சி.பி.எம் கமிட்டி செயலாளர் சந்தீப் குமார்

இதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தின் தொடக்கத்திலும் கூட (டிச,02), பத்தனம்திட்டா மாவட்டம் பிரிங்கரா பகுதியைச் சேர்ந்த, சி.பி.எம் கமிட்டி செயலாளர் சந்தீப் குமார், இரவு பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, பின்தொடர்ந்துவந்த 5 பேர்கொண்ட கும்பலால் 11 முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இதுசம்மந்தமாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த 2 பேரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் தொண்டர் சஞ்சித்

அதேபோல, கடந்த நவம்பர் மாதம் பாலக்காடு மாவட்டம் எல்லப்புள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர் சஞ்சித், தனது மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, காரில் வந்த 4 பேர்கொண்ட கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்மந்தமாக, பி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்தவர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

கடந்த ஜூலை மாதத்திலும், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவரும், சி.பி.எம். மாணவர் அமைப்பின் உறுப்பினருமான அபிமன்யூ, கோவில் திருவிழாவில் வைத்து 4 பேர்கொண்ட கும்பலால் குத்திப் படுகொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டப்பட்டனர்.

அபிமன்யூ, கேரளா

இப்படியாக, குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறையாவது அரசியல் படுகொலைகள் நடப்பது கடந்த சில ஆண்டுகளாக பெருமளவில் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, கண்ணூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 350-க்கும் மேற்பட்ட அரசியல் மோதல் வழக்குகள் பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிகரித்துவரும் இந்தப் படுகொலைகளை குறிப்பிட்டு, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் சி.பி.எம் கட்சியின் முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஜே.பி நட்டா

குறிப்பாக, பாஜக தேசியத் தலைவர் கே.பி. நட்டா, ``முதல்வர் பினராயி விஜயன் ஆட்சியில் கேரளா சட்டம் ஒழுங்கே இல்லாத மாநிலமாக மாறிவிட்டது" என குற்றம்சாட்டினார். அதேபோல, பா.ஜ.க மத்திய அமைச்சர் முரளிதரன், ``கேரளாவில் குண்டர்கள் ராஜ்ஜியம் நடக்கிறது. அதனால் மாநிலமே கொலைக் களமாக மாறிவருகிறது" என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இந்த சம்பவங்கள் குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ``இதுபோன்ற கொடூரமான, மனிதாபிமானமற்ற வன்முறை செயல்கள் அரசுக்கு ஆபத்தானவை. இதுபோன்ற கொலையாளிகளையும் அவர்களின் வெறுப்பு மனப்பான்மையையும் கண்டறிந்து தனிமைப்படுத்த மக்கள் அனைவரும் தயாராக இருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். மேலும், இதுபோன்ற கொலை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!" என தெரிவித்திருக்கிறார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரள முதல்வராக இருக்கும் பினராயி விஜயன் கூட, 1969-ம் ஆண்டு கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வாடிக்கல் ராமகிருஷ்ணன் அரசியல் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, பின்னர் போதிய சாட்சியங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் பல தசாப்தங்களாக நடந்துவரும் அரசியல் படுகொலைகள் வெறுமனவே அதிகாரப்படுகொலையாக மட்டும் இல்லாமல், சித்தாந்தப் படுகொலையாக இருப்பதால் காலத்திற்கும் இவை தொடர்ந்தபடியே இருக்கின்றன.



from தேசிய செய்திகள் https://ift.tt/3FppaAv

No comments