Breaking News

கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையில் மீண்டும் பதற்றம் - பிரச்னையின் பின்புலம் என்ன?!

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவுக்கும் மகாராஷ்டிராவுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவிவரும் எல்லை விவகாரம் தற்போது தீவிரமடைந்திருக்கிறது.

பசவராஜ் பொம்மை

கர்நாடகா மாநிலத்தின் எல்லைப் பகுதியில் பெலகாவி, பீதர், கார்வார் ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அந்தப் பகுதிகளை கர்நாடகாவிலிருந்து பிரித்து மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்பது மகாராஷ்டிரா மக்களின் கோரிக்கையாக இருந்துவருகிறது.

இந்தப் பணி தொடர்பாக, மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் ஆகியோர் பெலகாவி செல்வதாக தகவல்கள் வெளியாகின. அதையடுத்து, பெலகாவியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ‘மகாராஷ்டிரா அமைச்சர்கள் பெலகாவிக்குள் நுழைந்தால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள்’ என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிக்க பிரச்னை பூதாகரமானது.

ஏக்நாத் ஷிண்டே

இதற்கிடையில், எல்லைப் பகுதியில் கன்னட அமைப்பினர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாகச் சென்ற மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட லாரிகளின் கண்ணாடிகளை உடைத்தனர். அதற்கு எதிர்வினையாக, ‘கர்நாடகாவில் மகாராஷ்டிரா வாகனங்கள் தாக்கப்பட்டால் கர்நாடக வாகனங்களை மகாராஷ்டிராவில் தாக்குவோம். கர்நாடகாவில் இருந்து வரும் ரயில்களையும் விட்டுவைக்க மாட்டோம்’ என்று சிவசேனா கட்சியினர் எச்சரிக்கை விடுத்தனர். புனே பகுதியில் கர்நாடக அரசுப் பேருந்துகள் மீது கறுப்பு பெயின்ட் அடித்து, ஜெய் மகாராஷ்டிரா என்று , சிவசேனா கட்சியினர் எழுதினர். இந்த சம்பவங்களால், இரு மாநில எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தின் பின்னணி விவரங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம். மகாராஷ்ட்ரா - கர்நாடகா எல்லையில் உள்ள பெலகவி, உத்தர கன்னடா, பிதார், குல்பர்கா மாவட்டங்களில் அமைந்துள்ள 814 கிராமங்களும் சில நகரங்களும் மராத்தி மொழி பேசும் மக்களை அதிகமாகக் கொண்டவை. கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் இந்தப் பகுதிகளை தங்களின் மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மகாராஷ்ட்ரா நீண்டகாலமாகக் கூறிவருகிறது. 1956-ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்தப் பிரச்சனை இருந்துவருகிறது.

கர்நாடகா பேருந்தில் ‘ஜெய் மகாராஷ்டிரா’

இந்த பிரச்னை குறித்து ஆராய 1966ம் ஆண்டு இந்திய அரசால் மகாஹன் ஆணையம் உருவாக்கப்பட்டது. அந்த ஆணையம் 1967-ம் ஆண்டு அளித்த அறிக்கையில், ‘264 கிராமங்கள் மகாராஷ்ட்ராவுடன் இணைக்கப்பட வேண்டும். பெல்காம் உள்ளிட்ட 247 கிராமங்கள் கர்நாடகாவுடன் இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருக்கிறது.

எல்லைப் பகுதிகளை மகாராஷ்ட்ராவுடன் இணைக்க வேண்டுமென்று மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்திவருகின்றனர். ஒவ்வொரு தேர்தலின்போதும் காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா, பா.ஜ.க உள்பட எல்லா கட்சிகளும் இது தொடர்பான வாக்குறுதியை வழங்குவதுண்டு. கடந்த 60 ஆண்டுகளாக, மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் இந்தப் பிரச்னை தவறாமல் இடம்பெற்றுவருகிறது.

கர்நாடகாவில் இருக்கும் சில எல்லையோர கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உடனடியாக டெல்லிக்கு சென்று இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பசவராஜ் பொம்மை

அதன் காரணமாக, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில்தான், கர்நாடக பேருந்துகள் மகாராஷ்டிராவில் கல்வீசித் தாக்கப்பட்டன. தொடர்ந்து கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் குதித்ததால் இரு மாநில எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இது குறித்து இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்திவருகிறார்கள்.



from தேசிய செய்திகள் https://ift.tt/yoN8d3F

No comments