Breaking News

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை பழிதீர்க்குமா இந்தியா? - இன்று பலப்பரீட்சை

டி20 உலகக் கோப்பை தொடரின் பரபரப்பான லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இதுதான் இந்தத் தொடரின் முதல் போட்டி. இரு அணிகளும் உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடி வருகின்றன. அதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிக்கு எப்போதுமே உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவும்.

image

கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடர், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடர் ஆகியவற்றில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. நடப்பு உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு எதிராக விளையாடிய தொடர்களை கைப்பற்றிய உத்வேகத்துடன் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என்று அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. முன்னணி வீரர்கள் பும்ரா, ஜடேஜா, தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியது சற்று பின்னடைவை கொடுத்திருந்தாலும்,  பந்து வீச்சில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

அதே சமயம், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், இந்தியாவை வீழ்த்தும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர் கடும் சவாலாக இருப்பார்.

image

சுமார் 1 லட்சம் பார்வையாளர்கள் நேரில் கண்டு ரசிக்கக்கூடிய மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. மெல்போர்னில் இன்று முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்படும். போட்டி துவங்கும் நேரத்தில் மழை வர 42 சதவீதம் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைதானம் ஈரப்பதமாக இருப்பதால் இந்தியா ‘டாஸ்’ வென்றால் பீல்டிங் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

image

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல் அல்லது முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல் அல்லது ஆர்.அஸ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான்: பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஷான் மசூத், ஹைதர் அலி, இப்திகர் அகமது, ஆசிப் அலி, முகமது நவாஸ், ஷதப் கான், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்,

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் (காலை 9.30 மணி) தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஆன்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்தை சந்திக்கிறது.

தவற விடாதீர்: #INDvPAK இருபுறமும் டஃப் கொடுக்கும் வீரர்கள்! அனல்பறக்க போகிறதா - மழை குறுக்கிட போகிறதா?!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/9VUHnXK
via

No comments