Breaking News

ஈரோடு கிழக்கு: ``ஈஸ்ட் இந்தியா கம்பெனி சென்று, நார்த் இந்தியா கம்பெனி வந்துள்ளது" - கமல்ஹாசன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர், ``நான் வேறொரு கட்சியின் சின்னத்துக்கு வாக்கு கேட்டு வருவதை யாரும் பார்த்திருக்க முடியாது. இதை ஏன் செய்கிறேன் என்பதற்கான பதிலை தயாராக வைத்துள்ளேன். ஆபத்து காலத்தில் கட்சி, சின்னம், கொடிகளைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் இவை அனைத்துக்கும் மேலானது தேச நலன் எனும்போது, யாருடன் கை கோர்க்க வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஈஸ்ட் இந்தியா கம்பெனி சென்று தற்போது நார்த் இந்தியா கம்பெனி வந்துள்ளது. இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

பிரசாரம்

ஜனநாயகத்தின் வழியாகவும் சர்வாதிகாரம் நம்மை ஆட்கொள்ளும் என்பதற்கு உலகம் முழுவதும் பல சான்றுகள் உள்ளன. அது இன்று இந்தியாவிலும் நிகழ்ந்து கொண்டுள்ளது. இதைத் தடுப்பதற்கான அச்சாரமாகவே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்துள்ளேன். அதையும் மீறி அவரும் பெரியாரின் பேரன், நானும் பெரியாரின் பேரன்தான் என்ற உறவு எங்களுக்குள் உள்ளது.

அதுமட்டுமில்லாமல், விட்டுப்போன ஒரு கடமையைச் செய்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன். விஸ்வரூபம் என்ற திரைப்படத்தை நான் எடுத்தபோது, என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்தார் ஒரு அம்மையார். அந்த காலகட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் என்னை தொலைபேசியில் அழைத்து, "பயப்படாதீர்கள் உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?” என்று என்னிடம் கேட்டனர்.

கமல்ஹாசன்

அப்போது இருவரிடமும், ``வேண்டாம் ஐயா... இது நாட்டு பிரச்னை இல்லை. என் சொந்த பிரச்னை, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேன்" . அந்தப் பிரச்னையில் இருந்து மீண்டு என் கடனையெல்லாம் முடித்துவிட்டு, தற்போது எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இங்கு வந்துள்ளேன்.

இந்தக் கூட்டத்துடன் நிற்பது எனக்குப் பெருமையாக உள்ளது. நமக்குள் இருக்கும் விமர்சனங்களை பிறகு பார்த்துக் கொள்வோம். மய்யம் என்பது எல்லா பிரச்னைகளுக்கும் நடுவில் நிற்பது என்று அர்த்தமில்லை. பிரச்னை என்று வரும்போது மக்களுக்கு எது நியாயமோ அந்தப் பக்கம் நின்று பேசுவதுதான் மக்கள் நீதி மய்யத்தின் லட்சியம். அதைத்தான் நான் செய்துகொண்டு வருகிறேன். இங்கு வருவதற்கு முன் பலமுறை யோசித்துவிட்டு சரியான பாதைதான் என்று வந்துள்ளேன். என் பயணத்தைப் பாருங்கள் என் பாதை புரியும்” என்றார்.



from India News https://ift.tt/Rs2tfed

No comments