Breaking News

போராடி இங்கிலாந்திடம் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி! ரோகித்தை முந்தி ஹர்மன்ப்ரீத் சாதனை!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனைப் படைத்திருந்த நிலையில், அதனை இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முறியடித்து உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சர்வதேச மகளிர் டி20 உலகக் கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, அதேபிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவதுப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று 4 புள்ளிகளைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இங்கிலாந்து அணியுடன் இந்திய மகளிர் அணி மோதியது.

டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பவுலிங்கை தேர்வுசெய்ததை அடுத்து, இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்ட வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாக, மிடில் ஆர்டரில் இறங்கிய ப்ரெண்ட் அரை சதமும், கேப்டன் நைட் 28 ரன்களும், ஜோன்ஸ் 40 ரன்களும் எடுத்து அணியை மீட்டனர். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.

image

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்ட வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா (52), மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரிச்சா கோஸ் (47) ஆகிய இருவரைத் தவிர, கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் (4) உள்பட மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாக, இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்களே எடுத்தது.

இதனால் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததுடன், பட்டியலில் 4 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்துக்கு வந்தது. அத்துடன் அரையிறுதி வாய்ப்புக்கு காத்திருக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அயர்லாந்துக்கு எதிராக திங்கள் கிழமை நடைபெறும் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய மகளிர் அணி உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இன்னும் இங்கிலாந்து அணி உறுதி செய்யவில்லை. அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுகளை பொறுத்தே யார் முதலில் அரையிறுதிக்குள் நுழைப் போகிறார்கள் என்பது தெரியும். பாகிஸ்தான் அணி அடுத்த இரண்டு போட்டிகளில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அது இந்திய அணிக்கு கடும் போட்டியாக அமையும். இந்திய அணி ரன் ரேட்டில் சற்றே இங்கிலாந்து, பாகிஸ்தானை காட்டிலும் பின் தங்கியுள்ளது.

ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை

இந்நிலையில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். கடந்த 2007 முதல் 2022 வரையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 148 போட்டிகளில் விளையாடி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தான் முதலிடத்தில் இருந்தார். மொத்தம் அவர் 148 டி20 போட்டிகளில், 3853 ரன்களை எடுத்திருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார் இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரித் கவுர்.

image

இன்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கியதன் மூலம் ரோகித் சர்மா சாதனையை தகர்த்து முதலிடம் பிடித்துள்ளார் ஹர்மன்ப்ரீத் கவுர். மொத்தம் 149 சர்வதேச டி20 போட்டிகளில் அவர் விளையாடி சாதனைப் படைத்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு முதல் டி20 போட்டியில் விளையாடி வரும் ஹர்மன்ப்ரீத் கவுர் இதுவரை 2993 ரன்கள் எடுத்துள்ளார். 

ஹர்மன்ப்ரீத் கவுர், ரோகித் சர்மாவை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து வீராங்கனையான சூசி பேட்ஸ் 142 போட்டிகள் உடனும், இங்கிலாந்து வீராங்கனை டேனில் வியாட் 141 போட்டிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/7ALm6PQ
via

No comments