Breaking News

`100 வங்கிக் கணக்குகள்; ரூ.1,000 கோடிக்கு பிட்காயின் மோசடி’ - மூளையாக செயல்பட்ட மும்பை பெண்

நாடு முழுவதும் பிட்காய்ன் மற்றும் கிரிப்டோகரன்சியை பயன்படுத்தி அதிக அளவில் ஆன்லைனில் மோசடிகள் அதிகரித்துவிட்டது. மும்பையில் அது போன்ற ஒரு மிகப்பெரிய மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு ஒரு பெண் மூளையாக செயல்பட்டது தெரிய வந்து நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் உள்ள பிரபல கல்லூரியில் பேராசிரியையாக இருந்த 66 வயது பெண்மணி, பிட்காய்ன் மற்றும் கிரிப்டோகரன்சி குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சமூக வலைத்தளத்தில் வந்த investby.com என்ற வெப்சைட் விளம்பரத்தை பார்த்தார். அந்த விளம்பரத்தை பார்த்த பிறகு பிரிட்டனில் இருந்து சிவா என்பவர் பேராசிரியைக்கு போன் செய்து கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காய்ன் குறித்து தெரிவித்ததோடு அதில் முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டார். தன்னிடம் பணம் இல்லை என்று கூறி அப்பேராசிரியை சொல்லிப்பார்த்தார்.

ஆனால் தொடர்ச்சியாக அந்த நபர் போன் செய்ததால் பேராசிரியை முதல் கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.15 ஆயிரத்தை முதலீடு செய்தார். சில நாள்கள் கழித்து நிகிதா என்ற பெண் பேராசிரியைக்கு போன் செய்து பேசினார். நிகிதா பேராசிரியையிடம் பேசியே மயக்கி அடுத்த மூன்று மாதத்தில் மேலும் 36 லட்சத்தை முதலீடு செய்ய வைத்தார். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் நிகிதா போன் செய்து ரஷ்யா-உக்ரைன் போரால் முதலீடு செய்த பணம் முழுவதும் நஷ்டமடைந்துவிட்டதாகவும், மேலும் 5 ஆயிரம் அமெரிக்க டாலர் முதலீடு செய்தால்தான் ஏற்கனவே முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இதனால் சுதாரித்துக்கொண்ட பேராசிரியை மோசடி நடப்பதை உணர்ந்து இது குறித்து மும்பை கார்ரோடு போலீஸில் புகார் செய்தார். இவ்வழக்கு சைபர் பிரிவுக்கு மாற்றப்பட்டது. போலீஸாரின் தீவிர விசாரணையில் அதிகமான பண பரிவர்த்தனைகள் வெளிநாடுகள் மூலம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ரூ.9.86 லட்சம் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருந்தது. அக்கம்பெனி குறித்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். இதில் அக்கம்பெனி வங்கி கணக்கு திறக்க போலி ஆவணங்கள் கொடுக்கப்பட்டு இருந்ததால் அந்த கம்பெனியின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டு இருந்த மொபைல் நம்பர் குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். மும்பை வங்கிக்கணக்கில் மட்டும் 9 கோடிக்கு பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு இருந்தது. எனவே குற்றவாளி மும்பையை சேர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும் என்று கருதிய போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

கைது

மொபைல் போனை பயன்படுத்திய மும்பை கார்ரோடு பகுதியை சேர்ந்த ஜோத்சனா சதுர்வேதி(29) என்ற பெண்ணை பிடித்துச்சென்று விசாரித்தனர். அவருக்கு எதிராக வலுவான ஆதாரம் கொடுக்காத நிலையில் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் மோசடி மிகவும் சீரியசாக இருப்பதால் ஜாமீனுக்கு கோர்ட் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்குள் போலீஸார் அப்பெண்ணுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை திரட்டி கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதையடுத்து அவரை ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.

இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஹேம்ராஜ் கூறுகையில், ``சதுர்வேதியின் மொபைல் நம்பரோடு 12க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகள் இணைக்கப்பட்டு இருந்தது. கடந்த ஒரு ஆண்டில் சதுர்வேதி 100க்கும் மேற்பட்ட போலி வங்கிக்கணக்குகளை திறந்துள்ளார். 14 வங்கிக்கணக்குகள் இன்னும் செயல்பாட்டில் இருக்கிறது. அனைத்தையும் சதுர்வேதிதான் செய்துள்ளார். இது தவிர போலி ஆவணங்கள் மூலம் 20 கம்பெனிகளையும் திறந்துள்ளார். ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு விபரங்களை ஹெச்டிஎப்சி மற்றும் கோடக் வங்கி ஊழியர்கள் இரண்டு பேரிடமிருந்து சதுர்வேதி வாங்கி இருக்கிறார். அவர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவை சேர்ந்த பிட்காய்ன் மோசடி கும்பலுடன் சதுர்வேதிக்கு நேரடி தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ஆயிரம் கோடி அளவுக்கு பிட்காய்ன் மோசடி நடந்திருக்கும் என்று சந்தேகப்படுகிறோம். அதிகமானோர் பணத்தை இழந்தாலும் புகார் கொடுக்க முன் வருவதில்லை” என்று தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/i7ukqFJ

No comments