வெளியே எதிரி... உள்ளே நண்பன்... 2024-க்கு அச்சாரம் போடுகிறதா அகிலேஷ் - காங்கிரஸ் நட்பு?
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹல் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரின் சித்தப்பா சிவபால் யாதவ் ஜஸ்வந்த் நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த இரு தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செவ்வாய்க்கிழமை (பிப். 1) முடிவடைந்தது.
கர்ஹல் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக, அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஞான்வதி யாதவ் அறிவிக்கப்பட்டிருந்தார். கர்ஹல் தொகுதியில் அகிலேஷ் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, காங்கிரஸ் வேட்பாளர் தமது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதேபோல, சிவபால் யாதவ் போட்டியிடும் ஜஸ்வந்த் நகர் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி இடையிலான இந்த நட்பு, பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி, ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதில், பா.ஜ.க., சமாஜ்வாடி கட்சி, பி.எஸ்.பி., காங்கிரஸ் ஆகிய தனித்தனி அணிகளாக களத்தில் உள்ளன. தற்போதைய ஆளும் கட்சியான பா.ஜ.க-வுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் காங்கிரஸ் கட்சி தனியாகப் போட்டியிடுகிறது. இந்த நிலையில்தான், அகிலேஷ் மற்றும் சிவபால் போட்டியிடும் தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்துவதை காங்கிரஸ் தவிர்த்துள்ளது.
இதற்கு முன் 2017-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடியும் காங்கிரஸும் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன. பா.ஜ.க-வுக்கு எதிரான வலுவான கூட்டணியாக அது அமையும் என்று அகிலேஷும் ராகுலும் கருதினர். பெரும்பாலான ஓ.பி.சி வகுப்பினர் வாக்குகளையும் 18 சதவிகித இஸ்லாமியர் வாக்குகளையும் பெற்றுவிடலாம் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.
குடும்பத்துக்குள் எழுந்த எதிர்ப்பையெல்லாம் முறியடித்து, சமாஜ்வாடி கட்சியில் அசைக்க முடியாத தலைவராக அகிலேஷ் உருவெடுத்திருந்தார். கட்சியில் கிரிமினல்களுக்கு இடம் கிடையாது என்று உறுதியுடன் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். மேலும், இளம் முதல்வர் என்கிற இமேஜ் அகிலேஷ் யாதவுக்கு இருந்தது. எனவே, இளைஞர்கள் தமக்கு அதிகளவில் வாக்களிப்பார்கள் என்று அகிலேஷ் கருதினர். சமாஜ்வாடி கட்சி 298 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 105 இடங்களிலும் போட்டியிட்டன.
ஆனால், அவர்களின் நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கின தேர்தல் முடிவுகள். 312 இடங்களைப் பிடித்து மிகப்பெரிய வெற்றியை பா.ஜ.க பெற்றது. சமாஜ்வாடி கட்சி 47 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கம்தன். வெறும் 7 இடங்கள்தான் காங்கிரஸுக்கு கிடைத்தன. சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த படுதோல்வியால், அடுத்ததாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பி.எஸ்.பி-யுடன் கூட்டணி சேருவது என்று சமாஜ்வாடி கட்சி முடிவுசெய்தது. அதிலும் படுதோல்வியே கிடைத்தது.
ஆகவே காங்கிரஸ், பி.எஸ்.பி ஆகிய கட்சிகளிடமிருந்து விலகி, ஆர்.எல்.டி உள்ளிட்ட சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாடி தற்போது களத்தில் இருக்கிறது. இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின் முடிவு அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் நாகரிகம் காரணமாகவே தங்கள் வேட்பாளர்களை அகிலேஷ், சிவபால் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் நிறுத்தவில்லை என்று காங்கிரஸ் தரப்பு கூறுகிறது.
2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிட்டனர். அப்போது, அந்த இரு தொகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சி தன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆகவே, அகிலேஷ் யாதவ், சிவபால் யாதவ் ஆகியோருக்கு எதிராக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்று காங்கிரஸ் தரப்பு கூறுகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரவிருக்கிறது. அதற்கான முன்னோட்டமாக உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் பார்க்கப்படும் நிலையில், அகிலேஷ் யாதவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவதில்லை என்கிற காங்கிரஸ் கட்சியின் முடிவு சில செய்திகளை உணர்த்துவதாக இருக்கிறது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.
``பா.ஜ.க-வைத் தோற்கடிப்பதற்கு எதிர்க் கட்சிகள் அனைத்தும் இணைய வேண்டும் என்பதற்காக கடந்த ஏழாண்டுகளில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. மம்தா பானர்ஜி தனியாக ஓர் அணியை அமைத்து தேசிய அளவில் தன்னை ஒரு பெரிய தலைவராக முன்னிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால், தேசிய அளவில் ஒரு பெரிய கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைமையில் தேசிய அளவிலான கூட்டணி அமைவதுதான் உண்மையிலேயே பா.ஜ.க-வுக்கு மாற்றான ஓர் அணியாக இருக்க முடியும்.
தற்போது உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி, பி.எஸ்.பி., காங்கிரஸ் என எல்லோரும் தனித்தனியாக நிற்கிறார்கள். ஓவைசி தனியாக நிற்கிறார். முஸ்லிம் வாக்குகளை அவர் பிரிப்பார். அதை அவர் பா.ஜ.க-வுக்காக செய்கிறாரா, அல்லது உண்மையிலே இஸ்லாமியர் நலன் கருதி செய்கிறாரா என்பது தெரியவில்லை.
2017-ல் சமாஜ்வாடியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் இருந்தனர். அப்போது 177 இடங்களில் சமாஜ்வாடி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் வெற்றிபெற்றாலும், 47 இடங்களில் இரண்டாம் இடம் வந்தது. ஆகவே, கடந்த தேர்தலில் சுமார் 200 இடங்களில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு இருந்தது. இந்துத்துவா பிரசாரம், மோடியை முன்னிறுத்தியது, சமாஜ்வாடி ஆட்சி குண்டர்கள் ராஜ்ஜியம் என்ற பிரசாரம் போன்ற காரணங்களால் பா.ஜ.க-வுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டியது.
Also Read: உத்தர் அரசியல்: வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த சட்டம் ஒழுங்குச் சம்பவங்கள்| மினி தொடர்|பாகம் - 3
இந்த முறை சமாஜ்வாடியும் காங்கிரஸும் கூட்டணி சேர்ந்திருந்தால் வெற்றி வாய்ப்பு நன்றாக இருந்திருக்கும். யோகி ஆதித்யநாத் ஆட்சியில் கொரோனா பெருந்தொற்றை சரியாகக் கையாளாதது, சிறுதொழில்கள் பாதிப்பு உள்பட பல பிரச்னைகளால் ஆட்சிக்கு எதிரான மனோபாவம் மக்கள் மத்தியில் இருக்கிறது. அதை எதிர்க் கட்சிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால், சமாஜ்வாடி, காங்கிரஸ் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸுக்கு அதிகமாக சீட் கொடுக்க அகிலேஷ் விரும்பவில்லை.
அகிலேஷுக்கு எழுச்சி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அவர் பா.ஜ.க-வுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கிறார் என்பது தெரிகிறது. ஆனால், பா.ஜ.க-வைத் தோற்கடிப்பார் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. ஒருவேளை, உ.பி-யில் பா.ஜ.க வெற்றிபெறுமானால், ஒருவேளை அது அகிலேஷின் கண்களைத் திறந்து காங்கிரஸ் கட்சியுடன் எதிர்காலத்தில் அவர் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது. அகிலேஷுக்கு எதிராக வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்தாதது அவர்களின் நல்லெண்ணத்தின் பிரதிபலிப்பாகப் பார்க்கிறேன்.
‘வாக்குகள் பிரிந்து அகிலேஷ் தோற்றுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தவில்லை. பா.ஜ.க-வை எதிர்த்து சமாஜ்வாடி புதிய அணியை உருவாக்கினால், அதில் இடம்பெறுவதற்கு தயாராக இருக்கிறோம் என்கிற காங்கிரஸ் தன் எண்ணத்தை வெளிப்படுத்துவதாகத்தான் இதைப் பார்க்கிறேன். இதை அகிலேஷ் உள்பட அனைத்து மாநிலக் கட்சிகளும் உணர வேண்டிய நேரம் இது” என்கிறார் ப்ரியன்.
from தேசிய செய்திகள் https://ift.tt/0JcU9jl
No comments