ஒப்பந்த பேச்சுவார்த்தை - கே.எல்.ராகுல், ரஷீத்கானுக்கு வந்த புதிய சோதனை
கே.எல்.ராகுல் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் ஐபிஎல்லில் புதிதாக வரவுள்ள லக்னோ அணியுடன் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது உறுதியானால் இருவருக்கும் ஐபிஎல்லில் விளையாட ஓராண்டு தடை விதிக்கும் சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு காரணம் என்ன?
அடுத்தாண்டு நடைபெறவுள்ள 15-ஆவது சீசன் ஐபிஎல் டி20 தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் நகரங்களை முன்னிறுத்தி இரண்டு புதிய அணிகள் களமிறங்கவுள்ளன. இதனையொட்டி மெகா ஏலம் நடைபெறவுள்ளதால், ஏற்கெனவே உள்ள 8 அணிகள் அதிகபட்சமாக நான்கு வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள பிசிசிஐ வழிவகை செய்து விதிகளை வெளியிட்டது. வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட அணிகள் முன்பே கணித்தபடி வீரர்களை தக்க வைத்தன. பஞ்சாப் அணியின் தூணாக விளங்கி வந்த கே.எல்.ராகுல் தக்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஏலத்திற்கு செல்ல விரும்புவதால் அவரை விடுவித்ததாக அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதேபோல் ஐதராபாத் அணியும், அணியின் துருப்புச் சீட்டாக விளங்கி வந்த ரஷீத் கான் சில நிபந்தனைகளை முன் வைத்ததால் அவரை தக்க வைக்கவில்லை.
இந்நிலையில் இவ்விருவரையும் புதிதாக வரவுள்ள லக்னோ அணி விதிகளை மீறி மூளைச் சலவை செய்து அணியில் இருந்து வெளியேறச் செய்ததாக பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணி நிர்வாகங்களும் வாய்மொழியாக பிசிசிஐயிடம் புகாரளித்துள்ளன. ராகுலை 16 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் தக்க வைக்கவிருந்த நிலையில் லக்னோ அணி நிர்வாகம் 20 கோடி ரூபாய்க்கு அவரிடம் ஒப்பந்தம் பேசியதாக தகவல்கள் உலா வருகின்றன. அதேபோல் ரஷீத் கானை 9 கோடி ரூபாய்க்கு ஐதராபாத் தக்க வைக்கவிருந்த நிலையில் லக்னோ அவரிடம் 16 கோடி ரூபாய்க்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பேசப்படுகிறது.
வீரர்கள் மீதும் லக்னோ அணி நிர்வாகம் மீதும் இதுவரை எழுத்துப்பூர்வமான புகார்கள் வரவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகும் பட்சத்தில் ராகுல் மற்றும் ரஷீத் கானுக்கு ஐபிஎல்லில் விளையாட ஓராண்டு தடைவிதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதே போன்ற குற்றச்சாட்டு காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓராண்டு ஐபிஎல்லில் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3pljpgp
via
No comments